×

மணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு

நூறு தெய்வத்தை வழிபடுவதும் சரி, ஒரு கன்னியை வழிபடுவதும் சரி என்கிற வார்த்தை கிராமங்களில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தளவுக்கு கன்னி வழிபாடு கிராம மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது. கன்னி என்பது இங்கே பெண்ணை மட்டும் குறிக்கும் வார்த்தை அல்ல. மணமுடிக்காதவர்கள் அனைவருமே கன்னிதான். ஆண், பெண் என்ற பாகுபாடு இங்கில்லை. இடி, மின்னல், பெருவெள்ளம், மண் சரிவு, குளத்தில் மூழ்கிப் போவது, மரம் விழுந்து மாண்டு போதல் முதலான இயற்கை இடர்பாடுகளால் உயிர் நீத்து போவது, காலரா, அம்மை, காசநோய், புற்றுநோய் முதலான நோய்களினால் இறந்து போவது, பாம்பு, தேள் முதலான விஷ ஜந்துக்களால் ஏற்படும் இறப்பு, மோட்டார் வாகனங்களாலும், மின்சாரம் தாக்குதல் போன்றவற்றாலும் இறந்து போகும் மணமுடிக்காத நபர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இங்கே உலா வருவதாகவும், அந்த ஆத்மாவை சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இறந்த பின்னும் அவன் நினைவுகளால் மனம் நொந்துபோன உறவுகள் தங்கள் பாசத்தின் வெளிப்பாடாக இறந்துபோன நபரின் ஆத்மாவை மகிழ்விக்கும் விதமாக
செய்யப்படும் வழிபாடே கன்னி வழிபாடு. இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள்.

இதனாலேயே தெய்வ நிலைக்கு அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். என்று இன்றும் நம்பப்படுகிறது. ‘‘ஆயுசு முடியுமுன்னே எமன் அவன் ஜீவனு எடுத்திட்டான். உடம்ப நம்ம எரிச்சிட்டோம். அவன் ஆத்மா எங்க போகும். இங்க தான் சுத்தும்.’’ ‘‘இங்கத்தான்னா எங்க தாத்தா, ’’ ‘‘குளத்தாங்கரை, ஆத்தாங்கரை, கிணத்தாங்கரை மயானகரை, நாலு முக்கு சந்தி, நம்ம வீடு’’ இப்படி பெரியவர்கள் இன்னும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள். இதில் 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இறந்தால் அவர்கள் துடியான கன்னியாக இருப்பதாக கூறுகிறார்கள். கன்னியாக வழிபடப்படுபவர் இறந்து ஓர் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். அதன் பிறகு தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டு சுவற்றிற்கு சுண்ணாம்பு அல்லது வண்ணம் தீட்டி சுத்தப்படுத்த வேண்டும்.

அந்திக் கருக்கலில் வீட்டின் பூஜை அறையில் கன்னி மூலையில், பூஜை அறை இல்லாத வீட்டில் தென்மேற்கு மூலையில் அதுதான் கன்னிமூலை. அந்த கன்னி மூலையில் குத்து விளக்கேற்றி, விளக்கின் கீழே இளநார்பெட்டி வைப்பர். இதை தென் மாவட்டங்களில் கட்டுப்பெட்டி என்றும் கெட்டுப்பெட்டி என்றும் கூறுகின்றனர். புதுத்துணி எடுத்து அதை அன்றைய தினம் காலையில் நனைத்து காய வைத்து மாலையில் அந்த துணியை சுருட்டி முறுக்கி மூலையில் வைக்க வேண்டும். ஆண் என்றால் எந்த மாதிரி ஆடை அணிவாரோ அது போன்றும் அதற்கு துணையான பொருட்கள் குறிப்பாக மணிபர்ஸ், வாசனை திரவியம், முகப்பவுடர் முதலான பொருட்களும், பெண்கள் என்றால் சேலை முதலான துணிமணிகளும், வளையல், மை, நகப் பூச்சு, நெத்திச் சுட்டி, ஒட்டியாணம் என்று அந்தப் பெண் அணிந்து மகிழும் அனைத்து பொருட்களும் எடுத்து வைக்க வேண்டும். சிலர் இறந்தபெண் அதிகம் நேசிப்பாள் என்பதற்காக தாயக்கட்டை, பல்லாங்குழி முதலான விளையாட்டு உபகரணங்களையும் கூட வைப்பதுண்டு.

இவை அனைத்தும் வைப்பதற்கு முன்பு இறந்த போனவரின் உருவப் படத்தை மூலையில் வைக்க வேண்டும். அந்த படத்திற்கு சந்தன குங்குமம் கொண்டு பொட்டு வைத்து படத்திற்கு பிச்சிப்பூ மாலை (ஜாதி மல்லி) சூட்ட வேண்டும். சிலர் அதிகப்படியான தொகைக்கு ரோஜாப்பூ ஆரம் வாங்கி போடுவதுண்டு. அது கூடாது. கன்னி வழிபாட்டிற்கு பிச்சிப்பூவும், மட்டிப் பழம் (ஏலக்கி), செவ்வாழை, நாட்டுப்பழம் போன்றவற்றை மட்டும்தான் வைக்கப்பட வேண்டும். கருப்பு நிறத்தில் துணியோ, வேறு பொருட்களோ வைக்கக் கூடாது. இவற்றை இறந்தவர் படத்திற்கு முன்பு இலை போட்டு அதில் வைக்க வேண்டும். ஐந்து தலை வாழை இலைகளை போட வேண்டும். முதலில் உடைத்த தேங்காய் மற்றும் 5, 7, 9 எண்ணிக்கையில் பழங்கள் வைக்க வேண்டும். அதோடு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு அதிலுள்ள மூன்று கண்ணில் ஒரு கண் பகுதியில் துவாரமிட்டு, அதிலுள்ள தண்ணீரில் சிறிது பச்சரிசி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை, சிறிது மஞ்சள்தூள் ஆகியவற்றை இட வேண்டும்.

