×

ஞான பரிபூரணன் : ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி : 26.1.2019

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அவருக்கு பரமேஸ்வரனே ஸ்ரீ பாலாஜி சுவாமிகள் என்ற பெயரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சந்நியாசம் தந்தார். அவருடைய பெற்றோர் சிறிய வயதிலேயே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாட்சி அம்மன் கோயிலை பிரதட்சணம் செய்வார்”. அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவருடைய சித்தியும் சித்தப்பாவும்தான் வளர்க்கிறார்கள். அவரோ “நான் ஒரு சந்நியாசி. வீட்டுக்குள் வரமாட்டேன்!” என்கிறார். அவருடைய சித்தி சித்தப்பாவிற்கு, “இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ?” என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒருநாள், சேஷாத்ரி சுவாமிகள் அப்பாவின் சிராத்தம் வருகிறது. அவரோ, “எனக்கு சிராத்தம் செய்கிற கர்மாவெல்லாம் இல்லை.

நான் ஒரு சந்நியாசி, எனக்கு கர்மாக்கள் எல்லாம் இல்லை”, என்கிறார். அவருடைய  சித்தியும் சித்தப்பாவும்  இப்படி சொல்கிறாரே என்று அவரை பிடித்து, “சிராத்தம் முடியும் வரை நீ வீட்டில் தான் இருக்கணும்”, என்று கூறி அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து விடுகிறார்கள். சிராத்தம் முடிந்து அந்த அறையை திறந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. அவர் மறைந்து விடுகிறார். அவர் அதோடு திருவண்ணாமலைக்கு போய் விடுகிறார். அவருடைய லீலைகள் அற்புதம்.  காஞ்சிபுரத்தில் அவர் பிறந்த வீட்டை தேடிக் கண்டு பிடித்து ஒரு பூஜா ஸ்தலமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வீட்டை கண்டு பிடித்தவுடன், அந்த வீட்டில் வைப்பதற்காக ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் உட்கார்ந்திருப்பதுபோல் ஒரு சித்திரம் வரைய  ஏற்பாடு செய்தார்கள். அப்போது, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்படி யோகாசனத்தில், குக்குடாசனத்தில் உட்கார்ந்திருப்பார் என்று மஹாபெரியவர்  உட்கார்ந்து காட்டினார். அப்போது, “இப்படித்தான் அவர் உட்கார்ந்திருப்பார். இதை பார்த்துக்கோ! அப்புறம் அவருடைய பழைய சித்திரம் எல்லாம் பார்த்துக்கோ! இதை வச்சு அவருடைய படம் வரை…”, என்று சொன்னார். ஸ்ரீ ரமணரும், ஒரு சோபா போட்டு “உட்கார்ந்துக் கொள்ளுங்கள்”, என்றவுடன், “ஆமா! நான் இருக்கேன். சோபா இருக்கு. உட்கார்ந்துக்க போறேன். தெரியறதே! நான் என்ன சேஷாத்ரி ஸ்வாமிகளா? சோபான்னு ஒண்ணு இருக்கறது கூட தெரியாம இருக்கறதுக்கு” என்றாராம்.

பரணிகுமார்

Tags : Jnana Perpooranan ,Sri Seshadri Swamigal Jayanti ,
× RELATED காமதகனமூர்த்தி