×

34 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நேரு ஓய்வு இல்லம் குடிமகன்களின் கூடாரமாக மாறிய அவலம்: இடிந்து விழும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 34 ஆண்டுக்கு முன் ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. தற்போது, குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. கட்டடம் எப்போது, இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். மாமல்லபுரம் சுற்றுலா தலம் யுனேஸ்கோ நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட புகழ் வாய்ந்த சுற்றுலா தலம். இங்குள்ள, அழகிய கடற்கரை கோயிலை ரசிக்கவும், பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், முகுந்தராயர் மண்டபம், கிருஷ்ணா மண்டபம், புலிக்குகை ஆகியவற்றை காணவும், கடற்கரையில் கால் நனைக்கவும், இங்கு விற்கqப்படும் வறுத்த மீனை ருசி பார்க்கவும், சனி, ஞாயிறு மற்றும் அaரசு விடுமுறை தினங்களிலும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும், மாமல்லபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழும் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். மேலும், மாமல்லபுரத்திற்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருசிலர் குடும்பத்தோடு ஓட்டல், ரிசார்ட்களில் 2 லிருந்து 4 நாட்கள் தங்கி ஆட்டோ மற்றும் கால் டாக்சியை வாடகைக்கு எடுத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஜாலியாக உலா வருவார்கள். கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரத்தில் குடிசையில் தான் ஓட்டல், ரிசார்ட்கள் இயங்கி வந்தன. அப்போது, சுற்றுலா பயணிகள் தங்க போதிய இடவசதி இல்லை. இதை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் நுழைவு பகுதிக்கு அருகே ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் என்ற பெயரில் 15 அறைகளுடன் கூடிய ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதை, மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மிக குறைந்த வாடகைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனை, சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. தங்குவதற்கு தொழிலாளர் நிதி செலுத்தும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வாடகையாக ₹140 ரூபாயும், சுற்றுலா பயணிகளுக்கு ₹750 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.  மேலும், பாழடைந்து இடிந்து விழும்நிலையில் உள்ளதால் யாரும் இங்கு தங்குவதில்லை. இதை பயன்படுத்தி, குடிமகன்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு மதுபாட்டில், வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்பளர்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், ‘மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களில் ஒருநாள் தங்குவதற்கு ₹ 15 ஆயிரத்தில் இருந்து ₹ 20 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. வசதியானவர்கள், கார்களில் வந்து தங்குகின்றனர். வசதி, இல்லாத சாதாரண சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் வந்து பல்லவ சிற்பங்களை கண்டு ரசித்து மீண்டும் அரசு பஸ்களிலேயே பயணிக்கின்றனர். இங்கு, குறைந்த கட்டணம் வசூலிக்க அரசு சார்பில் எந்தவொரு கட்டடமும் இல்லை. மாமல்லபுரம், நுழைவு பகுதிக்கு அருகே கடந்த 34 ஆண்டுக்கு ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. இங்கு, ஒரு நாள் தங்குவதற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கினர். கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் இங்கு தங்க அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு சுற்றுலா பயணிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு பாழடைந்த கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்….

The post 34 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நேரு ஓய்வு இல்லம் குடிமகன்களின் கூடாரமாக மாறிய அவலம்: இடிந்து விழும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Nehru rest home ,Mamallapuram ,Jawaharlal Nehru Rest Home ,Nehru Rest House ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...