×

கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரமோற்சவ விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் தேதி கருட சேவை நடைபெற்றது. 4ம் தேதி தை அமாவாசையையொட்டி உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா இன்று அதிகாலை நடந்தது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அதிகாலை 4.45 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீரராகவ பெருமாள் எழுந்தருளிய தேர், அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

வடக்கு ராஜ வீதி, பஜார் தெரு, மோதிலால் தெரு வழியாக வீரராகவர், தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். பலர் தேர் மீது உப்பு, மிளகு செலுத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பகல் 11.30 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. அங்கிருந்து இரவு 7 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் கோயிலுக்குள் செல்கிறார். தேர் திருவிழாவை காண திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள், பக்தர்களுக்கு மோர், அன்னதானம் வழங்கினர். திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Govinda Govinda Kosham Kedanga Tiruvallur Veeragara Perumal Temple Chariot Festival ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?