×

எமகதகன்: விமர்சனம்

அந்த கிராமத்திலுள்ள குடும்பத்தில் இருக்கும் மூத்த மகன் திருமணம் செய்தால், சில நாட்களில் அல்லது மாதங்களில் அவன் மரணம் அடைகிறான். காரணம், முன்னொரு காலத்தில் பஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபம். அவரது கடுமையான சாபத்தில் இருந்து தப்பிக்க, ஊர் மக்கள் அவருக்கு சிலை வைத்து கடவுளாக வழிபடுகின்றனர். எனினும், அந்த சாபத்தில் இருந்து மக்களுக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலை யில், சாபத்தை நம்பாமல் திருமணம் செய்த சில மூத்த மகன்கள், மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். வெளியூரில் இருந்து ஊருக்கு தனது காதலி ரஷ்மிதா ஹிவாரியுடன் வரும் கார்த்திக் ராம், ஊராரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், திடீரென அவர் மரணம் அடைகிறார். ஊர்க்கட்டுப்பாடு காரணமாக போலீஸ் அங்கு வர மறுக்கிறது. இதனால், தனது கணவனின் மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க ரஷ்மிதா ஹிவாரி முயற்சிக்கிறார். இதில் அவர் வெற்றிபெற்றாரா? கடவுளின் பெயரால் நடந்து வரும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன என்பது மீதி கதை.

கார்த்திக் ராம், ரஷ்மிதா ஹிவாரி ஜோடியின் காதல் வரம்பு மீறாமல் இருக்கிறது. தங்களின் கேரக்டருக்கு ஏற்ப மிக இயல்பாக நடித்துள்ளனர். பூசாரியாக வரும் ‘வட்டகரா’ சதீஷ், திடீர் வில்லனாக மாறியுள்ளார். ஹீரோவின் நண்பர் மனோஜ், காமெடி மூலம் கலகலக்க வைக்கும் புதியவர் கவனத்தை ஈர்க்கின்றனர். ஒளிப்பதிவாளர் எல்.டியின் கேமரா கிராமத்து அழகையும், அங்குள்ள வெள்ளந்தி மக்களையும் மிகவும் இயல்பாக காட்டியிருக்கிறது. விக்னேஷ் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையின் நகர்வுக்கு அவரது பின்னணி இசை கைகொடுத்துள்ளது. சில மர்மமான மரணங்களின் பின்னணியில் நிலமோசடி நடப்பது அதிர வைக்கிறது. கிஷன் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். குலதெய்வ மேன்மைகள் பற்றி சொல்லிவிட்டு, ‘கடவுளின் சாபம்’ என்ற பெயரால் நடத்தப்படுகின்ற சில பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டி இருக்கிறார். பூசாரி திருமணம் செய்த பெண்ணை, அடிக்கடி வேறு கோணத்தில் காட்டுவது மனதை உறுத்துகிறது.

The post எமகதகன்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Panjai ,Emagathagan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ் சினிமாவை கலக்கும் ரெடிமேட் பாடல்கள்