×

ஆக்கிரமிப்பின் பிடியில் வெள்ளை மலை-பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை : சிவகங்கை அருகே வெள்ளை மலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை அருகே வெள்ளை மலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேர் பரப்பளவில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருமலை, கள்ளராதினிப்பட்டி, முத்தம்பட்டி, குறிச்சிப்பட்டி, கோவில்பட்டி, கூலிப்பட்டி, கட்டக்காளைப்பட்டி, மலம்பட்டி, கன்னிமார்பட்டி என வடக்கு திசையிலும் தெற்கு பக்கமாக சோணைப்பட்டி, மலை அழகிச்சிப்பட்டி, வில்லிப்பட்டி, திருமன்பட்டி, மேலப்பூங்குடி, வலையராதினிப்பட்டி ஆகிய கிராமங்களில் இம்மலை காணப்படுகிறது.இம்மலையில் உசிலை, வேம்பு, நெல்லி உள்ளிட்ட பெரிய மரங்களுடன், சூராம்முள் செடி, காராம்முள்செடி மற்றும் பல மீட்டர் நீள அகலம் கொண்ட புதர்கள், மூலிகை செடிகள் காணப்படுகின்றன. அடர்ந்த புதர்கள் விலங்குகள் மறைந்து கொள்வதற்கு வசதியாக உள்ளன. இங்கு அதிக எண்ணிக்கையிலான மான்கள், மயில்கள் உள்ளன. 10கி.மீ நீளம், ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட இந்த வனப்பகுதி முழுவதும் தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு அதிக மழைநீரை இந்த வெள்ளமலை கொடுக்க கூடியது.ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையில் இருந்து வரும் மழை நீர் கண்மாய்களுக்கு செல்லும் வகையில் வரத்துக்கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் தற்போது சிதைந்துள்ளன. அதிகமான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல மரங்கள் பட்டுப்போன நிலையில் உள்ளன. இந்த மலையில் இருந்த பசுமை வனங்களால் இப்பகுதியில் அதிகமான மழைப்பொழிவு இருந்தது. தற்போது மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே வெள்ளை மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இப்பகுதி கிராமத்தினர் கூறியதாவது:வெள்ளை மலை சுமார் 30ஆண்டுகளுக்கு முன்வரை இப்பகுதிக்கு மழை தரும் வனப்பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது மலையில் உள்ள வனங்கள் அழிக்கப்படுவதாலும், மழைநீர் வரத்து கால்வாய்கள் சிதைந்து போயுள்ளதாலும் மலையால் பயன்பட்டு வந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. போதிய கண்காணிப்பு இல்லாமல் படிப்படியாக சிதைந்து வருகிறது. மரங்கள் அனைத்தும் வெட்டப்படுவதை தடுக்க ஆளில்லை.இந்த மலையில் மீண்டும் செடிகள் நடவு செய்து வனத்துறை பராமரிக்க வேண்டும். நீர் வரத்து கால்வாய்களை மீண்டும் கட்ட வேண்டும். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெள்ளைமலையை உணவு காடாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றனர்….

The post ஆக்கிரமிப்பின் பிடியில் வெள்ளை மலை-பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : White Mountain ,Sivagangai ,White Hill ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்