அண்ணாநகர்: பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். செல்போன் பிரச்னையில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு(32). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது 5 வயது மகள், நேற்றிரவு செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் ராசுவின் தம்பி சந்திரன்(எ) விக்கி(19) என்பவர் குடிபோதையில் வந்துள்ளார். திடீரென அவர், சிறுமி கையில் இருந்த செல்போனை பிடுங்கியதுடன் சிறுமியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுதபடி சென்று தந்தையிடம், ‘’சித்தப்பா என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கி தாக்கிவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ராசு, விக்கியிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த ராசு, விக்கியை சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் பெல்ட்டால் விக்கியின் கழுத்தை இறுக்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்து துடித்துள்ளார். இதனால் பயந்துபோன ராசு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதன்பிறகு அக்கம்பக்கத்தினர் சென்று விக்கியை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’ ஏற்கனவே விக்கி இறந்துவிட்டார்’ என்று கூறினர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் விக்கி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் ராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை நொளம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இறந்துபோன விக்கி மீது ஏற்கனவே திருவள்ளூர், நொளம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி மற்றும் வழிப்பறி என 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்து உள்ளது. செல்போன் விவகாரத்தில் தம்பியை அண்ணன் கொலை செய்தது திருமங்கலம் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது….
The post செல்போன் பிரச்னையில் பயங்கரம்: பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன் கைது appeared first on Dinakaran.