×

ஆங்கிலேய அதிகாரி கட்டிய ஆஞ்சநேயர் கோயில்

சுமார் 120  வருடங்களுக்கு முன், ஒரு நாள்  ரயிலில் பயணி  ஒருவர், திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையை தூக்க முடியாதபடி தூக்கிக் கொண்டு நடந்தார்.  ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை அதிகம் உள்ளதாகக் கருதி அனைத்துப்  பொருட்களையும்  எடை போட்டு பயணிகளுக்கு அனுமதிக்கப்படும்  அளவை விட அதிகமாக உள்ளதால்  அபராதப் பணம் (லக்கேஜ் சார்ஜ்) கட்டும்படி கூறியிருக்கிறார். பயணியோ, தன்னிடம் போதுமான  பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். , பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல் என்று சொல்லி மூட்டையை உள்ளே வாங்கி வைத்து விட்டார். பணம் எடுத்துவரப் போனவர்,  திரும்பி வரவில்லை.   எவரும் வந்து வாங்காமல், இருந்த மூட்டை அசைவதாக சிலருக்குத் தெரிந்ததால்  அந்த  மூட்டையைப் பிரித்துப் பார்த்தனர்.  

அதில் அழகான ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பத்தினைக் கண்டனர். வியப்புற்று பார்த்தவர்கள், அந்த சிற்பத்தை பணிந்து வணங்கிய ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிளாட் பாரத்தில் அதை ஒரு சிறு மேடையில்  ஒரு சிறிய  கோயில் மாதிரி சிறிய அளவில் கட்டி வழிபடத் துவங்கினர். திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயிலில் குடி கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்புரிந்து கொண்டிருந்தார். 1928ம் ஆண்டு நாகப்பட்டினம் ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டு பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக பதவி வகித்த  திரு. ஆர்ம்ஸ்பி என்ற வெள்ளைக்காரர். ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கோயில் இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை அன்று  பணி பாதியில் நின்றது. அன்றிரவு, ஆர்ம்ஸ்பி  கனவில்  அந்த விக்கிரகம் இருந்த இடத்திற்கு  அருகில் இரண்டு ரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார்.    

காலையில்  வந்து பார்க்க  அவர் கனவில் கண்ட காட்சிப்படியே நடந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தார். இந்த விபத்தால் எந்த உயிருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால், ரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப்பட்டது. பலரைக் கலந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த ரயில் நிலையத்திற்கு அருகிலேயே கல்லுக்குழி என்று சொல்லப்படும் ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில்   வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தார். கோயிலை கட்டியதே அந்த அதிகாரிதான் என்கிறார்கள்.

09.11.1929 ல் கோயில் முழுவதுமாக உருவாகி,  சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட் பாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்றி  கட்டப்பட்ட  அக்கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  அரசு சட்டத்தினையும் உதாசீனம் செய்யாமல் அந்த இடத்தற்கு லைசன்ஸ் கட்டணமாக ஒரு ரூபாய் விதித்தார். தற்போது  கோயில் இருக்கும் அந்த இடத்திற்காக லைசென்ஸ் கட்டணம் ரூபாய் 500 என உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வெறும் சந்நதியாகக் கல்லுக்குழியில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்த அந்த சிறிய சந்நதி நாளடைவில் பொது மக்கள் வருகை, பங்களிப்பு ஆகியவற்றால் வளரத் துவங்கியது. கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபத்தில் அமைந்துள்ள துவஜ ஸ்தம்பம் அரசமரமும் வேப்ப மரமும் இணைந்திருக்க அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும் சிறிய அளவில் தனித்தனி சந்நதிகள்.

அர்த்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறிய கருவறையில்  கல்லுக்குழி ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். சுமார் ஓரடி உயரமேயுள்ள புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் இவரது இடது பாதம் வடக்கு நோக்கியும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இவரது கால் ஓங்கார வடிவில் வடக்கு திசை நோக்கி வளைந்திருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.  இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கும் இவரது வலது கரம் பக்தர்களுக்கு ஆசி
வழங்கும் நிலையில் அபய ஹஸ்தத்தில் உள்ளது. இவரது திருமுகம் வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்குள்   உள்ள உற்சவர் திருமேனி, உயரம் சுமார் இரண்டடியே இருக்கும். சாதாரணமாக வெள்ளிக் கவசம் அணிந்து இடது கையில் கதையுடனும் வலதுகரத்தில் ஆசி வழங்கும் நிலையிலும் காட்சி தருகிறார்.  

கோயில் ராஜ கோபுரத்தில், ராமாயணத்தில் வரும் காட்சிகளில் சில சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கருவறையின், வலது புறம் கிழக்கு நோக்கி அருள்புரியும் பதினாறு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார்க்கு ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர தினத்தன்று சுதர்சன ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவரின் பின்புறம் அருள்மிகு யோக நரசிம்மர் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். ஆஞ்சநேயர் சந்நதிக்கு இடது புறத்தில் பாண்டுரங்கனுக்கு என தனிச்சந்நதி  அமைக்கப்பட்டு உள்ளது. இவரது சந்நதிக்கு அருகில் பெரிய ஆலமரம் காணப்படுகிறது. பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த ஆலமரம் மிகவும் பழமையானது எனப்படுகிறது. 2ஆம் எண் பிளாட்பாரத்திலிருந்து ஆஞ்சனேயர் இங்கு வந்து பிரதிஷ்டை ஆகும் முன்பிருந்தே இந்த மரம் இங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதைத்தவிர யோக ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நவக்கிரகம், நாகர் போன்ற சந்நதிகள்  அமைந்துள்ள தலம் இதுவாகும். வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் ’பாஸ் போர்ட்,விசா போன்றவை கிடைப்பதில் சிக்கல் உள்ளவர்கள் இவரை மனமாற வேண்டினால்  அந்தப் பிரார்த்தனை நிறைவேறும். இவரது அருளால் சிங்கபூர் சென்ற  ஒரு பக்தர் அவரது வளர்ச்சிக்குக் காரணமான ஆஞ்சனேயருக்கு தங்கக்கவசம் செய்து சமர்ப்பித்துள்ளார், இந்த ஆஞ்சநேயர், குபேர திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வ வளத்தை பக்தர்களுக்கு நிறைந்து அளிப்பார் என்பது சொல்வழக்காகும். சித்திரை மாதத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஒன்பது நாள்  மண்டப அலங்காரமும், பத்தாம் நாள் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தவிர  நவராத்திரி, அனுமத் ஜெயந்தி
போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.   
    
திருச்சி ஜங்ஷன் சுரங்கப் பாதை வழியாகவும், திருச்சி மன்னார்புரம் ரோடில் கல்லுக்குழி வழியாகவும்,  தலைமை அஞ்சலகம் மேம்பாலம் ரோடில் இருந்து  சேது ராமலிங்கம் பிள்ளை காலனி வழியாகவும் கோயிலுக்குச் செல்லலாம் இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். திருச்சி மாநகர் வளர்ச்சியில் பங்கு கொண்டு பலன் அளித்த ப்ளாட்பார ஆஞ்சநேயர் எங்கிருந்து வந்தார் என அறிய முடியவில்லை. வளர்ச்சிக்கு வழி தந்து இன்றும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயரை  தரிசனம் செய்து பலன் பெறலாமே!

Tags : officer ,British ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...