×

கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று

கோயிலுக்குப் போய்விட்டு வருபவரின் முகம் வாடி இருந்தது. என்ன காரணம் என விசாரிக்கிறார் எதிரே வந்த நண்பர். ஒரு தப்பு பண்ணிட்டேன். அதான் ஆண்டவர் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்தேன். ஆலயத்தின் எதிரே கொடிமரத்தின் அடியில் இருவரும் அமர்ந்தார்கள். நண்பர் கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ஒருத்தன் தன் இரண்டு காதுலேயும் பெருசாக கட்டுப் போட்டுட்டு வந்தான். என்னப்பா! சந்திர மண்டலம் புறப்பட்டுட்டியா என்று கிண்டலடித்தான் நண்பன். வீட்ல ஒரு சின்ன விபத்து நடந்துபோச்சு. அதுதான் இப்படி என்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான். டி.வி.யிலே கிரிக்கெட் மேட்ச் நடந்தது. ரொம்ப ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போ என் மனைவி துணியை அயர்ன் பண்ணிட்டு இருந்தா, அயர்ன் பாக்ஸை அப்படியே வெச்சிட்டு அடுப்படிக்குப் போயிட்டா. அந்த நேரம் பார்த்து டெலிபோன் மணி அடித்தது. கிரிக்கெட் பரவசத்தில் அதை எடுத்து காதில் வைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது. நான் காதுல வச்சது டெலிபோன் ரிசீவர் இல்ல, சூடாக இருந்த அயர்ன் பாக்ஸ். அதான் என் காதைப் பதம் பார்த்து விட்டது.

ஒரு காது இப்படி ஆனது சரி! ரெண்டு காதுலயும் கட்டுப் போட்டிருக்கியே அது எப்படி? அதே ஆள் மறுபடியும் போன் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கலியே! டெலிபோன் ரிசீவருக்குப் பதிலா அயர்ன் பாக்ஸை எடுத்து மறுகாதில வைத்துவிட்டேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். சிரிக்காதீர்கள். சிந்தித்துப் பாருங்கள் என்றார் நண்பர். என்ன சொல்கிறீர்கள்? இப்போ ஒரு தப்பு பண்ணிட்டு ஆண்டவர் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வர்றதா சொன்னீங்க, இது முக்கியம் இல்ல, இதே தப்பை நீங்க மறுபடியும் செய்யாதிருக்கணும். அதுதான் முக்கியம். அவர் சிந்திக்க ஆரம்பித்தார். பாவங்கள் மன்னிக்கப்படுவது ஏன்? சற்று நேரத்தில் விடை அவருக்கு விளங்கியது. பாவங்களை மனிதன் மறுபடியும் செய்யாமல் இருப்பதற்காகவே அவன் மன்னிக்கப்படுகிறான். ‘‘ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடு இருக்கின்றது.

கடல் மணலையோ, மழைத்துளியையோ, முடிவில்லாக் காலத்தையோ, யாரே கணக்கிடுவார்? வான்வெளியின் உயரத்தையோ, நிலவுலகின் அனுபவத்தையோ, ஆழ்கடலையோ, ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்? எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது. கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று என்றுமுள கட்டளைக்கே அதை அடையும் வழிகள். ஞானத்தின் ஆணி வேர் யாருக்கு வெளிப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்? ஆண்டவர் ஒருவரே ஞானியாவார். அவரே ஞானத்தைப் படைத்தவர். அதனைக்கண்டு கணக்கிட்டவர். தன் நகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார். தன்மீது அன்பு கூறுவோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார். ஆண்டவரிடம் ெகாள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையும் ஆகும். அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது. மகிமையும், அக்களிப்பையும், நீடிய ஆயுளையும் வழங்குகிறது.’’  (சீராக் 1: 112)
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ.

Tags : God ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?