கோயில்களில் சிலர் தன்னைத்தானே சுற்றி வணங்குகிறார்களே, இது சரியா? - கே.விஸ்வநாத், அல்சூர்.

சரியே. ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரின் அத்வைத தத்துவம். அதாவது நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறான், கடவுள் வேறு, நாம் வேறு  அல்ல, நமக்குள்ளேயே இருக்கும் பரம்பொருளை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே தன்னைத்தானே சுற்றி வணங்குகிறார்கள். அதே நேரத்தில்  கோயில்களுக்குச் செல்லும்பொழுது இறைவனின் சந்நதியையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

அதோடு தன்னைத்தானே சுற்றி வணங்குவதிலும் தவறில்லை. இதனை அறிவியல் பூர்வமாக உணர்த்தும் விதமாக நாம் வாழுகின்ற இந்த பூமி  தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தனக்குள் உறையும் பரம்பொருளை உணர்ந்து கொள்ளும் விதமாக மனிதன்  தன்னைத்தானே சுற்றி வணங்குவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

நவகிரகங்களின் தோஷத்திற்காக பரிகார பூஜை செய்யும்பொழுது ராகு காலம், எமகண்டம் பார்க்க வேண்டுமா? -ர. சேதுராமன், திருவூர்.

பரிகார  பூஜை என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது. கிரகங்களின் மூலமாக நம்மைப்  பிடித்திருக்கும் தோஷம் நீங்குவதற்காக பூஜை செய்வது  என்பது தினசரி  சாதாரணமாக செய்யப்படுவது அல்ல. அதற்கென நாள் பார்த்து, தனியாக விசேஷ பூஜை  செய்யும் பட்சத்தில் ராகு காலம்,  எமகண்டம் பார்த்துத்தான் செய்ய வேண்டும்.  இந்த விதிமுறை பூஜை துவங்குவதற்கு மட்டுமே பொருந்தும்.

இதுபோன்ற காலங்கள்  வருவதற்கு முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ பூஜையைத் துவக்கலாம். பூஜை  துவங்கிய பின்னர் இடையில் இந்த  காலங்கள் குறுக்கிடுவதில் எந்தவிதமான தவறும்  இல்லை. தொடர்ந்து நடைபெறலாம். அதே போன்று பூஜையை முடித்து பிரசாதத்தை   ஏற்றுக்கொள்ளும்போது ராகு காலம், எமகண்டம் ஆகியவை குறுக்கிடாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிரஹங்களுக்கும் கோத்திரம் உண்டா?
 - நரசிம்மன், பல்லாவரம்.


உண்டு. நவகிரஹ ஹோமம் முதலான பூஜைகளின் போது நவகிரஹங்களை ஆவாஹனம் செய்யும்போது சொல்லப்படும் மந்திரங்களில் ஒவ்வொரு  கிரஹத்திற்குமான கோத்திரத்தை சொல்லியிருக்கிறார்கள் மகரிஷிகள். சூரியன் - காச்யப கோத்ரம், சந்திரன் - ஆத்ரேய கோத்ரம், செவ்வாய் -  பாரத்வாஜ கோத்ரம், புதன் - ஆத்ரேய கோத்ரம் (சந்திரனின் குமாரனே புதன்), குரு - ஆங்கீரஸ கோத்ரம், சுக்கிரன் - பார்க்கவ கோத்ரம், சனி -  காச்யப கோத்ரம் (சூரியனின் குமாரனே சனி), ராகு,கேது - பைடீநஸ கோத்ரம் ஆகியவை நவகிரஹங்களுக்கு உரிய கோத்திரங்களாக ஆவாஹன  மந்திரம் சொல்கிறது.

கோடிகளில் வாழ்பவர்கள் தர்ம ஆஸ்பத்திரி, இலவச கல்வி சாலை, கிராமங்களை தத்தெடுத்தல் ஆகியவற்றை செய்யும்போது, அவர்கள் உழைப்பில்  சேர்த்த பணம் வளருமா? குறையுமா?. - சுப.பசுபதி, திண்டுக்கல்.


