×

ஒற்றை தலைமை விஷயத்தில் தேனிக்காரரை ஓரங்கட்டும் தெற்கு இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பொதுக்குழு நெருங்கநெருங்க இலை கட்சியில் ஆளாளுக்கு கொடுக்கும் ஸ்டேட்மென்ட்டை பார்க்கும்போது தலை சுத்துது… இலை இரட்டையரில் ஒருவருக்கு திறமை இல்லை என்கிற அளவுக்கு கீழே இறங்கி வந்து பேசும் நிலை வந்துவிட்டதுபோல…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக் கட்சியில், மதுரை மாவட்டத்தை மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு என மூன்றாக இருக்காம். மாநகர செயலாளராக தெர்மகோல், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் மேயரான செல்லமானவர், மேற்கு மாவட்டத்திற்கு உதயமான மாஜி பொறுப்பு வகிக்கிறார்கள். தற்போதைய ஒற்றைத்தலைமை பிரச்னையில், ‘இணை’க்கு ஆதரவாக உதயமும், செல்லமானவரும் செயல்படுகிறார்கள். எல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இலை ஆட்சியில் மேலிடத்தின் ஆசீர்வாதத்தால் உதயமானவருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கரன்சி கொட்டியதாம். செல்லம் ஆதரிக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது. சமீபத்திய மாநிலங்களவை எம்பி தேர்தலின்போது தேனிக்காரரிடம் தனது மகனுக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பு முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டதாம். அதுதான் இணைக்கு ஆதரவான தற்போதைய நிலைக்கு காரணமாம். தவிர, தான் மாவட்டச் செயலாளராக ஒரு காலத்தில் கொடி பறக்க விட்டபோது, சாதாரண அணி பொறுப்பில் இருந்த தற்போதைய ஒருங்கிணைப்பு, மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை செல்லம் விரும்பவில்லையாம். இனியும் அவரை வளரவிட்டால் தன் அரசியல் வாழ்க்கையையே பாழாக்கிவிடுவார் என்று நினைக்கிறார். இதனால், கிழக்கு மாவட்டத்தில், பகிரங்கமாக கடந்த ஒரு வாரமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, இணைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, அவருக்கு ஆதரவாக தொண்டர்களையும் திரட்டி வருகிறாராம்.ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, ‘கட்சிக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும். அதற்கான முடிவு பொதுக்குழுவில் ஏற்படும். கட்சியின் சட்டவிதியை மாற்றுவது தவறில்லை. அது புதிதும் அல்ல. தென்மாவட்ட செயலாளர்கள் உள்பட 90 சதவீதம் பேர் ஒற்றைத்தலைமையை ஆதரிக்கிறோம். 2019ல் ஒற்றைத்தலைமை வேண்டும் என குரல் கொடுத்தேன். ஜானகி, ஜெயலலிதா அணி என இருந்தபோது, ஜானகி விட்டுக்கொடுத்து, கட்சியை காப்பாற்றினார். திறமையானவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். 89ல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் சேலம்காரர். அவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி’’ என்று ஆவேசமாக பேசினாராம்.அதேசமயம், தெர்மகோல் இதுவரை நேரடியாக எதுவும் காட்டிக் கொள்ளவில்லையாம். கட்சிக்குள் நடப்பதை அமைதியாக கண்காணித்து வருகிறாராம். சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். திறமையாளருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு சொல்லிட்டு, தேனிக்காரருக்கு கட்சியை நிர்வகிக்கும் திறமை இல்லை என்பதை போட்டு உடைத்துள்ளாராம். இதை கேட்ட தேனிக்காரர் டென்ஷனில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தென் மாவட்டத்தை பற்றி சொல்லிட்டீங்க.. வடமாவட்டத்துல யாருக்கு ஆதரவு அதிகமாக இருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் தேனி, சேலம் தரப்புகள் போஸ்டர் யுத்தம் நடத்தி வர்றாங்க. இந்த போஸ்டர் யுத்தம் திருவண்ணாமலை மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளதாம். திருவண்ணாமலையில் சேலம்காரரை ஆதரித்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியாக இருந்த வேலூரில் திடீரென ேசலம்காரருக்க ஆதரவான போஸ்டர்கள் முக்கிய சாலைகளில் உள்ள சுவற்றில் முளைத்துள்ளன. வேலூர் மாநகர் மாவட்டம், வேலூர் கிழக்கு பகுதி இலை கட்சி பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்காலமே என்ற வாசகத்துடன் சேலம்காரரின் படமும் இடம்பெற்றுள்ளது. சேலம்காரருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள 64 மாவட்ட செயலாளர்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்களும் அடக்கமாம். இதில் உள்ளுக்குள் எதிரும் புதிருமாக இருந்தாலும் கோணத்தை சேர்ந்தவரும், வீரமானவரும் கை கோர்த்துள்ளார்களாம். தேனியை துரத்த வேண்டும். சேலத்துக்கு ரத்தின கம்பள வரவேற்பு தர வேண்டும் என்று வடக்கு மாவட்டங்களும் முடிவு செய்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மன்னர் மாவட்டத்தில் உடை என்று தொடங்கும் காவல் நிலையத்தில் என்னதான் நடக்குதாம்…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் சில இடங்களில் கிராவல் மணல் அவ்வப்போது எடுக்கப்படுகிறது. அதன்படி கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் மொத்தமாக இடத்தை வாங்கி கிராவல் மணல் வெட்டி எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை ராமநாதபுரம் பகுதியில் இருந்து வரும் திரைப்பட இயக்குனர் பெயர் கொண்டவர் தீவிரமாக செய்து வருகிறார். இவரது வாகனங்களுக்கு டீசல் போட்ட பாக்கியை கேட்க சென்றவரை வாளை எடுத்து வெட்டி கொல்ல முயற்சி செய்துள்ளார். இது குறித்து புகார் அளித்த பிறகும் உடை என தொடங்கும் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்யவில்லை. அந்த காவல் நிலையத்தில் உள்ள பெண் எஸ்ஐ புகார் கொடுத்தவரை அழைத்து சமாதானமாக போக சொல்லியுள்ளார். பின்னர் இரண்டு தரப்பையும் அழைத்து பேசி கட்ட பஞ்சாயத்து செய்து அனுப்பியுள்ளார். பிரச்னையை சுமூகமாக முடித்த அந்த பெண் எஸ்ஐ மற்றும் சில போலீசாருக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்வீட் பாக்ஸ்களை கிராவல் மணல் கொள்ளை பார்ட்டி பரிசாக கொடுத்துள்ளார். இதுபோல் பல புகார்களுக்கு அந்த காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து தொடர்வதாக மன்னர் மாவட்டத்தில் பரவலாக தகவல் கசிந்தவண்ணம் உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post ஒற்றை தலைமை விஷயத்தில் தேனிக்காரரை ஓரங்கட்டும் தெற்கு இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Southern Leaf ,Thenikar ,
× RELATED தேனிகாரரின் செல்போன் எண்ணை பார்த்து...