×

புதுகை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தங்கரை விடுதி ஊராட்சியில் கீழவாண்டான் விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள வயல்வெளியில் விஜய ரகுநாத ராயர் தொண்டைமான் மன்னரால் விஜயரகுநாத ராய சமுத்திரம் எனும் பாசனத்திற்கான நீர் நிலையை ஏற்படுத்தி அதற்கான நீர்வழிப்போக்கு அமைப்பான கலிங்கி அமைத்தது குறித்த தகவல் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிரங்கன், முன்னாள் ஆணையர் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கல்வெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து மணிகண்டன்  கூறியதாவது: இக்கல்வெட்டு  தொண்டைமான் மன்னர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக கிடைத்துள்ளது. கல்வெட்டில் விஜயரெகுநாத ராய சமுத்திரம் அக்ரஹாரத்தில் கலிங்கில் என்ற தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ்ப்பகுதியில் ஏர் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள துவார் கிராமத்தில் அக்ரஹாரம் என்ற குடியிருப்பு பகுதி இருப்பது குறித்து மக்கள் செவிவழி செய்தியாக தெரிவிக்கின்றனர். இந்த தகவல் மூலம் இவ்விடத்தின் அருகாமையில் இந்த கலிங்கி அமைக்கப்பட்டு அக்ரஹாரத்து கலிங்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கருதலாம். தொண்டைமான் வம்சாவளியை சேர்ந்த 2வது மன்னர் விஜய ரகுநாத ராயர் தொண்டைமான் ஆட்சிக்காலமான 1730 முதல் 1769-ம் ஆண்டிற்குள்ளாக இந்த பாசன நீர் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மன்னரின் பெயரிலேயே விஜயரகுநாத ராய சமுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டு அர்ப்பணித்து இருப்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. இதுபோன்று விவசாயி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எந்த பகுதியிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்….

The post புதுகை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudugai ,Pudukottai ,Keezhavandan Inn ,Athangarai Inn Panchayat ,Kandarvakottai Taluk ,Pudukottai District ,Vijaya ,Puducherry ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு...