×

மணக்கோலத்தில் மாமருகன்

தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாவது படைவீடாகவும் திகழ்கிறது இத்தலம். 300 அடி உயரமும் இரண்டு கி.மீ. சுற்றளவும் கொண்ட குன்றின் மேல் குடை வரைக் கருவறையில் அருள்கிறார் முருகப்பெருமான். பரன் எனும் சொல் ஈசனைக் குறிப்பதாகும். லிங்க வடிவில் இருக்கும் இக்குன்று பரங்குன்றம் என அழைக்கப்பட்டது. பாடல் பெற்ற தலமாதலால் திருப்பரங்குன்றம் என்றாயிற்று. ஆலயம் முக மண்டபம், திருவாட்சி மண்டபம், மகா மண்டபம், கம்பத்தடி மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் அர்த்தமண்டபத்தோடு விளங்குகிறது. முகமண்டபம் 48 தூண்கள் கொண்டது. அதில் ஒரு தூணில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜப் பெருமானின் திருவுரு மனதைக் கவர்கிறது. இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை. சனி பகவான் மட்டும் மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ளார்.

கருவறையில் தேவேந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் புரிந்து புது மணக்கோலத்தில் முருகன் அருள்கிறார். எனவே இத்தலம் திருமணவரம் தரும் தலமாக போற்றப்படுகிறது. இத்தல முருகன் சுப்ரமண்யசுவாமி எனும் திருநாமம் கொண்டு அமர்ந்த நிலையில் அருள்கிறார். இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரதமுனிவரும் வீற்றுள்ளனர். முருகப்பெருமானின் திருவுருவின் முன் அவரது வாகனங்களான யானை, ஆடு உருவங்களும் முருகனின் காவல் தெய்வங்களும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. அந்த யானை இந்திரனின் வாகனமான ஐராவதம் என்றும், அவர் மகளான தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகப்பெருமானுக்குத் தொண்டு செய்ய வந்ததாகவும் ஐதீகம். பரங்கிநாதர், ஆவுடைநாயகி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி ஆகியோருக்கான ஐந்து சந்நதிகளும் ஐந்து குகைக்கோயில்களாக தனித்தனியே இருக்கின்றன.

இத்தல பவளக்கனிவாய் பெருமாள் சித்திரை மாதம் மதுரை மீனாட்சி திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாகவே மதுரைக்குச் சென்று பின் திரும்புவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைகாசி மாத விழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள ஷண்முகருக்கு பால்காவடி எடுத்து வந்து பாலபிஷேகம் செய்கிறார்கள். தை மாதம் தெப்பம், கார்த்திகைத் திருவிழாவில் சிறிய தேரிலும், பங்குனித் திருவிழாவில் பெரிதேரிலும் முருகப் பெருமான் வலம் வருவார். சூரசம்ஹார நிறைவிற்குப் பின் முருகப் பெருமான் தன் படைவீரர்களுடன் இத்தலத்தில் தங்கியிருந்ததாக புராணம் சொல்கிறது. இத்தலத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களைப் பற்றி ஆலயத்தில் 41 கல்வெட்டுகள் உள்ளன. திருப்புகழ், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. குன்றின் அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை முருகனின் கை வேலால் உண்டாக்கப்பட்டதாக ஐதீகம். கல்லத்தி மரம் இத்தலத்தின் தல விருட்சம். மதுரைக்குத் தென்மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

Tags : bride ,
× RELATED மணப்பெண் மாயம்