×

மலைவலம் வருகிறார் பிந்துமாதவராயர்

வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது துத்திப்பட்டு. “பிரதூர்த்தப் பட்டு’ என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் அது மருவி இப்போது “துத்திப்பட்டு’ என்று அழைக்கப்படுகிறது.  இப்பகுதியில் முன்னொரு காலத்தில் ரோமச முனிவர் பர்ணசாலை அமைத்து தனது சீடர்களுடன் தவம் புரிந்து வந்தார். அப்போது பிரதூர்த்தன் என்ற அரக்கன், வேள்விகளைக் கலைத்திட அங்கு வந்தான். அதனால் சினம் கொண்ட ரோமசர், அவனைப் புலியாக மாறிட சாபம் கொடுத்தார்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா? புலியாக மாறிய பிரதூர்த்தன், கானகத்தில் வாழ்கின்ற உயிரினங்களுக்குத் தொல்லை கொடுக்கத் துவங்கினான். கானகம் வாழ் முனிவர்கள் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டனர். முனிவர்களைக் காத்திட தேவேந்திரனும் புலியாக மாறி அரக்கனுடன் சண்டையிட்டான். அரக்கன் பலமே மேலோங்கிய நிலையில் அமரேந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை வீசினான். உயிர் துறக்கும் வேளையில், நல்ல புத்தியும் வந்தது அவனுக்கு. செய்த தவறை உணர்ந்தவனின் குற்றம் பொறுத்தருளுவதுதானே கடவுளின் கருணை! தேவர்களும் திருமாலை வேண்டினர்.

சங்கு சக்ர கதாயுத பாணியாக பிரதூர்த்தனுக்கும் காட்சி தந்தார் பெருமாள். அரக்கனுக்கு நற்கதி தந்த அதே இடத்தில் நிலை கொண்டு பூவுலகவாசிகளுக்கும் திருவருள் செய்திட வேண்டும் என்று கோரினர் முனிவர்களும் தேவர்களும். அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு எம்பெருமான் துத்திப்பட்டு தலத்தில் எழுந்தருளியுள்ளார். பிரமாண்ட புராணத்தில் சனத்குமார சம்ஹிதையில் இடம் பெற்றுள்ளது இந்த தலத்தின் வரலாறு.

பெரிய வெளிச்சுற்றுடன் கூடிய திருக்கோயிலை 45 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் அழகு செய்கிறது. மூன்று கருவறைகளும், ஒரு முகமண்டபமும், 36 தூண்கள் கொண்ட மகா மண்டபமும் உள்ளன. மூலவர் கருவறையின் மேல், 18 அடி உயரம் கொண்ட தேஜோ விமானம் அழகு செய்கிறது.ஆறடி உயரம் கொண்ட பெருமாள். தனது இரு தேவியரும் இருபுறமும் நின்றிட சேவை சாதிக்கிறார். இங்கே அவர் “பிந்துமாதவராயப் பெருமாள்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். வேணிமாதவர், பிந்துமாதவர் ஆகிய பெருமாளை  தரிசிக்க பிரயாகை செல்ல வேண்டாம். தமிழ்நாட்டிலேயே க்ஷீரநதி (பாலாறு) தீரத்திலேயே என்னை  தரிசிக்கலாம் என்று கூறுவது போல, சதுர்புஜங்களுடன், சங்கு சக்கர கதாதரராகக் காட்சி தருகிறார்.

முத்தங்கி சேவையில் அவரைக் காண கோடிக்கண்கள் வேண்டும். உற்சவத் திருமேனிகள் தேவியர் இருவரும் பெருந்தேவி, குமுதவல்லி என்று திருநாமம் கொண்டுள்ளனர். கருவறையை விட்டு வெளியேறி வெளிச் சுற்றுக்கு வந்து, தனிச் சந்நதி கொண்டுள்ளாள் பெருந்தேவித்தாயார். மறுபுறம் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சந்நதி. அருகிலுள்ள மகிழமரம் தலமரமாகத் திகழ்கிறது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவரோடு இந்தத் தலத்தில் பெருமாள் எழுந்தருளக் காரணமாக இருந்த பிரதூர்த்தனுக்கும் சிலை உள்ளது.

வைகாசி விசாகத்தில் கஜேந்திர மோட்சம் ஐதீகத் திருவிழாவாக நடைபெறுகிறது. பொங்கல் அன்று, ரோமச மகரிஷி தவமியற்றி வந்த நிமிஷாசல மலையைச் சுற்றி உற்சவர் வலம் வருவார். மலையிலுள்ள ரோமரிஷிக்கு காட்சி கொடுக்கவே பெருமாள் மலை வலம் வருகிறார். விஜயநகர மன்னர்கள் பெருமளவில் திருப்பணி செய்துள்ளனர். ஏகஜதேவராயர், விஜயநரசிம்மராயர் திருப்பணிகள் குறிப்பிடத்தக்கவை. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசித் திருநாள், சொர்க்க வாசல் திறப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Tags : Bindu Madhava Rao ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி