×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

119. சுசிச்ரவஸே நமஹ    (Suchishravase namaha)    

சுமாலி என்ற வேடுவரின் மகன் ரத்னாகரன். அவன் அம்பெய்யும் கலையில் தலைசிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவனுக்குத் திருமணமாகி மனைவி மக்கள் எனப் பெரிய குடும்பம் உருவானபின், குடும்பம் நடத்துவதற்குப் போதுமான அளவு வருமானம் வேடுவத் தொழிலில் கிடைக்காதபடியால், வழிப்பறி கொள்ளைக்காரனாக மாறினான். சில சமயங்களில் அவன் வழிப்பறி செய்யும் போது, தங்கள் உடைமைகளை வழங்க மறுக்கும் மக்களைக் கொல்லவும் துணிந்து விட்டான்.

ஒருநாள் ரத்னாகரன் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் ஒரு துறவி அந்த வழியாக வருவதைக் கண்டான். அவர் கையில் வீணை இருப்பதையும் கண்டான். வீணைக்குள் பொற்காசுகளை அந்தத் துறவி ஒளித்து வைத்திருப்பதாகக் கருதிய ரத்னாகரன், கத்தியைக் காட்டி அவரை வழிமறித்து அவரது உடைமைகள் அனைத்தையும் தன்னிடம் தந்து விட்டுச் செல்லுமாறு கூறினான். ஆனால் அவனையோ அவனது கத்தியையோ பார்த்து அந்தத் துறவி அஞ்சவில்லை. “இந்த வீணை மட்டும் தான் என்னுடைய உடைமை. வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளப்பா!” என்று கூறினார்.

தனது கத்திக்கு அஞ்சாமல் நின்றபடியால், இவர் சாதாரண துறவியாக இருக்க வாய்ப்பில்லை, தன்னை கைது செய்வதற்காக மன்னன் அனுப்பிய காவலாளியாக இருக்கக் கூடும் என்று கருதிய ரத்னாகரன், அவரைக் கத்தியால் குத்திக் கொல்லப் போனான். அப்போது அவனைத் தடுத்த துறவி, “நீ என்னைக் கொல்! நான் தடுக்கவில்லை. ஆனால் அதற்குமுன் ஒரு கேள்வி. உன் குடும்பத்தை வாழ்விக்கத் தானே நீ கொள்ளை அடிக்கிறாய்? நீ கொள்ளை அடித்துக் கொண்டு போய்க் கொடுக்கும் செல்வத்தில் பங்கு கொள்ளும் உனது குடும்பத்தார், இதனால் ஏற்படும் பாபத்தில் பங்கு கொள்வார்களா? இதற்கு விடையளித்து விட்டு என்னைக் கொல்!” என்றார்.

“நீ இங்கேயே இரு! நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடமே இக்கேள்வியைக் கேட்டு அதற்கான விடையோடு வருகிறேன்!” என்று சொல்லி அவரை அங்கிருந்த மரத்துடன் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றான் ரத்னாகரன். முதலில் தன் பெற்றோரிடம், “நான் இத்தனை நாள் வழிப்பறி செய்து தான் செல்வம் கொண்டு வந்தேன். அதில் பங்கு கொண்ட நீங்கள் அதனால் உண்டாகும் பாபத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான். “அதெப்படி? பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை! நீ அதைச் செய்தாய். அதனால் பாபங்களில் எங்களுக்குப் பங்கு கிடையாது. முழுவதும் உன்னையே சேரும்!” என்றார்கள்.

