×

கோபி அருகே கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபி: கோபி அருகே நேற்று நடந்த கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் கோரக்காட்டூரில் சுமார் 150 ஆண்டு பழமையான ஸ்ரீ கரியகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் தேர்த்திருவிழா மற்றும் சுமங்கலி யாக பூஜை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து 28ம் தேதி கிராம சாந்தியும், 29ம் தேதி காலை கொடியேற்றமும், சந்தனகாப்பு அலங்காரமும் இரவு சுமங்கலி யாக பூஜையும் நடந்தது.

30ம் தேதி பொங்கல் நிகழ்ச்சியும், கரும்பு கொண்டு வருதல் மற்றும் குண்டம் திறப்பும் நடந்தது. இதில், பக்தர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட 10 டன் விறகுகளை கொண்டு தீ மூட்டப்பட்டது.  நேற்று காலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து படைக்கல பூஜையும் நடந்தது. தலைமை பூசாரி சதீஸ், நந்தா தீபம் ஏற்றி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்த பின் முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து 15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் கைகுழந்தையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

குண்டம் நிகழ்ச்சியில் வெள்ளாங்கோயில், கோரக்காட்டூர், கடுக்காம் பாளையம், சந்திராபுரம், ஒத்தகுதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று (பிப்.1ம் தேதி) தேரோட்டமும், நாளை (பிப்.2ம் தேதி) முத்துபல்லக்கில் சாமி ஊர்வலமும், கரகாட்டம் மற்றும வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் தேதி மஞ்சள் நீர் உற்வசம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு சிறுவலூர்  போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags : festival ,Kalyanamyamman Kundam ,Gopi ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்