×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

115. ருத்ராய நமஹ (Rudraaya namaha)

சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள். அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார்.

அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார்.

அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்க்கரைப் பொங்கல் காலியாகி இருப்பதையும், திருக்கச்சி நம்பியின் கையில் சர்க்கரைப் பொங்கல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டார். “என்ன காரியம் ஐயா செய்தீர்? பெருமாள் உண்ட மிச்சத்தைச் சாப்பிட வேண்டிய நாம் அவருக்கென்று வைத்த பிரசாதத்தைச் சாப்பிடுவது நியாயமா?” என்று கேட்டார் அர்ச்சகர். “சுவாமி! அடியேன் எதையும் சாப்பிடவில்லை. பெருமாள் தான் கேட்டார்! அவருக்கு ஊட்டி விட்டேன்!” என்றார் நம்பி. “இதென்ன புதுக்கதை! பெருமாள் என்றைக்கு ஐயா சாப்பிட்டிருக்கிறார்? நீர் தின்றுவிட்டு அவர் மேல் பழிபோடாதீர்!” என்றார் அர்ச்சகர்.

செய்தியைக் கேள்வியுற்ற கோயில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். பெருமாளுக்கென்று வைத்திருந்த பிரசாதத்தை நிவேதனத்துக்கு முன் எடுத்து உண்ட திருக்கச்சி நம்பிகள் இனிமேல் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியே அனுப்பினார்கள். வருத்தத்துடன் வீடு திரும்பினார் திருக்கச்சி நம்பிகள். இச்செய்தி ஊர் முழுவதும் பரவியதால், மக்கள் அனைவரும் திருக்கச்சி நம்பிகளைப் பலவாறு ஏசத் தொடங்கினார்கள். “வரதா! மக்கள் என்னைத் தூற்றுவதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை! ஆனால் இப்படி ஒரு லீலை செய்து நான் உனக்குச் செய்துவரும் தொண்டை நடக்க விடாமல் செய்துவிட்டாயே!” என்று பெருமாளிடம் மனமுருகி வேண்டினார்.

சில நாட்கள் கடந்தன. திருமலையிலிருந்து சில பக்தர்கள் வரதராஜப் பெருமாளுக்கு 100 கங்காளம் பொங்கலும் 100 கங்காளம் புளியோதரையும் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு வந்து பிரசாதத்தை வரதராஜனுக்குச் சமர்ப்பிக்கையில் பெருமாள் அர்ச்சகரிடம், “திருக்கச்சி நம்பிகளை வரச்சொல்லுங்கள்! அவர் வந்தால் தான் நான் நிவேதனம் கண்டருள்வேன்!” என்றார். வேறு வழியில்லாமல் பூவிருந்தவல்லியிலிருந்து திருக்கச்சி நம்பிகளைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள்.

நூறு கங்காளம் பொங்கலும், நூறு கங்காளம் புளியோதரையும் பெருமாளின் முன்னே இருந்தன. திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள், “இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார். மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்! நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!” என்றார். அனைவரும் விலகிச் சென்றார்கள். கதவு தாளிட்டுக்கொண்டது.

சிறிது நேரம் கழித்து, “இப்போது உள்ளே வாருங்கள்!” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. கதவைத் திறந்துகொண்டு பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது. அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். “இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!” என்றார் வரதராஜன்.

திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள். “திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!” என்று பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார்.

தன்மீது ஒருமடங்கு அன்புகாட்டும் அடியவர்களின் மேல் பல்லாயிரம் மடங்கு அன்புகாட்டும் எம்பெருமானின் கருணையை எண்ணி
மனமுருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருக்கச்சி நம்பிகள்.வடமொழியில் “ரோதயதீதி ருத்ர:”  அழ வைப்பவனை ருத்ரன் என்று கூறுவார்கள். தன் கருணையால் தன் அடியார்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து அவர்களை அழ வைப்பதால் திருமால் ‘ருத்ரஹ’ என்றழைக்கப்
படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 115-வது திருநாமம்.

“ருத்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் அன்பையும் கருணையையும் திருமால் முழுமையாகக் காட்டி அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி அருளுவார்.

116. பஹுசிரஸே நமஹ.(Bahushirasey namaha)

கர்நாடகத்துக்கு ராமாநுஜர் எழுந்தருளிய காலத்தில் அங்கே வாழ்ந்த அருகதராஜன் என்ற வித்வான் ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டார். எளிய மக்களுக்கும் வேதத்தின் கருத்துக்களைச் சரியான முறையில் கொண்டு சேர்த்து அனைவரின் ஆதரவும் பெற்று ராமாநுஜர் விளங்குவதைக் கண்டு அருகதராஜன் பொறாமை கொண்டார்.

ராமாநுஜரை வாதத்துக்கு அழைத்து அவரை வெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டார்.அருகதராஜனின் சீடன் ஒருவன், “குருவே! இந்த ராமாநுஜர் வெறும் சமூக சேவகர் தான். அவருக்கு வடமொழி இலக்கணமோ, நியாய சாஸ்திரமோ, தர்க்கமோ தெரியாது. அவருடன் முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் போன்ற சீடர்கள் இருக்கிறார்களே! அவர்கள் தான் இந்த சாஸ்திரங்களை எல்லாம் கற்றவர்கள்.

எனவே அந்தச் சீடர்களை ராமாநுஜரிடமிருந்து அப்புறப் படுத்திவிட்டால் நாம் அவரை எளிதாக வாதம் செய்து வென்றுவிடலாம்!” என்றான். அதனால் மேலும் உற்சாகம் அடைந்த அருகதராஜன் ராமாநுஜரை வாதப் போருக்கு அழைக்குமாறு தன் சீடர்களை அனுப்பி வைத்தார்.

தொண்டனூர் ஏரிக்கரையில் எழுந்தருளியிருந்த ராமாநுஜரிடம் வந்த அருகதராஜனின் சீடர்கள் வாதப் போருக்கு அழைப்பு விடுத்தபோது, “நான் ஒரு துறவி. வேதநெறிக்கு எதிரானவர்களான அருகதராஜன் போன்றவர்களை நான் கண்ணால் கூட பார்க்கலாகாது. எனவே என் சீடரான நடாதூர் ஆழ்வானை அனுப்பி வைக்கிறேன். அவரோடு வாதம் செய்யட்டும். நடாதூர் ஆழ்வான் தோற்றால் நான் தோற்றதாகவே ஒப்புக் கொள்கிறேன்!” என்றார் ராமாநுஜர்.

அவர்கள் நடாதூர் ஆழ்வானை அழைத்துக் கொண்டு அருகதராஜனிடம் வந்தார்கள். அருகதராஜன், “ராமாநுஜருக்கு வாதம் செய்யத் தெரியாது என என் சீடன் சொன்னது சரிதான் போலும். அதனால் தான் தான் நேராக வாதம் செய்ய வராமல் சீடரை அனுப்புகிறார்!” என்றார்.

அதைக் கேட்டு வெகுண்ட நடாதூர் ஆழ்வான், “எங்கள் குருவான ராமாநுஜரே உங்களுடன் நேரில் வாதம் செய்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தொண்டனூருக்கு வந்தார். நடந்தவற்றை ராமாநுஜரிடம் தெரிவித்தார். ராமாநுஜர், “அப்படியானால் ஒரு திரையைக் கட்டிவிடுங்கள். அதன் ஒருபுறத்தில் நானும் மறுபுறத்தில் அருகதராஜனும் அமர்ந்து முகம்பார்த்துக் கொள்ளாமல் வாதம் செய்கிறோம்!” என்று கூறினார்.

தனது ஆயிரம் சீடர்களுடன் தொண்டனூருக்கு வந்தார் அருகதராஜன். ராமாநுஜர் தன் சீடர்கள் அனைவரையும் அவ்விடத்திலிருந்து நகர்ந்து செல்லச் சொன்னார். தாம் மட்டும் திரையின் ஒருபுறம் அமர்ந்தார். மற்றொரு புறத்தில் ஆயிரம் சீடர்களோடு அருகதராஜன் அமர்ந்தார். “நீங்கள் ஆயிரம் பேரும் என்னுடன் வாதம் செய்யலாம்! நான் தயார்!” என்றார் ராமாநுஜர்.