தன் மனைவியிடம் கேட்டபோது, “சாஸ்திரங்கள் கூறுவது என்னவென்றால், கணவன் செய்யும் அனைத்துப் புண்ணியங்களிலும் மனைவிக்குப் பாதி பங்குண்டு. ஆனால் கணவன் செய்யும் பாபங்களில் மனைவிக்குப் பங்கில்லை. மனைவி செய்யும் புண்ணியங்களில் கணவனுக்குப் பங்கில்லை. ஆனால் அவள் செய்யும் பாபங்களில் பாதி பங்கு கணவனுக்கு உண்டு!” என்றாள். “என் குழந்தைகளாவது என் பாபங்களில் பங்கு கொள்வார்களா?” என ரத்னாகரன் புலம்பிய போது, அவன் மனைவி, “இல்லை! பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்யும் பாபங்களும் உங்களையே சேருமே ஒழிய, உங்கள் பாபங்கள் அவர்களை இப்போது பாதிக்காது!” என்றாள்.

வெறுத்துப் போய் துறவியிடம் வந்தான் ரத்னாகரன். அவரது கால்களில் விழுந்து நடந்தவற்றைக் கூறி அழுதான். “தாங்கள் யார்?” என்று கேட்டான். “நான் தான் நாரதன்!” என்றார் அந்தத் துறவி. “நான் இத்தனை நாள் பாபங்களே செய்து பாபியாக வாழ்ந்து விட்டேன். இதிலிருந்து மீள வழி கூறுங்கள்!” என்று வேண்டினான். அப்போது அவர், “ராம நாமத்தை நீ ஜபம் செய்! அது உனது அனைத்துப் பாபங்களையும் போக்கும்!” என்றார். ஆனால் அவனது வாயில் ராம நாமம் வரவில்லை.

அருகில் இருந்த மரத்தைக் காட்டிய நாரதர், “இதன் பெயர் என்ன?” என்று கேட்டார். “மரா” என்றான். “இதை ஜபம் செய்!” என்று சொல்லி விட்டு நாரதர் புறப்பட்டார். ‘மரா’ ‘மரா’ ‘மரா’ என்று மரத்தை நினைத்தபடி ரத்னாகரன் ஜபம் செய்தான். அவனைச் சுற்றி ஒரு புற்றே உண்டாகிவிட்டது. அதைக் கவனியாமல் ஜபம் செய்த அவனுக்கு அந்த மரத்தில் ராமன் காட்சியளித்தான். பின்னாளில் அவர் வால்மீகி என்ற பெரிய ரிஷியாக உருவாகி நமக்கு ராமாயணத்தை அளித்தார்.

இதைக் கைலாயத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, சிவபெருமானிடம், “அவர் ‘மரா’ ‘மரா’ என்று தானே ஜபித்தார். எப்படி ராமனுடைய தரிசனம் அவர்க்குக் கிட்டியது?” என்று கேட்டாள். அதற்குப் பரமசிவன், “தன்னுடைய அடியார்கள் எத்தகைய வார்த்தைகளைச் சொன்னாலும் அதில் உள்ள மங்களமான விஷயங்களை மட்டும் கேட்பவராகத் திகழ்கிறார் திருமால். இவன் ‘மரா’ ‘மரா’ என்றாலும், அதை ‘ராம’ ‘ராம’ எனச் சொல்வதாக ஏற்று ராமபிரான் அவனுக்குக் காட்சியளித்தார். ‘சுசி’ என்றால் மங்களகரமான என்று பொருள். ‘ச்ரவா:’ என்றால் கேட்பவன். அடியார்கள் பேசும் வார்த்தைகளில் உள்ள அமங்களமான அம்சங்களை விலக்கி மங்களமானவற்றை மட்டும் கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதால் திருமால் ‘சுசிச்ரவா:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 119-வது திருநாமம்!” என்றார்.

“சுசிச்ரவஸே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, அன்னப்பறவையைப் போல் சாரமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் உயரிய
பண்பைத் திருமால் அருள்வார்.

120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)

திருவரங்கத்தில் நம்பிள்ளை என்னும் ஆச்சாரியர், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாம் பத்தின் எட்டாம் திருவாய்மொழியின் முதல் பாசுரம்,

“ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!”

என்பது. இப்பாசுரத்தின் பொருளை விளக்குகையில், நம்பிள்ளை அங்கு கூடியிருந்தோரைப் பார்த்து, “இப்பாசுரத்தில் ஆழ்வார் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆராவமுதே! - திகட்டாத அமுதமே! என்று அழைக்கிறார். ஆனால் யாருக்கு ஆராவமுது என்பதைக் குறிப்பிடவே இல்லையே. ‘தேவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ, ‘அடியவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ, ‘அமரர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். ‘ஆராவமுதே!’ என்று மட்டும் அழைத்தால் யாருக்கு ஆராவமுது?” என்று கேட்டார்.

அமர்ந்திருந்த அடியவர்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்தித்தனர். சிறிது நேரம் பொறுத்த நம்பிள்ளை, “வேறு ஒன்றுமில்லை, பிறர்க்கு ஆராவமுதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், பெருமாள் தனக்கும் ஆராவமுதமாகத் திகழ்வதால் தான் இன்னார்க்கு ஆராவமுது எனக் குறிப்பிடாமல், வெறுமனே ‘ஆராவமுதே!’ என
ஆழ்வார் அழைக்கிறார்!” என்றார்.

இதை மேலும் விளக்கும் விதமாக நம்பிள்ளை அழகான எடுத்துக்காட்டும் கூறினார். “கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் உற்சவ மூர்த்தியான சார்ங்கபாணிப் பெருமாள், ஆராவமுதாக இருக்கும் தனது திருமேனி வடிவழகைத் தானே பல கோணங்களிலிருந்து அனுபவிக்க விழைந்தார். தன் முன்னழகை அனுபவிப்பதற்காகச் சந்நதிக்கு முன்னே கருடனாக வடிவெடுத்து அவரே அமர்ந்து கொண்டார். தனது பக்கவாட்டின் அழகை ரசிப்பதற்காக ஸ்ரீதேவி, பூதேவியாக வடிவெடுத்து இருபுறங்களிலும் அமர்ந்து கொண்டார். தனது பின்னழகை அனுபவிக்க அவரே மூலவராக ஆதிசேஷனில் பள்ளி கொண்டார். இப்படி அனைத்துத் திசைகளிலிருந்தும் தன்னுடைய அழகைச் சார்ங்கபாணிப் பெருமாள் அனுபவிக்கிறார். அவராலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி ஆராத அமுதாக அவரது அழகு விளங்குகிறது!” என்றார்.

அப்போது ஒரு பக்தர் எழுந்திருந்து, “சார்ங்கபாணி கோயிலில் மூலவர் திருமழிசைப் பிரானுக்காக ஆதிசேஷனில் இருந்து சற்றே எழுந்தபடி காட்சி தருகிறார் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு விடையளித்த நம்பிள்ளை, “ஆம். அதிலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளது! உற்சவ மூர்த்தியின் பின்னழகாகிய அமுதைப் பருகிக் கொண்டிருந்த மூலவருக்கு உற்சவரின் முன்னழகைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதற்கு என்ன வழி என யோசித்துக் கொண்டிருந்தார். திருமழிசைப் பிரான் குடந்தைக்கு வந்து பெருமாளைப் பார்த்து, கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என அழைக்கவே, அவருக்காக எழுந்தது போல எழுந்த மூலவர், உற்சவரின் முன்னழகை ரசிக்கும் நோக்குடன் எட்டிப் பார்த்தபடி உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ளார்! தனது அழகாகிய ஆராவமுதத்தில் ஆழ்ந்தபடியால் இன்றும் ஆராவமுதாழ்வான் என்றே அவர் அழைக்கப்படுகிறார்!” என்று கூறினார்.

