×

நோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்

சிவகங்கையிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது சதுர்வேதமங்கலம். பண்டைய காலத்தில் ‘மட்டியூர்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னரால், 4 வேதங்களையும் ஓதும் வேத விற்பன்னர்களுக்கு இந்த ஊர் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் ‘சதுர்வேதமங்கலம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மூலவராக ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் பழமையான சிவபெருமான் கோயில் உள்ளது. மூலவராக ருத்ரகோடீஸ்வரர் உள்ளார். கோயிலில் சித்தி விநாயகர், முருகன், ஆத்மநாயகி, சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கு அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள் இருப்பது கோயிலின் சிறப்பாகும். 5 நிலைகளுடன் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோயில் அருகே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக எலுமிச்சை மரம் உள்ளது. கோயிலின் எதிரில் ‘அரவன்’ என்ற பாம்பு வடிவில் மலை உள்ளது. சிவபெருமானை எப்போதும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பிரம்மனே பாம்பு வடிவ மலையாக மாறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்தர் முத்துவடுகநாத சுவாமிகள் தனது பாடலில் ருத்ரகோடீஸ்வரர் குறித்து பாடியுள்ளார்.

தல வரலாறு

இந்த கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் தெரியவில்லை. புராண காலத்தில் ஒரு யாகம் செய்வது தொடர்பாக பிரம்மாவுக்கும்,  துர்வாச முனிவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துர்வாச முனிவர் பிரம்மாவை சபித்தார். சாபவிமோசனம் பெற வேண்டி சிவபெருமானை பிரம்மன் வழிபட்டு வந்தார். ஆங்கீரசர் என்ற முனிவரின் ஆலோசனையின்படி, சதுர்வேதமங்கலம் பகுதியில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து பிரம்மன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு அப்பகுதியில் கோயில் எழுப்பப்பட்டது. இதன் பின்னர் சிவபெருமானை சாட்சியாக வைத்து கலைமகளை பிரம்மா திருமணம் செய்தார். திருமணத்திற்கு சிவபெருமானின் அம்சமான கோடி ருத்திரர்கள் வந்தனர். அவர்கள் கோயிலிலிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்ததால், சிவபெருமானுக்கு  ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் மூலவர் மீது சூரியனின் கதிர் விழும் வகையில் இக்கோயிலின் சன்னதி கட்டப்பட்டுள்ளது. மாசி மற்றும் மார்கழி மாதங்கள் விசேஷ மாதங்களாகும். மாசி மாதம் 10 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. மார்கழி மாத அதிகாலை பூஜை விசேஷமாக நடக்கிறது. விழா காலங்களில் பக்தர்கள் இங்கு அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு மூலவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்கின்றனர். அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கேற்றி சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல் காணிக்கை செலுத்துகின்றனர்.

சரபேஸ்வரருக்கு வடை, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வணங்குகின்றனர். லவ, குசன் இந்த தலத்தில் அஸ்வமேத யாகம் செய்துள்ளனர். கோடி ருத்ரர்கள் வணங்கிய இந்த கோயிலில் வேண்டி கொண்டால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் மூலவரை வணங்கினால் குலம் சிறக்கும். நோய்கள், கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது.

Tags : Rudrakoteswarar ,
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!