அடுத்த இலையில் அரிசிச் சாதம், குழம்பு, கூட்டு வகைகளுடன் பரிமாற வேண்டும். அதில் இறந்த நபருக்கு பிடித்தமானவை அதிகம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூன்றாவது இலையில் எல்லா பழ வகைகளிலும் ஒவ்வொன்று வாங்கி வைத்திருக்க வேண்டும். நான்காவது இலையில் பலகாரங்கள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இனிப்புகளே இடம் பெற வேண்டும். பூஜைக்குரியவர் காரம் விரும்புவார் என்றால் ஒரு வகை பலகாரம் மட்டும் காரமாக இருக்கலாம். ஐந்தாவது இலையில் துணிமணிகள் என வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது கற்பூரம் காட்டக் கூடாது. வீடு முழுக்க சாம்பிராணி வாசமே இருக்க வேண்டும். மணி ஓசையை எழுப்பக் கூடாது. அப்போது நிசப்தமாக இருக்க வேண்டும். இறந்துபோனவருக்கு மிகவும் பிடித்த உறவுக்காரர்களில் ஒருவர் மீது அவர் சக்தி வந்திறங்கி ஆடி பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. இது சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் இந்த மாதிரி இல்லை. பெரும்பாலான வீடுகளில் அந்த நேரம் பல்லி ஓசை எழுப்பும் என்றும் சொல்கிறார்கள்.

சிலர் அன்றைய தினம் எங்களது கனவில் வந்து பேசுவான் என்றும் கூறுகிறார்கள். மறுநாள் கட்டுப்பெட்டி என்ற அந்த இளநார்பெட்டியில் மஞ்சள் கிழங்கு, துணிகள், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து கன்னி மூலையில் உயரமான இடத்தில் கட்டி  வைத்து விடவேண்டும். அடுத்த வருடப் பொங்கலன்று வீட்டை சுத்தம் செய்து காலையில் கன்னிப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். அதற்குள் வைத்திருந்த துணியை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அணிந்து கொள்வார். இந்தக் கன்னி வழிபாடு தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர் வசதிக்கு ஏற்ப வழிபடப்படுகிறது. சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி நகரம் வரை தொடர்ந்து வருகிறது.

தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் தை மாதத்தில் வணங்கும் வழக்கம் தென் மாவட்டங்களில் மிகுதியாக காணப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும். துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்குவைத்த துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண்.

தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்பது கூட கன்னி வழிபாட்டில் முக்கிய அம்சம் ஆண் கன்னியை வழிபடும் அக்கா, தங்கையர்கள், பெண் கன்னியை வழிபடும் அண்ணன், தம்பிகள் வளமுடனும், பலமுடனும் திகழ்கிறார்கள் என்கின்றனர், கன்னி வழிபாடு செய்வோர். பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால்கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் கேட்கலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது. குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.

கன்னி வழிபாடுகளின் நிகழ்வுகள் பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல மனதை உருக்குவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த ஒருவர் மாடு முட்டியதில் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவாடை சட்டை எடுத்து வைத்துக் கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவாடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை, ஜாக்கெட் வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னி குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி, கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.  

புதிதாக கன்னிக்கு பூஜை செய்பவர்கள், கன்னியை வீட்டிற்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று கருதி அதற்கான பூஜை செய்வார்கள். அந்த பூஜை இதே போலத்தான் என்றாலும். முன்னதாக வாசலில் ஒரு வெள்ளை நூலை, வாசலை இடை மறித்துக் கட்டி விடுவார்கள். பூஜை உச்சமாக நடந்து கொண்டிருக்கும் போது அந்த நூல் தானே அறுந்து விழும். எவரோ ஒருவர் கத்திரிக்கோலைக் கொண்டு வெட்டி விட்டது போல இரண்டாக முறிந்து போகும். அவ்வாறு நடந்ததும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ அல்லது பங்காளிகளில் எவரேனும் ஒருவரோ அருள் வந்து ஆடுவர். இவ்வாறு கன்னியை வீட்டிற்குள் ஏற்றும் பூஜை நடக்கிறது.  இறந்தது போனவர் செய்யும் மகிழ்ச்சியான சேட்டைகளையும், அவர் பேசிய வார்த்தைகளையும், நையாண்டிகளையும் சொல்லி, நினைவு கூர்தல் நடக்கும். அது மட்டுமன்றி, அந்தத் துயர சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன் அவர் செய்த செயல்கள், உச்சரித்த சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப உறவுகள் கூறி அவர் பால் தங்களது நினைவுகள் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பேசி அவரைப்பற்றி அந்த பூஜையின் போது நினைவு கூர்ந்து கொள்வர்.
பின்னே நடப்பதை முன்னே கனவில் வந்து கன்னி சொல்லிவிடும் என்கிறார்கள் வழிபடும் அன்பர்கள். இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி  பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது கன்னி.

சு.இளம் கலைமாறன்

Tags : Virgin ,lovers ,
× RELATED கன்னி