அருகதராஜனும் அவரது ஆயிரம் சீடர்களும் கணைகளைப் போலத் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் சரியாகப் பதிலளித்தார் ராமாநுஜர். அதே நேரம், ராமாநுஜர் முன்வைத்த எந்த வாதத்துக்கும் அருகதராஜனாலோ, அவரது ஆயிரம் சீடர்களாலோ சரியான பதிலை அளிக்க முடியவில்லை.
ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பேருடன் இவர் வாதம் செய்கிறார் என அறிய விரும்பிய அருகதராஜனின் சீடன் ஒருவன், திரைக்கு அந்தப்புறம் எட்டிப் பார்த்தான். பார்த்தால், அங்கே ராமாநுஜர் இல்லை. ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷன் அமர்ந்து வாதம் செய்துகொண்டிருந்தார். திடுக்கிட்டுப் போய் மயங்கி விழுந்தான்.

ராமாநுஜர் முன்வைத்த வாதங்களைக் கேட்ட அருகதராஜன், அவரது பாண்டித்தியத்தை உணர்ந்து கொண்டார். “சுவாமி! நீங்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் சரியானவையே. நீங்கள் சாதாரண மக்களிடம் பேராதரவு பெற்றிருந்ததால் உங்களுக்குத் தர்க்க, நியாய சாஸ்திரங்கள் தெரியாது எனக் கருதினேன். ஆனால் உங்களைப் போன்ற வேதாந்தி எவருமில்லை என இப்போது உணர்ந்தேன். என்னை மன்னித்து உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்று பிரார்த்தித்தார்.

மயக்கம் தெளிந்த அருகதராஜனின் சீடன் ராமாநுஜரிடம், “சுவாமி! நீங்கள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷனாக அல்லவா அமர்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டான். “அப்படியா? உன் கண்களுக்கு வேண்டுமானால் ஆயிரம் தலைகள் தெரிந்திருக்கலாம்!” என வினயத்துடன் சொன்ன ராமாநுஜர், “அப்படித் தெரிந்திருந்தால் அது எண்ணிறந்த தலைகளை உடையவனான எம்பெருமானின் அருள்!” என்றார்.“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அருகதராஜன்.

“எம்பெருமானை அளவிலடங்காத தலைகளை உடையவன்  ‘பஹுசிரா’ என்று போற்றுகிறார்கள். இங்கு தலை என்பது சிந்திக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. அதாவது, எண்ணிறந்த மனிதர்களால் எவ்வளவு சிந்திக்க முடியுமோ அவை அனைத்தையும் விட அதிகமாகச் சிந்திக்கவல்ல ஆற்றலை உடையவன் எம்பெருமான் என்பதைத் தான் எண்ணிறந்த தலைகளை உடையவன் என்று உருவகப்படுத்திக் கூறுகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட எம்பெருமான் ஆயிரம் பேருடன் வாதம் செய்யக்கூடிய சிந்தனையையும் ஆற்றலையும் அடியேனுக்கு வழங்கியதால், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் போல நான் தெரிந்திருக்கிறேன் போலும்!” என்றார். ராமாநுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே என்றாலும், அவர் பணிவுடன் இவ்வாறு விடையளித்தார்.