இக்கருத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, ஆராவமுதப் பெருமாள் குறித்து எழுதிய ஒரு ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.
“சேஷே சயாநஸ்தவ ப்ருஷ்டபாகே
த்வமேவ பூயஸ்தநு ரம்யபாவம் |
ஆலோகிதும் ஸாதரம் ஈஷதேவம்
உத்தாநபாவம் தநுஷே முகேந ||”

என்று. இவ்வாறு எம்பெருமானுடைய அழகு பிறரை மட்டுமல்ல, எம்பெருமானையே மயக்கும்படியான ஆராவமுதமாக விளங்குகிறது. அத்தகைய திகட்டாத அமுதம் போன்ற அழகுடன் விளங்குவதால், திருமால் ‘அம்ருதஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 120-வது திருநாமம்.“அம்ருதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஒவ்வொரு நாளும் அமுதம் போலத் தித்திக்கும்படி எம்பெருமான் அருள்புரிவான்.

121. சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ (Shaashvathassthaanavey namaha)

கச்யபப் பிரஜாபதிக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள். ஒரு பந்தயத்தில் கத்ருவிடம் தோற்ற வினதை, அதனால் அவளுக்கு அடிமையானாள். அந்த வினதையின் மகனான கருடன், தன்னுடைய தாயை மீட்க என்ன வழி எனக் கத்ருவிடமும் அவளது பிள்ளைகளான நாகப் பாம்புகளிடமும் கேட்டார். “நீ பெரிய பலசாலியாக இருக்கிறாயே! நீ தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடு! அவ்வாறு நீ தந்தால் உன் தாயை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கிறோம்!” என்று அவர்கள் கூறினார்கள்.

உடனே தேவலோகத்தை நோக்கிப் புறப்பட்டார் கருடன். அமுதத்தை எடுக்கச் சென்ற கருடனை எதிர்த்துத் தேவர்கள் அனைவரும் போரிட்டார்கள். அவர்கள் அனைவரையும் தனி ஒருவனாக எதிர்கொண்ட கருடன் அந்தக் கடும்போரில் வெற்றி பெற்றார். இறுதியாக இந்திரன் கருடனைத் தாக்க வந்தான். அவனையும் வீழ்த்திவிட்டு அமுதத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வந்தார் கருடன்.

வரும் வழியில் கருடனுக்கு ஒரு சிந்தனை. “அமுதம் அமுதம் என எல்லோரும் கொண்டாடுகிறார்களே! அதைப் பெறுவதற்கு நாமும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டு யுத்தம் எல்லாம் செய்திருக்கிறோமே! அதனால் கத்ருவிடம் கொடுப்பதற்கு முன் அந்த அமுதம் எப்படி இருக்கும் என நாம் சுவைத்துப் பார்த்துவிட வேண்டும்!” என ஆவல் கொண்டார் கருடன்.

அப்போது ஆயர்பாடியை அடைந்தார் கருடன். அங்கே யமுனைக் கரையில் உள்ள கடம்ப மரம் ஒன்றில் அமர்ந்து அமுதின் சிறு பகுதியை எடுத்துச் சுவைத்தார். (அமுதத்தை வியாதி உள்ளவர்கள் உண்டால் இனிக்குமாம். நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்கள் உண்டால் கசக்குமாம்.) கருடனுக்கு அமுதம் பாகற்காயை விடக் கசப்பாக இருந்தது. அப்படியே உமிழ்ந்துவிட்டு நேராக அதைக் கத்ருவிடமும் பாம்புகளிடமும் கொடுத்து விட்டுத் தன் தாயை மீட்டார்.

அதன்பின் தன் தாயிடம், “தாயே! உங்களை மீட்பதற்காக அமுதத்தைக் கொண்டு வந்தேன் அல்லவா? வரும் வழியில் ஒரு மரத்தில் அமர்ந்து அந்த அமுதைச் சுவைத்துப் பார்த்தேன். அது வெறும் கசப்புச்சாறு தான். அதில் எந்தச் சுவையும் இல்லை. இந்த கசப்புச்சாற்றுக்காகவா இவ்வளவு சிரமப்பட்டு, தேவர்களுடன் போரிட்டு, இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும்? நான் மேற்கொண்ட முயற்சிகளோடு ஒப்பிடும் போது இந்த அமுதின் சுவை ஒன்றுமே இல்லை!” என்று மனம் நொந்து கூறினார் கருடன்.

