×

ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

சென்னை: ரூ.1 லட்சத்திற்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்த விவகாரத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். சென்னை அமைந்தகரையில் தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளராக பி.ராஜசேகரன் என்பவர் உள்ளார். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது. சென்னையில் அமைந்தகரை, வில்லிவாக்கம், ஜே.ஜே.நகர் என 6 இடங்களில் கிளைகள் உள்ளது.இந்த நிதி நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன் இந்த நிதிநிறுவனம் பெயரில் வசீகர விளம்பரம் வெளியானது. அதில், எங்கள் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்று சமூக வலைதளங்கள் மூலம் வெளியானது. இந்த விளம்பரத்தை நம்பி கடந்த மார்ச் மாதம் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக கடந்த மே 6ம் தேதி ஆரணி அருகே சேவூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் கிளை ஒன்றை திடீரென தொடங்கப்பட்டது. அந்த கிளையில் விளம்பரத்தில் அறிவித்தப்படி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.36 ஆயிரம் வட்டி அளிப்பதாக கூறி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தேசிய வங்கிகளே மிக குறைந்த வட்டி அளிக்கும் நிலையில், ரூ.1 லட்சத்திற்கு சாத்தியம் இல்லாத வகையில் 36 சதவீதம் வட்டி தருவது சாத்தியமற்றது என பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. அதன்படி பொதுமக்கள் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி ஆரணி ஆருகே உள்ள சேவூர் பகுதியில் இயங்கி வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன அலுவலகத்தில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில், சேவூர் கிளையில் மட்டும் ரூ.1.50 கோடிக்கு மேல் பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் இந்த நிதி நிறுவனம் சார்பில் பொதுமக்கள் யாரிடமும் பணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் இதேபோன்ற திட்டம் அமல் படுத்தப்பட்டு ரகசியமாக மக்களிடமிருந்து முதலீடு செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த மே 24ம் தேதி சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 26 இடங்களில் இருந்து மோசடி தொடர்பாக 6 லேப்டாப்கள், 44 செல்போன்கள், 60 கிராம் தங்கம் நகைகள், 2 சொகுசு கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி ரொக்கம் பணம், 11 வங்கி கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு, உஷா, ஹரிஷ், ராஜசேகர், செந்தில்குமார், பட்டாபிராமன், மிக்கல்ராஜ் ஆகிய 8 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 420, 120(பி) ஆர்பிஐ ஆக்ட் 58(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணக்காய்வு செய்தனர். அதில், பொதுமக்களிடம் இதுபோல் பல வசீகர விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளான பெண் உட்பட 6 போரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்….

The post ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Arrutra Gold Finance Company ,Economic Crimes Division ,CHENNAI ,Gold Fund ,Arudra Gold Fund ,Squad ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...