ராமாநுஜர் சொன்னது போல எண்ணிறந்த மனிதர்களின் சிந்திக்கும் திறனைக் காட்டிலும் அதிகத் திறனைக் கொண்டவராக விளங்கும் திருமால், ‘பஹுசிரா’ என்றழைக்கப்படுகிறார். பஹுசிரா என்றால் பல தலைகளை உடையவன் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 116-வது திருநாமம். “பஹுசிரஸே நமஹ” என தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நன்றாகச் சிந்திக்கும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

117. பப்ரவே நமஹ (Babhravey namaha)
ராமாநுஜரின் மறு அவதாரமாகக் கொண்டாடப்படும் மணவாள மாமுனிகள் ஆண்டாள் ரங்கமன்னாரை மங்களாசாஸனம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தம் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்போது அங்கே பிரம்மோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாளன்று ஆண்டாள் சேஷவாகனத்திலும், ரங்கமன்னார் கோவர்த்தன கிரிதாரியாகவும் காட்சி தருவது வழக்கம். அந்தக் காட்சியை மாமுனிகளும் அவரது சீடர்களும் கண்குளிரச் சேவித்தார்கள்.

அப்போது அவரது சீடர்களுள் ஒருவரான எறும்பியப்பா, “சுவாமி! பெருமாள் தானே எப்போதும் சேஷ வாகனத்தில் வருவார். இங்கு மட்டும் நாச்சியார் சேஷ வாகனத்தில் வருகிறாரே! என்ன காரணம்?” என்று கேட்டார்.அதற்கு விடையளித்த மணவாள மாமுனிகள், “இந்தப் பூமியை அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள்  ஐராவதன், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்ஜனன், புஷ்பதந்தன், சார்வபௌமன், சுப்ரதீகன்  தாங்கிக் கொண்டிருக்கின்றன.

பாதாளத்தில் ஆதிசேஷன் வடிவில் விளங்கும் திருமால், அந்த எட்டு யானைகளோடு சேர்த்து பூமியையும் தாங்கி நிலைநிறுத்துகிறார். அவ்வாறு ஆதிசேஷன் வடிவில் இருந்துகொண்டு பூமியைத் தான் எப்போதும் தாங்குவதை நமக்கு உணர்த்தவே, இங்கே பெருமாளே சேஷவாகனமாக வடிவம் எடுத்துக் கொண்டு, பூமியின் அவதாரமான ஆண்டாளைத் தன்மேல் சுமந்து கொண்டு வருகிறார்!” என்று விடையளித்தார்.

மற்றொரு சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா, “சுவாமி! ரங்கமன்னார் ஏன் கையில் கோவர்த்தன மலையுடன் காட்சி தருகிறார்?” என்று கேட்டார்.“இதே தத்துவத்தை விளக்குவதற்காகத் தான்!” என்றார் மாமுனிகள். “அதாவது, கோவர்த்தன மலை என்பது பூமிக்குப் பிரதிநிதி. பூமிதேவியை எப்போதும் தான் சுமந்து கொண்டே இருப்பதை நமக்கு உணர்த்தவே பூமியின் ஒரு பகுதியான கோவர்த்தன மலையைச் சுமந்து கொண்டு ரங்கமன்னார் காட்சியளிக்கிறார்!” என்று விளக்கினார்.திருமழிசைப்பிரானின் ஒரு பாசுரத்தையும் நினைவு கூர்ந்தார் மாமுனிகள்.

“நாகம் ஏந்தும் மேரு வெற்பை நாகம் ஏந்தும் மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே
இயன்றதே”
நாகமேந்து மேரு வெற்பு  நாகம் எனப்படும் சொர்க்க லோகத்தைத் தாங்கும் மேரு மலை. நாகம் ஏந்தும் மண்  நாகம் எனப்படும் எட்டு யானைகளால் (அஷ்ட திக்கஜங்களால்) தாங்கப்படும் பூலோகம். நாகம் ஏந்தும் ஆக  ஆதிசேஷன் என்னும் நாகத்தால் ஏந்தப்படும் திருமேனியை உடைய திருமால்.

(நாகம் ஏந்தும்) மாகம்  நாகம் எனப்படும் சுத்தமான ஆனந்தம் நிறைந்த வைகுந்த லோகம். மாகம் ஏந்து வார்புனல்  மாகம் எனப்படும் வானத்தால் தாங்கப்படும் ஆகாய கங்கை. மாகம் ஏந்து மங்குல்  வானத்தால் தாங்கப்படும் மேகம். ஓர் தீ  நம் வயிற்றில் இருந்து நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கச் செய்யும் தீயான வைச்ராவன அக்னி. வாயு ஐந்து  நம் உடலில் சஞ்சரிக்கும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய ஐந்து வாயுக்கள். ஏகம் ஏந்தி நின்ற நீர்மை  இவை அனைத்தையும் உண்டாக்கி, ஆதிசேஷன் வடிவில் இருந்து கொண்டு பாதாளத்திலிருந்தபடி திருமால் தாங்கி வருகிறார் என்றார்.

