×

திருநள்ளாறு கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உலகப்புகழ் மிக்க ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த 7ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.  

இன்று அதிகாலை 8ம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து 75 புனித நீர் கொண்ட யாக குண்ட கலசங்கள் கோபுரங்களுக்கு மேலதாளம் முழங்க கொண்டுசெல்லப்பட்டது. அதன்பின்னர் 9.30 மணி அளவில் மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னதி விமானம், சனிபகவான் சன்னதி, பிரணாம்பிகை, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சொர்ணாம்பிகை சன்னதிகள், 2 ராஜகோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேதங்கள், மந்திரங்கள் முழங்க அனைத்து கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட காரைக்கால் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்கள் மீதும் ஸ்பிரே மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.  

120 மூலிகைகள் கலந்த புனித நீர்

2 ராஜகோபுரம் உள்பட 6 பிராதான சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற 75 யாக குண்ட கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த கலசங்களில் 120 மூலிகைகள் கலக்கப்பட்டுள்ளது. இந்த புனித நீர் மேல பட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. புனித நீர் தங்கள் மீது படுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றி காத்திருந்தனர். அவர்கள் மீது ஸ்பிரே மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

3 டன் பூக்களால் சுவாமிகள் அலங்காரம்

திருநள்ளாறு கோயில் மூலவர் தர்பாரண்யேஸ்வரர் சன்னதி,  பிரணாம்பிகை சன்னதி, சனிபகவான் சன்னதி, விநாயகர், சண்டிகேஸ்வரர், சொர்ணாம்பிககை சன்னதிகள் உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெங்களூருவிலிருந்து 3 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து சுவாமி சன்னதிகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Tags : devotees ,Tirunallar temple ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்