×

கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி விழா : ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக் கடன்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி 1008 பக்தர்கள் மலர் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவறை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் தென்பழநி என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மலர் காவடி விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மலர் காவடி விழா நேற்று சிறப்பாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

காலை 10.30 மணிக்கு உமையாள் தேவி கார்த்தீஸ்வரன், மகாலட்சுமி முருகன், ராதா பழனி, அருணா சுப்பிரமணியன், பத்மாவதி சங்கரநாராயணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். 11 மணிக்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கோவை, கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள், கல்லிடைக்குறிச்சி சத்யஞான மகாதேவ தேசிக பரமார்ச்சார்ய சுவாமிகள், பாகம்பிரியாள் செல்வம்பட்டர் ஆகியோர் அருளுரை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஆயிரத்தெட்டு பேர் மலர் காவடிகள் எடுத்து கழுகாசலமூர்த்தி கோயிலை கிரிவலம் வந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நண்பகல் 12.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனையும், தொடர்ந்து மலர் காவடியில் கொண்டு வரப்பட்ட பூக்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது. சிறப்பு பூஜைகளை கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், சுப்பிரமணியன், செல்லக்கண்ணு, பரமேஸ்வரன், கல்யாண வீரபாகு, ராஜப்பா, அய்யப்பன் உள்ளிட்ட பட்டர்கள் முன்னின்று நடத்தினர். இதை திரளானோர் தரிசித்தனர். மகேஷ்வர பூஜைக்கு பிறகு அன்னதானம் நடந்தது. மலர் காவடி விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை விருதுநகர்  தூத்துக்குடி மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags : Flower kavitha ceremony ,Nakasalamurthy Temple ,lenders ,
× RELATED ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ₹1.5...