×

கன்னியாகுமரியில் வெங்கடாஜலபதி கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இன்று(27ம் தேதி) காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 21ம் தேதி 40 அடி உயர கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 22ம் தேதி மாலை கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.

நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் 7 அடி உயர வெங்கடாஜலபதி சுவாமி சிலை, 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலை, 3 அடி உயர ஆண்டாள் சிலை மற்றும் 3 அடி உயர கருடபகவான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாசனர்ப்பணம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் நடந்தது. இன்று(27ம் தேதி) காலை 6.30 மணியளவில் யாகசாலையில் இருந்த உற்சவரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோயிலை 3 முறை வலம் வந்து உற்சவர் கோயிலுக்குள் சென்றார். பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை தலைமை அர்ச்சகர் ேசஷோத்திரி தலைமையிலான அர்ச்சகர்கள் தலையில் சுமந்தபடி கோயிலை சுற்றி வலம்வந்தனர்.

பின்னர் கோயில் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கும்ப நீர் பக்தர்களின் மேல் தெளிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயில் கருவறையில் உள்ள வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கோயில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என மெய்யுருக கோஷம் எழுப்பினர். மேலும் பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உட்பட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கன்னியாகுமரியே விழா கோலம் பூண்டது. பக்தர்களின் பாதுகாப்புக்காக எஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச கல்யாணம், 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடி இறக்கம் நடக்கிறது.

Tags : Venkatajalapathy Temple ,Kanyakumari Maha Kumbabishekam Gokalalam ,
× RELATED ஜன.27ல் கும்பாபிஷேகம் கன்னியாகுமரி...