இறைக்கிற ஊற்றுதானே சுரக்கும்! இதுபோன்ற தர்மகாரியங்களை செல்வந்தர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும்பொழுது, அவர்கள் உழைப்பில் சேர்த்த  பணம் நிச்சயமாக வளரத்தான் செய்யும். அதே நேரத்தில் இந்த தர்ம காரியங்களை என் உழைப்பில் நான் செய்கிறேன் என்ற எண்ணம் வந்துவிடக்  கூடாது. இறைவன் நம்மைச் செய்ய வைக்கிறான், ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக ஆண்டவன் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறான், எது ஒன்றும்  தன்னால் நடக்கவில்லை, அனைத்தும் ஆண்டவன் செயல் என்ற எண்ணமே மனதில் நிறைந்திருக்க வேண்டும். இது என்னுடையது, என் உழைப்பில்  வந்தது என்ற எண்ணம் மனதின் மூலையில் லேசாக இடம்பிடித்தால் கூட நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் செல்வம் குறையத் தொடங்கிவிடும்.  எல்லாம் அவன் செயல் என்று செயல்பட்டால் கடுகளவு செல்வமும் குறையாது, மாறாக மலையளவு செல்வம் பெருகும்.

பிரம்மஹத்தி தோஷம் - சாபம் விளக்கவும். பரிகாரம் உண்டா? - திருவேதம்பன், போரூர்.

ஒரு பிராமணனை கொலை செய்வது அல்லது அவனது இறப்பிற்குக் காரணமாக இருப்பது அல்லது அவனது மனம் ஒடிந்துவிடும் அளவிற்கு துரோகம்  செய்வது ஆகியவற்றால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். இங்கே பிராமணன் என்பது பிறப்பின் அடிப்படையில் சொல்லப்படுவது அல்ல. நன்கு  கற்றறிந்தவர்கள், கற்பிப்பவர்கள், ஆசிரியர்கள், ஒழுக்க நெறி தவறாது வாழ்பவர்கள், குரு மகான்கள், மடாதிபதிகள் ஆகியோரைக் குறிக்கும்.

மேற்சொன்னவர்களுக்கு துரோகம் இழைத்தாலும், அவர்களின் மனம் ஒடிந்துவிடுமாறு நடந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் வந்து  சேர்ந்துவிடும். மேற்சொன்னவர்களால் கிடைக்கின்ற சாபம் பிரம்ம சாபம் ஆகும். சாபத்திற்கு விமோசனம் உண்டு, பரிகாரம் செய்வதன் மூலமும்,  தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதன் மூலமும் சாபத்திலிருந்து விடுபட இயலும். ஆனால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து அத்தனை எளிதாக  விடுபட இயலாது. அதனால் உண்டாகும் கஷ்டங்களை முழுமையாக அனுபவித்துத்தான் விடுதலை பெற இயலும்.

கோயில் குளத்தில் குளிக்க இயலாத பட்சத்தில் கால்களை நனைத்துவிட்டு தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாமா?. - அயன்புரம் த. சத்தியநாராயணன்.

செய்யலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் குளத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலோ, கோயிலில் உள்ள குளம் குளிக்க இயலாத  அளவிற்கு அசுத்தமாக இருந்தாலோ அல்லது குளத்தில் ஸ்நானம் செய்ய முடியாத அளவிற்கு நமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ கால்களை  நனைத்துவிட்டு தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்வதில் தவறில்லை. “கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே ஸிந்து காவேரீ  ஜலேஸ்மின் சந்நிதிம் குரு:” என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தலையில் குளத்து நீரை புரோக்ஷித்துக் கொள்வது முழுமையான பலனைத்  தரும்.

பெண்கள் தலைவிரித்தபடி ஆலயம் வருவது சரியா? நெற்றியில் கடுகளவிற்கும் சிறியதாக பொட்டு வைப்பது முறையா?- சு. கௌரிபாய், பொன்னேரி.

சரியல்ல. ஆலயத்திற்கு வரும்போது மட்டுமல்ல, பெண்கள் எப்போதுமே தலைமுடியை விரித்தபடி இருக்கக் கூடாது.  ஸ்நானம் செய்து தலைமுடியை  உலர வைக்கும்போது கூட நுனியில் சிறியதாக முடிந்திருக்க வேண்டும். அதேபோன்று நேர்வகிடு எடுத்து தலைவாரி பின்னல் இட்டிருக்க வேண்டும்.  மூக்கின் நுனி, புருவமத்தி தலைவகிடு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு தலைவாரி பின்னலிட்டிருக்கும்  பெண்களை எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை.

உடல் ஆரோக்யம் கருதியாவது இக்காலத்திய இளம்பெண்கள் பழங்காலத்திய நடைமுறையை பின்பற்ற வேண்டும். நெற்றிப்பொட்டு என்பது நன்றாக  பளிச்சென்று கண்களுக்குத் தெரிகின்ற அளவில் அமைந்திருக்க வேண்டும். அதாவது அந்தப் பெண்ணின் வலது கை மோதிர விரலின் நுனியின்  அளவில் அமைய வேண்டும். புருவமத்திக்கு நேராக சற்று மேலே நெற்றியில் வைக்க வேண்டும். புருவத்திற்குக் கீழே பொட்டு வைப்பது தவறு.  வைத்துக்கொள்ளும் பொட்டு என்பது ஸ்டிக்கர் பொட்டாக இருப்பது தவறு.

சுத்தமான மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமப் பொட்டாக இருக்க வேண்டும். மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமப் பொட்டினை நடு நெற்றியில்  வைக்கும்போது மனதில் உண்டாகும் காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்கள் கட்டுப்படுத்தப்படும். கோபதாபம் தணிந்தாலே உடல் ஆரோக்யம்  பெறும். பெண்கள் தலைவாரி பின்னலிட்டுக் கொள்வதிலும், பொட்டு வைத்துக் கொள்வதிலும் அவர்களின் உடல் ஆரோக்யம் அடங்கியிருக்கிறது என்ற  உண்மையைப் புரிந்துகொண்டால் எந்தவிதமான பிரச்னையும் எழாது.

கடந்த காலங்களில் பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்கியதன் காரணம் என்னவாக இருந்தது? - மீனாவாசன், சென்னாவரம்.

கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்காகத்தான் கோயில்கள் உருவாக்கப்பட்டன. தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி எல்லோரும் ஒன்றிணைந்து  இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் இடமே ஆலயம். தான், தனது குடும்பம் என்று நின்று விடாமல் நாடு நன்றாக இருக்க வேண்டும், நாட்டில் பிரதி  மாதம் மும்மாரி பொழிய வேண்டும், நீர்நிலைகள் நிரம்ப வேண்டும், பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவை காணாமல் போக வேண்டும், கொலை, கொள்ளை,  கற்பழிப்பு முதலான குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டும், நீதி தழைக்க வேண்டும், பொதுமக்கள் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் வாழ  வேண்டும் என்ற பொதுவான பிரார்த்தனைகளை முன்னிறுத்தி மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இறைவனைத் தொழுவதற்காக ஏற்படுத்தப்பட்டதே  ஆலயங்கள்.

அதேபோன்று காதுகுத்தல் முதல் கல்யாணம் வரை எல்லா விசேஷங்களையும் ஊருக்குப் பொதுவான ஆலயத்தில் வைத்து நடத்த வேண்டும்,  அவ்வாறு நடத்தும்போது ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து அவர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும். வெள்ளம், பஞ்சம் முதலான இயற்கைச்  சீற்றங்களின்போது எல்லோரும் ஆலயத்தில் தஞ்சம் அடைய வேண்டும். ஆலயத்தில் பல்வேறு வழிகளில் தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அந்தத்  தானியங்களை கஞ்சியாக காய்ச்சி எல்லோரும் வயிற்றுப் பசியினை போக்கிக் கொள்ள வேண்டும்.

இறைவன் சந்நதியில் யார் பெரியவன் என்ற பேதம் ஏதுமின்றி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்ற எண்ணத்துடன் ஒற்றுமையாக வாழ  வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்நாட்களில் ஊருக்கு நடுவில் ஆலயங்களை பிரம்மாண்டமாக எழுப்பி வைத்தார்கள். ஆனால், இன்று நாம் அந்த  நோக்கங்களை எல்லாம் மறந்து நான், எனது என்ற எண்ணத்துடன் தனிப்பட்ட முறையில் நமது பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் விதமாக  ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகிறோம்.

காதுகுத்தல் விழாவினைக்கூட ஹோட்டல்களில் நடத்தும் கலாச்சாரம் பெருகிக் கொண்டிருக்கிறது. நமது பணபலத்தினையும், படைபலத்தினையும்  வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டு விசேஷங்களை நடத்துகிறோம். எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்ற எண்ணம்  தற்போது அறவே காணாமல் போய்விட்டது. பொதுமக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு துணைசெய்யும் வகையில் அந்நாளில்  ஆலயங்கள் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டன என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.

