×

திருநாங்கூரில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ ஸ்தலங்களில், 11 பெருமாள் கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மணிமாடக்கோயில் எனும்  நாராயண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 பெருமாள் கோயில்களின் உற்சவர்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கருடசேவை உற்சவத்தையொட்டி 4ம் தேதி அதிகாலை திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் புறப்பாடாகி குறவளுர், குறையலூர், மங்கைமடம், காவாளம்பாடி, திருமேனிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய பெருமாள் கோயில்களுக்கு சென்று, பெருமாள்களுக்கு அழைப்பு விடுத்து, பின்னர் நைனிபுரம் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமங்கையாழ்வாருக்கு தீர்த்தவாரி மற்றும் மஞ்சக்குளி உற்சவமும் நடைபெற்றது.

பிப்ரவரி 5ம் தேதி நாராயண பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன் பெருமாள், வரதராஜப்பெருமாள், வைகுந்தநாதப்பெருமாள், மாதவன்பெருமாள், பார்த்தசாரதிபெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய கோயில்களுக்கு திருமங்கையாழ்வார் எழுந்தருளி அழைப்பு விடுத்து அன்றைய தினம் பிற்பகலிலிருந்து 11 பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக்கோயில் முன்பு எழுந்தருளினர். பெருமாள்களை திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடி கோயில் வாசலில் நின்று வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், திருமங்கையாழ்வார் குமுதவள்ளி நாச்சியாருடன் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினர்.  இதைத்தொடர்ந்து, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தாசினம் செய்தனர். இதனை தொடர்ந்து 11 பெருமாள்களும் வீதியுலா சென்றனர். இதில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, நாகை எஸ்.பி.விஜயகுமார், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அன்பு, பொறியாளர் மாமல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : devotees ,Millions ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை