×

சிறுகளத்தூர் ஊராட்சியில் முன்மாதியாக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம்: அனைத்து ஊராட்சிகளுக்கு கொண்டுவர கோரிக்கை

குன்றத்தூர்: சிறுகளத்தூர் ஊராட்சியில் முன்மாதிரியாக அமைக்கப்பட்ட காய்கறித்தோட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகளத்தூர் ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய சிற்றூராட்சியாக சிறுகளத்தூர் ஊராட்சி உள்ளது. குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள, இந்த ஊராட்சி அலுவலகத்தை சுற்றிலும் உள்ள இடங்கள் ஆரம்பத்தில் காலி மைதானமாகவே காட்சியளித்தது. இதனைக்கண்ட ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன், அந்த இடங்களில்கூட காய்கறி தோட்டம் அமைத்து, மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற முடிவுசெய்தார். முதல் கட்டமாக, காலியாக உள்ள இடத்தை சுத்தப்படுத்தி, அவற்றில் முறையாக தண்ணீர் குழாய்கள் அமைத்து, தர்ப்பூசணி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், அரைக்கீரை, சிறுகீரை போன்ற கீரை வகைகளையும் பயிர் செய்தார். அவற்றிற்கு இயற்கை உரம் மட்டுமே இட்டு, தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டது. இதன் பலனாக தற்போது தினமும் இரண்டு முதல் மூன்று கிலோ வரை காய்கறிகள் விளைகின்றன. அவற்றை அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. காய்கறிகள் மட்டுமின்றி மா, வாழை, பலா, வேம்பு, புங்கை போன்ற மர வகைகளும் ஏராளமாக ஊராட்சி அலுவலகத்தை சுற்றிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு பயன்படும் வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன், காய்கறி தோட்டம் அமைத்து, மற்ற ஊராட்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழும் சிறுகளத்தூர் ஊராட்சியின் பணியை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இத்திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் பின்பற்றினால், அந்தந்த பகுதி மக்கள் பயனடைவார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது….

The post சிறுகளத்தூர் ஊராட்சியில் முன்மாதியாக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம்: அனைத்து ஊராட்சிகளுக்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kilthur Pavavadi ,Kuntarathur ,Villathatur ,
× RELATED பொய் வழக்கு போடுவேன் என போலீசார்...