×

தை அமாவாசை சிறப்புகள்

தை மாத உத்தராயணம் மங்கல காரியங்கள் செய்ய  உகந்த காலம். தை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள். அதனால் அன்று அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தால் உயர்வான பலன் நமக்குக் கிடைக்கும். தை அமாவாசையன்று வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் உள்ள கடலில் நீராடல், பாபநாச பாண தீர்த்தம், குற்றால அருவி, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றுப் படித்துறைகளில் நீராடல். இவற்றுள் ஏதாவதொன்றில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரலாம்.

திருக்கடையூர் உற்சவம்

திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் அபிராமி அமாவாசையை பௌர்ணமி தினமாக்கிய நிகழ்வை ஆண்டு தோறும் தை அமாவாசையன்று விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
                                                                   
தேனும், தினை மாவும்!

திருவள்ளுர் வீரராகவப் பெருமாள் தை அமாவாசையன்று சாலி ஹோத்திர மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். அதனால் இத்தலம் அமாவாசைத்தலம். தை அமாவாசையன்று இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகம். அனைவருக்கும் தேனும், தினை மாவும் பிரசாதமாகத் தருவார்கள்.

பச்சிலை பிரசாதம்!


கோவையிலுள்ள மாசாணியம்மனுக்கு தை அமாவாசையன்று பூஜை செய்த பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்குத் தருவார்கள். இது வயிற்றுப் பிணி தீர்க்கும் மாமருந்தாகும்.
                                                                  
மாற்றுத் திருக்கோலம்

திருஇந்தளூர் பரிமள ரங்க நாதருக்கு தை அமாவாசையன்று தாயாரைப் போல அலங்காரமும், அன்னை சந்திர சாப விமோசன வல்லிக்கு பெருமாளைப் போல அலங்காரமும் செய்வார்கள். இதற்கு ‘மாற்றுத் திருக்கோலம்’ எனப்பெயர்.

திருமூர்த்தி மலையில் தை அமாவாசை!

உடுமலைக்கு அருகேயுள்ளது திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில். இங்கு  சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமர்ந்து அருட்பாலிக்கிறார்கள். தை பட்டம் சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகள் அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு சாகுபடி பணிகளைத் துவங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நெ.ராமன்

Tags : Daisy ,moon ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...