மேலும், தன்னுடைய முக்கியமான எட்டு சீடர்களை அழைத்து, “அஷ்ட திக்கஜங்களாகிய எட்டு யானைகள் பூமியைத் தாங்குவது போல, நீங்கள் எட்டு பேரும் இந்த வைணவ நெறியைத் தாங்கி வளர்க்க வேண்டும்!” என்று கூறி அவர்களை அஷ்டதிக் கஜங்களாக நியமித்தார். வானமாமலை ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், கோவில் கந்தாடை அண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளான் ஆகியோர் தான் அந்த அஷ்டதிக் கஜங்கள். இன்றும் அந்த எண்மரின் வழியில் வந்த குருமார்கள் வைணவ நெறியை வளர்த்து வருகிறார்கள்.

தம் சீடர்களுக்கு மாமுனிகள் விளக்கியது போல, பூலோகம், சொர்க்க லோகம், ஆகாயம், வைகுந்தம் என அனைத்துலகங்களையும் பாதாள லோகத்தில் ஆதிசேஷன் வடிவில் இருந்து கொண்டு திருமால் தாங்குவதால் ‘பப்ருஹு’ (Babhruhu) என்றழைக்கப்படுகிறார். ‘ப்ரு’ என்றால் தாங்குதல் என்று பொருள். அனைத்துலகங்களையும் தாங்குபவன் ‘பப்ருஹு’ என்றழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 117-வது திருநாமம்.

சேஷ வாகனத்தில் திகழும் ஆண்டாளையும், கோவர்த்தன மலையைத் தாங்கும் ரங்கமன்னாரையும் தியானித்துக் கொண்டு, “பப்ரவே நமஹ” (Babhravey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில் எந்தப் பாரமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்குத் திருமால் அருள்புரிவார்.

118. விச்வயோநயே நமஹ(Vishwayonaye namaha)

ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் சீதையோடும், லக்ஷ்மணனோடும், வானரர்களோடும், விபீஷணனோடும் ஆரோகணித்த ராமன் அயோத்திக்குச் செல்லும் வழியில் பிரயாகையில் இன்றைய அலகாபாத் உள்ள பரத்வாஜ ஆசிரமத்தில் விமானத்தை நிறுத்தச் சொன்னான். “நான் வனவாச காலத்தில் பரத்வாஜரின் ஆசிரமத்துக்குச் சென்றபோது அவர் எனக்கு விருந்தளிக்க விழைந்தார். ஆனால் அப்போது வனவாசம் பூண்டிருந்தபடியால், வனவாச காலம் முடிந்தபின் வந்து விருந்து உண்பதாக அவருக்கு வாக்களித்திருந்தேன். அதனால் அனைவரும் வாருங்கள். அவரது ஆசிரமத்தில் விருந்து உண்டு அவரை மகிழ்வித்துவிட்டு அயோத்திக்குச் செல்லலாம்!” என்றான் ராமன்.

அவ்வாறே பிரயாகையில் விமானம் நிறுத்தப்பட்டது. வானரர்கள் புடைசூழ சீதாராமர்கள் பரத்வாஜரின் ஆசிரமத்தினுள் நுழைந்தார்கள். பரத்வாஜர் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். தன் தவ வலிமையால் தேவதைகளை வரவழைத்து விருந்துக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்வித்தார். அப்போது அனுமனை அழைத்த ராமன், “அங்கே அயோத்தியில் பரதன் நமது வருகைக்காகக் காத்திருப்பான். நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்ற செய்தியை நீ பரதனிடம் போய்ச் சொல்லிவிடு. இங்கே விருந்தை முடித்துக் கொண்டு நான் விரைவில் வருகிறேன்!” என்றான்.

