×
Saravana Stores

சைமா விருதுகள் 2023; 11 ஜெயிலர் பிரிவில் போட்டி

சென்னை: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA – சைமா) தென்னிந்திய சினிமாவின் சிறந்ததைக் கொண்டாடும் வகையில் அதன் 12வது பதிப்போடு மீண்டும் வந்துள்ளது. உலகளாவிய தென்னிந்திய திரைப்பட ரசிகர்களை தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களுடன் இணைக்கிறது இந்த விருது விழா. 2023ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெறும். சைமா தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி, போட்டி பிரிவில் இருக்கும் படங்கள், கலைஞர்களின் பட்டியலை அறிவித்துள்ளார். இது குறித்து பிருந்தா பிரசாத் கூறும்போது, ​​“கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், மொழி தடையை உடைத்து தேசிய அளவில் வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருதுகள், வலுவான போட்டியாளர்களின் பட்டியலைக் கொண்டிருக்கப் போகிறது” என்றார். ஜெயிலர் (தமிழ்), தசரா (தெலுங்கு), காட்டேரா (கன்னடம்) மற்றும் 2018 (மலையாளம்) ஆகியவை பெரும்பாலான பிரபலமான பிரிவுகளில் சைமா பரிந்துரைகளில் முன்னணியில் உள்ளன.

தமிழில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ 11 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மாமன்னன்’ 9 பரிந்துரைகளுடன் உள்ளது.தெலுங்கில், காந்த் ஒடேலா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தசரா’ 11 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் நானி மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த ‘ஹாய் நன்னா’ 10 பரிந்துரைகளுடன் அதற்கு நெருக்கமாக உள்ளது. கன்னடத்தில், தருண் சுதிர் இயக்கத்தில், தர்ஷன் நடித்த ‘காதேரா’ 8 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளது, ரக்ஷித் ஷெட்டி மற்றும் ருக்மணி வசந்த் நடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோர் – சைட் ஏ’ 7 பரிந்துரைகளுடன் உள்ளது.

மலையாளத்தில், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ், ஆசிப் அலி நடித்த ‘2018’ 8 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளது, மம்முட்டி மற்றும் ஜோதிகா நடித்த ‘காதல் – தி கோர்’ 7 பரிந்துரைகளுடன் அடுத்ததாக உள்ளது. ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.siima.in மற்றும் சைமாவின் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம். தமிழ் படங்களுக்கான விருது போட்டியில் உள்ள படங்கள், கலைஞர்கள் விவரம்: சிறந்த படம்: ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை. சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின் செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா). சிறந்த நடிகை: திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் 2), கீர்த்தி சுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).

சிறந்த இயக்குனர்: நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண்குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்). சிறந்த குணச்சித்திர நடிகர்: வடிவேலு (மாமன்னன்), எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்). எஸ்ஜே.சூர்யா (ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்), சரத்குமார் (வாரிசு), வசந்த் ரவி (ஜெயிலர்). சிறந்த குணச்சித்திர நடிகை: முல்லை அரசி (ஆர்யூ ஓகே பேபி). நதியா (லெட்ஸ் கெட் மேரிட்), அபர்ணதி (இறுகப்பற்று), சரிதா (மாவீரன்), ரெய்ச்சல் ரெபக்கா (குட்நைட்). சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், சித்தா), நிவாஸ் கே. பிரசன்னா (டக்கர்). சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு (சந்திரமுகி 2), விடிவி கணேஷ் (டாடா), சுனில் (ஜெயிலர்), யோகிபாபு (மாவீரன், ஜெயிலர்), ரெடின் கிங்ஸ்லி (கான்ஜுரிங் கண்ணப்பன்).

 

The post சைமா விருதுகள் 2023; 11 ஜெயிலர் பிரிவில் போட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Saima Awards ,CHENNAI ,South Indian International Film Awards ,SIIMA ,Saima ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...