×

திருமணயோகம் தரும் திரவுபதி அம்மன்

புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள முருங்கப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயம். இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமான், மாரியம்மன், சந்துவெளி மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி, அய்யனார், துலுக்கானத்தம்மன், எல்லை காளியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். சுமார் 34 அடி உயர கோபுரம் ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட திரவுபதி அமமன் கோயில் திவான் பரம்பரையால் பராமரிக்கப்பட்டு வந்தது. பின்னர் 1916ம் ஆண்டு முருங்கப்பாக்கம் வாழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருவிழாக்கள்

இக்கோயிலில் தீமிதிவிழா, மயானக்கொள்ளை, ஆடித்திருவிழா, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, விஜயதசமி, பங்குனி உத்திரம், காவடி உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருக்கோயில் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். காலை 6.30 மணி, மாலை 7.30 மணிக்குள் பூஜை, அபிஷேகம் நடைபெறும்.

திருமண யோகம்

முருங்கப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் திரவுபதி அம்மனை தரிசனம் செய்து மனமுருக வேண்டினால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். அதேபோல் குழந்தையின்மை, தொழில்முடக்கம், மனசஞ்சலம், குடும்பத்தில் அமைதியின்மை, நோய் பாதிப்பு, கல்வி, பொருளாதாரத்தில் தடை போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நன்றிக்கடனை தீர்க்க காணிக்கை பொருட்கள் செலுத்தி வழிபடுகின்றனர். மக்களைக்காக்கும் காவல் தெய்வமாகவும் திரவுபதி அம்மன் திகழ்கிறாள்.

செல்வது எப்படி?

சென்னை கடலூர் கிழக்கு கடற்கரைசாலையில் புதுச்சேரியை அடுத்துள்ள முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. எப்போதும் பேருந்து வசதி உண்டு.

Tags : Draupadi Amman ,
× RELATED திருவாடானை அம்மன் கோயில் விழாவில் அரவான் படுகளம் நிகழ்வு