திருமணம் முதலான விசேஷங்களில் ஹாரத்தி சுற்றுவது ஏன்? பின் அதை வாசலில் உள்ள கோலத்தில் கொட்டுவது ஏன்? - தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

ஹாரத்தி சுற்றுவது என்பது திருஷ்டி சுற்றிப்போடும் விதமாக திருமணம் முதலான விசேஷங்களில் செய்யப்படுகிறது. மஞ்சளில் சுண்ணாம்பும்  தண்ணீரும் கலந்து அதனைச் சுற்றிவிட்டு நெற்றியில் திலகமிட்டு பின்பு அதனை வாயிலில் உள்ள கோலத்தில் கொட்டுவார்கள். ஒரு சிலர் ஹாரத்தி  சுற்றும் போது அதில் கற்பூரம் ஏற்றியும் சுற்றுவார்கள். கண் திருஷ்டிக்காக பூசணிக்காய் சுற்றும்போது அதன் மேல் கற்பூரம் ஏற்றி சுற்றுவார்கள்  அல்லவா, அதுபோல திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக ஹாரத்தி சுற்றி வாசலில் கொட்டுகிறார்கள்.

பூசணிக்காயை சுற்றி முடித்த பின்னர் வாசலில்தானே போட்டு உடைப்பார்கள்.? அதே போல ஹாரத்தியையும் சுற்றி முடித்த பின்னர் வாசலில்  சென்று ஊற்றி விடுகிறார்கள். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் முதலானவற்றை திருஷ்டி சுற்றிப்போடுவது ஆண்களின் செயலாகவும், ஹாரத்தி  சுற்றுவது என்பது பெண்களுக்கான கடமையாகவும் வைத்திருக்கிறார்கள். ஹாரத்தியை ஆண்களும், பூசணிக்காய் முதலானவற்றை பெண்களும்  சுற்றக்கூடாது. மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த அந்த ஹாரத்திக்கு நோய்தொற்றுக் கிருமிகளை விரட்டும் சக்தி உண்டு. எந்தவிதமான நோய்தொற்றுக்  கிருமிகளும் வீட்டிற்குள் அண்டக் கூடாது என்பதற்காக நமது முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தினை வைத்திருக்கிறார்கள்.

மாட்டுப்பெண் என்று மருமகளை அழைக்கிறார்களே... புகுந்த வீட்டில் பெண் மாடு போல் உழைக்க வேண்டும் என்பதை இந்த பெயர் உணர்த்துகிறது  என்று பொருள் கொள்ளலாமா? - நா. சுப்ரமணியன், திருமங்கலம்.

தவறு. நாம் பெற்ற மகளுக்கு மாற்றாக நம் வீட்டிற்கு வருகின்ற பெண்ணை மாற்றுப் பெண் என்றழைத்தார்கள். மாற்றுப் பெண் என்பது திரிந்து  மாட்டுப்பெண் ஆகிவிட்டது என்று ஒரு சிலர் விளக்கம் அளிப்பார்கள். இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. உண்மையில் அந்த வார்த்தை நாற்றுப்  பெண் என்பதில் இருந்து உருவானது ஆகும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நடவு செய்வதற்காக, வயலில் ஓரமாக சிறுபகுதியில்  நாற்று விடுவார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்த நாற்றுகளைப் பறித்து வேறு இடங்களில் நடுவார்கள். அதாவது ஓரிடத்தில் விளைந்த நாற்றினைப் பறித்து  மற்றோர் இடத்தில் நடுகிறார்கள். அந்த நாற்று அங்கு செழித்து வளர்ந்து பலனைத் தருகிறது. தாங்கள் விளைந்தது ஓரிடம், தங்களிடமிருந்து  நெல்மணிகளை விளைவிப்பது மற்றோர் இடம் என்று அந்த நாற்றுகள் தங்கள் பணியினைச் செய்கிறது. இதேபோன்றுதான் பெண்களும். தாங்கள்  பிறந்து வளர்ந்தது ஓரிடம், அங்கிருந்து பிரிந்து வந்து மற்றோர் இடத்தில் குலம் தழைக்கச் செய்கிறாள்.

நாற்று எவ்வாறு தன் வாழ்க்கையை இன்னொரு இடத்தில் துவங்குகிறதோ, அதே போல அந்தப் பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையை பிறந்த  வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குச் சென்று துவங்குகிறாள். திருமண நாள் முதல் நாற்று போன்று பெண்ணின் வாழ்வு அமைவதால் அவள் நாற்றுப்  பெண் ஆகி, அது நாட்டுப்பெண் என்று திரிந்து இறுதியில் மாட்டுப்பொண்ணு ஆக மாறிவிட்டது. தமிழ் வார்த்தைகள் அத்தனைக்குள்ளும் அற்புதமான  பொருள் ஒளிந்திருக்கிறது.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

Tags : Some ,temples ,K.Viswanath ,Alsur ,
× RELATED வீடு, கோயில்களில் தீபம்ஏற்றி மக்கள் வழிபாடு