அப்போது “வைனதேயா!” என்றொரு குரல். திரும்பிப் பார்த்தார் கருடன். கருடனின் தந்தையான கச்யபப் பிரஜாபதி அங்கே நின்று கொண்டிருந்தார். “மகனே! போரிட்டு, முயற்சி செய்து பெற்ற அமுதம் இனிமையாக இல்லை என்று வருந்துகிறாயா? நான் ஓர் அமுதத்தைக் காட்டுகிறேன். அதைப் பெற நீ போரிடவும் வேண்டாம், முயற்சி செய்யவும் வேண்டாம். அதை நாவால் சுவைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. கண்களால் பருகினாலே போதும். திகட்டாத, ஆராத, அள்ள அள்ளக் குறையாத அமுதமாக இருக்கும்!’ என்றார்.

“அதென்ன அமுதம்?” என்று கேட்டார் கருடன். கச்யபர் கருடனைக் கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார். ஆராவமுதனாக விளங்கும் பெருமாளைக் காட்டி, இவர் தான் நான் சொன்ன அமுதம் என்றார் கச்யபர். ஆராவமுதனின் எழிலால் ஈர்க்கப்பட்ட கருடன், கைகூப்பியபடி கர்ப்பக் கிரகத்தின் எதிரில் அமர்ந்து கொண்டு அந்தப் பெருமாளின் அழகாகிய அமுதைப் பருகத் தொடங்கினார். சார்ங்கபாணிப் பெருமாளின் கர்பக் கிரகத்தின் முன்னே ஆராவமுதைப் பருகியபடி ‘ஆதர்ச கருடன்’ என்ற திருநாமத்துடன் கருடன் எழுந்தருளியுள்ளதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இந்தச் சரித்திரத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, சார்ங்கபாணிப் பெருமாள் குறித்து இயற்றிய ஒரு ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்.

“ஸ்வர்கே பாதி அம்ருதம் யதர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ: |
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத் பாதீதி க்ருதாஞ்ஜலி: யதம்ருதம் பக்ஷீச்வர ஸேவதே ||”

தேவ லோகத்து அமுதத்தைப் பெறக் கடும் முயற்சிகள் தேவை. அவ்வாறு முயன்று அதைப் பெற்றுச் சுவைத்தாலும் அவ்வளவு இனிதாக இருப்பதில்லை. ஆனால் திருமாலாகிய ஆராவமுதமோ பெறுவதற்கும் எளியவர். எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத இனிமையுடனும் விளங்குகிறார். ‘சாச்வதஹ’ என்றால் எப்போதும் என்று பொருள். ‘ஸ்தாணுஹு’ என்றால் இனிப்பவர் என்று பொருள். எப்போதும் அடியவர்களுக்கு அமுதமாக இனிப்பதால் திருமால் ‘சாச்வதஸ்ஸ்தாணுஹு’ என அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 121-வது திருநாமம்.

“சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் வாழ்க்கை எப்போதும் இனிக்கும்படித்
திருமால் அருள்புரிவார்.

122. வராரோஹாய நமஹ (Varaarohaaya namaha)

திருவரங்கத்தில் நம்பிள்ளையின் திருவாய்மொழி காலட்சேபம் மிகவும் பிரசித்தியானது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் நம்பிள்ளையின் விளக்கங்களைக் கேட்பதற்காகத் திருவரங்கத்துக்கு அடியார்கள் வருவது வழக்கம். ஒருசமயம் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியின் பொருளை நம்பிள்ளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாவது பாசுரம்,

“அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே”

என்பது. இதற்கான விளக்கத்தை வெகு சிறப்பாக நம்பிள்ளை அளித்தார். “அற்றது பற்றெனில் - உலகியல் விஷயங்களில் உள்ள பற்றுகள் விலகினால், உற்றது வீடுயிர் - ஜீவாத்மாவின் உண்மையான சொரூபம் நன்கு பிரகாசிக்கும். அனைத்துப் பந்தங்களிலிருந்தும் விடுபட்டு, ஜீவாத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொள்ளும்.
செற்று அது - ஆனால்  ஆத்மாநுபவத்தில் உள்ள விருப்பத்தை விடுத்து, மன்னுறில் - மிக உயர்ந்த லட்சியமான இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்ய நினைத்தால்,
அற்று இறை பற்றே - இதர விஷயங்களில் பற்றற்றவனாக இறைவனைப் பற்றிக் கொள்.

