×

அரசியலில் அந்தர்பல்டி எல்லாம் சகஜமப்பா ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவிய மாஜிக்கள்

சென்னை: அரசியலில் அந்தர்பல்டி எல்லாம் சாதாரணமப்பா என்று கூறும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது இருந்த பலரும் இன்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக இருந்து சசிகலா உத்தரவால் பதவி விலகினார். உடனே, அவர் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, மாபா.பாண்டியராஜன், தூத்துக்குடி சண்முகநாதன், பரஞ்ஜோதி மற்றும் வேலூர் அப்பு, விழுப்புரம் மோகன், சேலம் செம்மலை, பூந்தமல்லி மணிமாறன் ஆகியோர் செயல்பட்டனர். அவர்களில் கே.பி.முனுசாமிதான், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார். ஆனால், எடப்பாடி முதல்வராகி, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானதும் பலர் அரசியல் லாபத்துக்காக ஓ.பன்னீர்செல்வத்தை அப்படியே விட்டு விட்டு எடப்பாடி அணிக்குத் தாவினர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால், அமைச்சர்கள் பலரும் தங்கள் இஷ்டம்போல செயல்பட அனுமதி அளித்தார். முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என்று பலரும் கேட்ட உதவிகளை செய்து கொடுத்தார். அதில்தான் அப்போது அமைச்சராக இல்லாமல் இருந்த கே.பி.முனுசாமிக்கும், அவரது மாவட்டத்தில் கல் குவாரி உள்பட பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குத் தாவி விட்டார். அதேபோலத்தான் செம்மலை, சண்முகநாதன், பரஞ்ஜோதி உள்பட பலரும் அணி தாவி விட்டனர். இரு நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், எந்த அதிகாரமும் இல்லாத துணை முதல்வர் பதவி மட்டுமே தன்னிடம் இருந்தது. துணை முதல்வர் பதவியை வைத்து எந்த உதவியையும், யாருக்கும் செய்ய முடியவில்லை. ஆனால் முதல்வர் பதவிக்கு அதிகாரம் அதிகம் இருந்தது என்று கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் அணி தாவியது குறித்து போட்டு உடைத்தார். பணத்துக்காகவும், பதவிக்காகவும் பலரும் அணி தாவி விட்டதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்கின்றனர் அதிமுகவினர்….

The post அரசியலில் அந்தர்பல்டி எல்லாம் சகஜமப்பா ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவிய மாஜிக்கள் appeared first on Dinakaran.

Tags : Anderbaldi ,Sakajamappa OPS ,Edabadi ,Chennai ,Anderbulty ,Bannerselvam Darmayyam ,Edapadi ,Sakajamappa ,Edabadi Magics ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்