 அனுமனும் வானில் பறந்து அயோத்தியை அடைந்து பரதனிடம் ராமனின் வருகையைப் பற்றிய செய்தியைச் சொன்னார். சொல்லிவிட்டு மீண்டும் பிரயாகைக்குத் திரும்பினார் அனுமன். அனுமன் அப்படியே அயோத்தியில் தங்கிவிடுவார் எனக் கருதியிருந்த ராமன் மற்ற வானரர்களோடு விருந்துண்ணப் பந்தியில் அமர்ந்து விட்டான். பாதி பந்தி ஆகிக்கொண்டிருந்த நிலையில் அனுமன் ஆசிரமத்தினுள்ளே நுழைந்தபடியால், அவர் அமர்வதற்கு இடமில்லை. “அனுமனே! நீங்கள் அடுத்த பந்தியில் சாப்பிடலாம்!” என்றார் பரத்வாஜர்.

அதற்குள் அனுமனை “இங்கே வா!” என அழைத்த ராமன், தன் எதிரில் அமரச் சொன்னான். தான் உண்டு கொண்டிருந்த வாழை இலையின் நடுப்பகுதியைத் தன் கையால் வருடினான். அதில் இடைநரம்பு உண்டானது. (அதுவரை வாழை இலையின் நடுவில் நரம்பு கிடையாது.) இவ்வாறு வாழை இலையை இரண்டு பகுதிகளாகப் பிரித்த ராமன், தான் உண்டுகொண்டிருந்த உணவின் ஒரு பகுதியை எடுத்து இலையின் மற்றொரு பகுதியில் வைத்து அனுமனை உண்ணச் சொன்னான்.

இச்சம்பவம் வால்மீகி ராமாயணத்தில் இல்லாவிட்டாலும், இதைத் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்,“வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்துகாதல் ஆதரம் கடலினும் பெருகச்செய் தகவினுக்கில்லை கைம்மாறென்றுகோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நானென்ற ஒண்பொருளெனக்கும்ஆதல் வேண்டுமென்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!”

என்று பாடியுள்ளார். இப்பாசுரத்தில், “திருவரங்கநாதனே! நீ ராமாவதாரத்தில் அனுமனை வேறு சாதி என்றோ, விலங்கு என்றோ, குரங்கு என்றோ கூறி நிராகரிக்காமல், அவனிடம் மிகச்சிறந்த அன்பு வைத்து, அவனை அணைத்துக் கொண்டு, அவன் செய்த உதவிகளுக்குக் கைம்மாறில்லை எனக் கூறி, அவனோடு ஒரே இலையில் விருந்து உண்டாயே! அவ்வாறே மிகத் தாழ்ந்தவனான அடியேனையும் நீ அணைத்து ஏற்றருள வேண்டும் என வேண்டி உன் திருவடிகளை வந்தடைந்தேன்!” என்று பிரார்த்திக்கிறார். அவ்வாறே அரங்கனும் ஆழ்வாரை அணைத்து உகந்தான்.

இதிலிருந்து தன்னுடைய அடியார்கள் எக்குலத்தவர்களாக இருந்தாலும், சமுதாயத்தில் எந்த நிலையிலுள்ளவர்களாக இருந்தாலும், எத்தகைய இயல்புடையவர்களாக இருந்தாலும் அவர்களிடம் எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல் தன்னோடு அணைத்துக் கொண்டு அருள்பவராகத் திருமால் திகழ்கிறார் என்பதை அறிய முடிகிறதல்லவா?

‘விச்வம்’ என்றால் அனைவரையும் என்று பொருள். ‘யோநிஹி’ என்றால் அணைத்துக் கொள்பவன். அடியார்கள் அனைவரையும் தன்னுடன் அணைத்துக் கொள்வதால் திருமால் ‘விச்வயோநிஹி’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 118-வது திருநாமம்.
“விச்வயோநயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு எப்போதும் துணையாகத் திருமால் இருந்து அவர்களைக் காத்தருள்வார்.

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!