ஜீவாத்மா இறைவனுக்கு சரீரம், இறைவன் ஜீவாத்மாவுக்குள்ளும் ஆத்மாவாக உள்ளான் என உணர்ந்து அவனைத் தஞ்சமாகப் பற்று.” இவ்வாறு நம்பிள்ளை கூறியவாறே, கூட்டத்திலிருந்து ஒரு பண்டிதர் எழுந்தார். “எந்தப் பற்றும் இல்லாத நிலைதானே முக்தி? அப்புறம் ஏன் இறைவன் மேல் பற்றுக் கொண்டு அவனைத் தொழ வேண்டும்? நாம் இந்த உடல் இல்லை, ஆத்மா என உணர்ந்து கொண்டபின், நாம் ஏன் இறைவன் என்ற யாரோ ஒருவனுக்கு உடலாக இருக்க வேண்டும்? ஜீவாத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் போதாதா?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “சுவாமி! உங்கள் கூற்று நன்றாகத்தான் இருக்கிறது. ஆசைகளை விடுத்தவாறே ஆத்மா முக்தியடையும். அதில் சந்தேகமில்லை. அதற்குக் ‘கைவல்யம்’ என்று பெயர். தனிமையில் ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் நிலை அது. ஆனால் அது உயர்ந்த லட்சியமில்லை. ஏனெனில் அனைத்து ஜீவாத்மாக்களும் இறைவனின் சொத்து. அவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை. அவ்வாறிருக்க ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே அனுபவித்துக் கொள்வது சரியாகுமா? ஊதியம் கொடுக்கும் முதலாளிக்காக உழைக்காமல், அவரது அலுவலகத்திலே அமர்ந்து கொண்டு நமது சொந்த வேலையைச் செய்துகொள்வது போன்ற செயல் அது.

அறிவற்ற பொருட்கள் தொடங்கி அறிவுள்ள ஜீவாத்மாக்கள் வரை அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்று வேதம் கூறுகிறது. எனவே இந்த உடல் எப்படி ஜீவாத்மாவின் நியமனத்துக்கேற்ப நடக்கிறதோ, அவ்வாறே ஜீவாத்மா தனக்கு உயிராக இருக்கும் பரமாத்மாவின் நியமனப்படி அவனுடைய ஆனந்தத்துக்காகச் செயல்பட வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்வதை விட இறைவனை அடைந்து தொண்டு செய்வதே அதன் சொரூபத்துக்கு ஏற்ற செயல்!” என்று கூறினார்.
மேலும், “இந்திர பதவியை விரும்புபவன் இவ்வுலக ராஜ்ஜியத்தில் கண்வைக்க மாட்டான்.

பிரம்மாவின் பதவியைப் பெற விரும்புபவன் இந்திர பதவியைக்கூட விரும்ப மாட்டான். ஆத்மானுபவத்தை விரும்புபவன் பிரம்மாவின் பதவியைக் கூட விரும்பமாட்டான். அதுபோல அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய இறைவனை அடைய நினைப்பவன் ஆத்மானுபவத்தையும் நாடாமல் இறைவனின் திருவடிகளிலேயே நோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதே இப்பாசுரம் வலியுறுத்தும் கருத்து!” என விளக்கினார் நம்பிள்ளை.

இவ்வாறு இந்திர பதவி, பிரம்மாவின் பதவி, ஆத்மானுபவம், இவை அனைத்தையும் விட உயர்ந்த லட்சியமாகத் புருஷார்த்தமாகத் திருமால் திகழ்வதால் ‘வராரோஹ:’ என்றழைக்கப்படுகிறார். ‘வர’ என்றால் உயர்ந்த என்று பொருள். ‘ஆரோஹ’ என்றால் புருஷார்த்தம். ‘வராரோஹ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 122-வது திருநாமம்.
“வராரோஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த பதவி உயர்வுகள் விரைவில் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

123. மஹாதபஸே நமஹ (Mahaatapasey namaha)

கைலாயத்திலிருந்த மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரண்டு சிவ கணங்கள், சிவன் தந்த சாபத்தால் திருவானைக்காவில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள் என்றும், சிலந்தியாகப் பிறந்த மால்யவான் தனது மறுபிறவியில் கோச்செங்கட் சோழ நாயன்மாராகப் பிறந்தான் என்றும், கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோயில்கள் கட்டியபின் எழுபத்தொன்றாவதாக நாச்சியார்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மணிமாடக் கோணில் கட்டி அவரைத் தொழுது அவரது அருளால் முக்தியடைந்தான் என்றும் ஐம்பத்தொன்பதாவது திருநாமமான “லோஹிதாக்ஷாய நமஹ” என்பதன் விளக்கத்தில் கூறியுள்ளோம். யானையாகப் பிறந்தானே புஷ்பதந்தன், அவன் கதி என்னவாயிற்று?யானை வடிவத்தோடே புஷ்பதந்தன் கைலாயத்தை அடைந்தான். மால்யவான் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தொழுது முக்தியடைந்ததைப் போலத் தானும் முக்தியடைய விரும்புவதாக அவன் பார்வதி தேவியிடம் கூறினான்.

“அப்படியா? மிக்க மகிழ்ச்சி! நீயும் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசனை வழிபட்டு முக்தியடைவாயாக!” என ஆசீர்வதித்தாள் பார்வதி. “அங்கே தான் ஒரு சிறிய பிரச்னை!” என்றான் புஷ்பதந்தன். “என்ன?” என்று கேட்டாள் பார்வதி. “திருவானைக்காவில் சிலந்தியாய் இருந்த மால்யவான் பின்னிய வலைகளை யானையாக இருந்த நான் கலைத்துவிட்டேன் அல்லவா? அதனால் இப்போது கோச்செங்கட் சோழனாகப் பிறந்த அவன், யானையின் மேலுள்ள அந்தக் கோபத்தின் எதிரொலியாகத் தான்கட்டிய அனைத்துக் கோயில்களையும் யானை உள்ளே நுழைய முடியாதபடி மணிமாடக்கோவில்களாகக் கட்டிவிட்டான். (முதலில் சமதரையாகவும், அதைத் தொடர்ந்து படிக்கட்டுகளும், மீண்டும் சமதரையாகவும், பின் படிக்கட்டுகளுமெனக் கட்டப்படும் கட்டிட அமைப்புக்கு மணிமாடம் என்று பெயர்.

அத்தகைய அமைப்பை உடைய கட்டிடங்களுக்குள் செல்ல யானைகள் அஞ்சும் என்பார்கள்.) அவன் கட்டிய ஸ்ரீநிவாசனின் திருக்கோவிலுக்குள் யானை வடிவில் இருக்கும் நான் எவ்வாறு சென்று பெருமாளை வழிபடுவேன்?” என்று கேட்டான்.பரமசிவனிடம் இவ்விஷயத்தைப் பார்வதி கூறினாள். “இதற்கான வழியை நாம் ஸ்ரீநிவாசனிடமே கேட்போம்!” என்றார் பரமசிவன். நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்ஜுளவல்லித் தாயாருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் தெப்ப உற்சவம் நடைபெறுகையில், அருகிலுள்ள சிவன்கோயிலில் இருந்து சித்தநாதேஸ்வரரும், சௌந்தர்ய நாயகி அம்மனும் ரிஷப வாகனத்தில் அங்கே வந்து புஷ்பதந்தனுக்கு அருள்புரியுமாறு பெருமாளிடம் கோரினார்கள். (இன்றும் நாச்சியார் கோவில் பெருமாள் கோயிலில் வருடா வருடம் நடைபெறும் தெப்போற்சவத்தின் போது, சித்தநாதேஸ்வரரும் சௌந்தர்யநாயகியும் ரிஷப வாகனத்தில் குளக்கரைக்கு வருவது வழக்கம்.)

அவர்களிடம் வஞ்ஜுளவல்லித் தாயார், “புஷ்பதந்தனுக்கு என் கணவர் அருள்புரிவதற்கு நான் வேறு வழி வைத்திருக்கிறேன். வரும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்து பாருங்கள்! உங்களுக்கே புரியும்!” என்றாள். மகிழ்ச்சியுடன் சௌந்தர்ய நாயகியும் சித்தநாதேஸ்வரரும் தங்கள் கோயிலுக்குத் திரும்பினார்கள்.பங்குனி மாத பிரம்மோற்சவம் வந்தது. புஷ்பதந்தனுக்கு ஸ்ரீநிவாசனும் வஞ்ஜுளவல்லியும் எவ்வாறு அருள்புரியப் போகிறார்கள் என்பதைக் காணும் ஆவலுடன் பார்வதியும் பரமசிவனும் நாச்சியார் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அந்த உற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்தார்கள். வஞ்ஜுளவல்லித் தாயாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் அன்று யானை வாகனத்தில் காட்சியளித்தார்கள்.

அதில் வியப்பு என்னவென்றால், யானையை ஓட்டும் அங்குசத்தைத் தாயார் தன் கையில் ஏந்தி ஓட்டுநராக அமர்ந்திருக்கப் பெருமாள் தாயாருக்குப் பின்னால் பின்னிருக்கைப் பயணியாக அமர்ந்திருந்தார். (இதை நாச்சியார்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில் இன்றும் தரிசிக்கலாம்.) வஞ்ஜுளவல்லி பார்வதியைப் பார்த்து, “புஷ்பதந்தனுக்கு அருள்புரிந்து விட்டேன் பார்த்தாயா?” என்று கேட்டாள். “புரியவில்லையே! எங்கே புஷ்பதந்தன்?” என்று கேட்டாள் பார்வதி. “கீழே வாகனத்தைப் பார்!” என்றாள் வஞ்ஜுளவல்லி. புஷ்பதந்தனே யானை வாகனமாக இருந்து, பெருமாள்-தாயாரைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் பார்வதி. “இக்கோயிலுக்குள் யானை நுழையத் தயங்குவதால், புஷ்பதந்தனைக் கோயிலின் வெளிப்புறத்திலேயே வாகனமாக அமர்த்தி, பெருமாளும் தாயாரும் அவனைத்தேடி வந்து அவன் மீது அமர்ந்து அவனுக்கு அருள்புரிந்து விட்டார்கள்
பார்த்தாயா?” என்றார் பரமசிவன்.

 ‘தப:’ என்றால் சிந்தனை என்று பொருள். அடியார்களுக்கு எவ்வாறு அருள்புரியலாம் என்பதையே எப்போதும் சிந்தித்து, ஒவ்வொரு அடியவருக்கும் அருள்புரிவதற்கு ஏற்ற வழியைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, அவ்வழியில் அவர்களுக்கு அருள்புரிந்து, அவர்களது பிறவிப் பிணியைப் போக்குவதால் ‘மஹாதபஹ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 123-வது திருநாமத்தால் திருமால் போற்றப்படுகிறார். “மஹாதபாய நமஹ” என்று சொல்லித் திருமாலைத் தினமும் போற்றும் அன்பர்களுக்கு நன்கு சிந்திக்கும் ஆற்றலைத் திருமால் அருளுவார். (தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!