
குளச்சல்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பிப்.10ம் தேதி கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை வரும் மார்ச் 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கிடையே கடந்த பல மாதங்களுக்கு முன்பு கோயில் திருப்பணிகள் தொடங்கியது. 3 கோடி மதிப்பீட்டில் கோயில் கோபுரம், கொடிமரம், கருவறை மேற்கூரை, சீலிங், தேக்குமர சீலிங், நாகர் சன்னதி திருப்பணி, முன்வாசல் மரக்கதவு மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது. தற்போது திருப்பணிகள் நிறைவுப்பெற்று வரும் நிலையில் வரும் பிப்.10ம் தேதி கலசாபிஷேகம் நடத்துவதற்கு திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இதையடுத்து கலசாபிஷேக யாகசாலை பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியம் ஆறுமுகதரன் ஆகியோர் பார்வையிட்டனர். இது குறித்து திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது, மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதையடுத்து பிப்.10ம் தேதி கலசாபிஷேகம் விழா நடத்தப்படுகிறது. மிகவும் பழமையான மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கலசாபிஷேகம் நடப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.