×

வேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி

பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் முக்கிய பிரதான ஸ்தலமாக சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சோழநாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்சஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. சங்கரன்கோவிலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளது. இதில் நிலம் ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கர லிங்க சுவாமி கோவிலும், நீர் ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும், நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று ஸ்தலமாக தென்மலை திரிபுரநாத சுவாமி கோவிலும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது. இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

அன்னை கோமதி தன்னை நாடி வரும் பக்தர்களின் தீராத நோய்களை புற்று மண்ணால் தீர்த்து வைக்கும் மகிமை உடையவள் என்பதனை அறிந்து இத்திருத்தலத்தை விட்டுப் பிரிய மனமின்றி இங்கேயே தங்கினார். சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே ‘‘கோமதி’’ என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்று இவளுக்கு பெயர் உண்டு. ‘‘ஆ’’ என்றாலும் ‘‘பசு’’ தான். ‘‘பசுக்களை உடையவள்’’ என்று பொருளுண்டு. திங்கள்கிழமைகளில் அம்பாளுக்கு மலர், பாவாடை, வெள்ளிக் கிழமைகளில் தங்க பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் மாவிளக்கில், நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். அம்பாள் கோயில் களில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ‘‘ஆக்ஞா சக்ரம்’’ என்கின்றனர்.

மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இச்சக்கரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நிவர்த்தி யாவதாக நம்பிக்கை. வேலப்ப தேசிகசுவாமிகள் அத்துடன் தன்னை வந்தடைந்த சீடர்களுக்கு பிறவி நோய் மட்டுமின்றி தீராத பெரியவியாதிகளையும் நீக்கியருளினார். இதனால் வேலப்ப தேசிக சுவாமிகளின் புகழ் தென்பாண்டிமண்டலம் முழுவதும் பரவியது. அக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், நெற்கட்டும் செவல் குறுநில மன்னருமாகிய சிவஞான பூலித்தேவர் வேலப்பதேசிக சுவாமியை பணிந்து தீராததன் வயிற்று நோய் நீங்கப் பெற்றார். மடத்தில் சிவபூஜை ஆகியவை நடைபெற விளைநிலத்தை தானமாக வழங்கினார். வேலப்ப தேசிக சுவாமிகள் பிற்காலத்தில் அனைத்து மக்களும் நோயின்றி வாழவும், அன்னை ஸ்ரீகோமதியின் அருள்பெறவும் சங்கரநாராயணர் திருக்கோயிலில் கோமதியம்மாள் சன்னதி முன்பு சக்கரத்தை பதித்து அருளினார். இன்றும் சங்கரன்கோவில் வரும் பக்தர்கள் ஸ்ரீசக்கரகுழியில் அமர்ந்து வழிபடுகின்றனர்.

Tags : Annai Gomati ,
× RELATED வேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி