×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)

விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திரபந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத்  துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும்  ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று, அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம்  வேண்டினார்கள்.

தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத்  தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால், காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை.  காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர்  ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராடச் சென்றார். அப்போது ஈரமாக இருந்த படிகள் வழுக்கிவிடவே, தவறிப் போய்த் தண்ணீரில் விழுந்தார்  முனிவர்.

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரு கைகளையும் உயர்த்தி உதவிக்காக வேண்டினார். அச்சமயம் அந்த வழியாகச் சென்ற க்ஷத்திரபந்துவுக்கு  இந்த முனிவரைக் காக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. அதுவரை எந்த நற்செயலும் செய்திராத அந்த இம்சை இளவரசன், அன்று குளத்தில்  குதித்தான். முனிவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான். மிகவும் களைப்பாக இருப்பதாக முனிவர் சொல்ல, அவர் உண்பதற்குப் பழங்களைப் பறித்து  வந்து கொடுத்தான் க்ஷத்திரபந்து. அவரது கால்களைப் பிடித்து விட்டான். அவனது பணிவிடைகளைக் கண்டு மிகவும் மனம்மகிழ்ந்த முனிவர், “யார்  நீ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி தன் முழு வரலாற்றையும் கூறினான். “க்ஷத்திரபந்து! கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரத்தை  உபதேசிக்கிறேன். அது உன் பாபங்கள் அனைத்தையும் போக்கி உன்னைத் தூய்மைப் படுத்தும்!” என்று சொன்ன முனிவர், ‘கோவிந்தா’ என்ற  திருமாலின் திருநாமத்தை அவனுக்கு உபதேசித்தார். “நீ எப்போதும் கோவிந்தா... கோவிந்தா... என்று சொல்லிக் கொண்டிரு! உனக்கு நல்லது நடக்கும்!”  என்று சொன்னார். க்ஷத்திரபந்துவால் நம்ப முடியவில்லை. “இவ்வளவு பாவங்கள் செய்த எனக்கு வெறும் கோவிந்தா என்று சொல்வதால் எப்படி  நன்மை உண்டாகும்?” என்று கேட்டான்.

அப்போது முனிவர், “திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் என்றும் வீண்போவதில்லை. நாம் சிறிதளவு முயற்சியை அவனை  நோக்கி முன்னெடுத்தாலே போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான்! நீ கோவிந்த நாமத்தைச் சொல்!” என்றார். க்ஷத்திரபந்துவும் மனம்  திருந்தியவனாக எப்போதும் கோவிந்த நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கினான். அதன் பயனாக அவனது பாபங்கள் யாவும் மெல்ல மெல்ல தீயினில்  தூசாயின. அடுத்த பிறவியில் பக்தர்கள் நிறைந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றான்.

இறைவனின் திருவடிகளில் சரணாகதி செய்து அவனை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்வதே அனைத்து வேதங்களின் சாரம் என்பதை அறிந்து  கொண்டான். சரணாகதி செய்தான். அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியும் அடைந்தான். க்ஷத்திரபந்து வைகுந்தத்தை அடைந்த போது, அவனுக்கு  முற்பிறவியில் உபதேசம் செய்த அந்த முனிவர் அவனை வரவேற்றார். “நான் சொன்னது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். “ஆம்! திருமாலைக்  குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண் போகாது என்று தாங்கள் கூறினீர்கள். அதை அனுபவத்தில் உணர்ந்து விட்டேன். கோவிந்தா  கோவிந்தா என்று அவன் திருநாமங்களை உச்சரித்தேன்.

அது வீண்போகவில்லை. அந்த நாம உச்சாரணம் அடியேனை சரணாகதியில் கொண்டு சேர்த்து விட்டது. அந்தச் சரணாகதியின் பயனாக எம்பெருமான்  அடியேனுக்கு முக்தியும் அளித்து விட்டான்!” என்றான், க்ஷத்திரபந்து. ‘அமோக:’ என்றால் வீண்போகாதது என்று பொருள். திருமாலைக் குறித்துச்  செய்யப்படும் எந்தவொரு வழிபாடும் வீண்போகாமல் பலன் தருவதால், திருமால் ‘அமோக:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 111வது  திருநாமம். “அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீண்போகாமல் பலனளிக்கும்படி  திருமால் திருவருள் புரிவார்.

112. புண்டரீகாக்ஷாய நமஹ (Pundareekaakshaaya namaha)

திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோவில், திருவெள்ளரை  ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட முக்கியமான பெருமாள் கோவில்களில் பாஞ்சராத்ர ஆகமம் எனப்படும் பூஜை முறை  பின்பற்றப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத்தை ஐந்து பிரிவுகளாக ஐவருக்குத் திருமால் உபதேசித்தார்.

முதல் பகுதியை ஆதிசேஷனுக்கும், இரண்டாம் பகுதியைக் கருடாழ்வாருக்கும், மூன்றாம் பகுதியைத் திருமாலின் படைத்தளபதியான  விஷ்வக்சேனருக்கும், நான்காம் பகுதியை பிரம்ம தேவருக்கும், ஐந்தாம் பகுதியைப் பரமசிவனுக்கும் உபதேசித்தார் என்ற வரலாறு அந்த  ஆகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பரமசிவனுக்குத் திருமால் உபதேசிக்கையில், “நான் காவிரிக் கரையில் அரங்கனாகத் திருவரங்கத்தில் துயில்  கொண்டிருக்கிறேன். அந்த அரங்கனின் திருமேனி அங்கங்களாகவே மற்ற க்ஷேத்திரப் பெருமாள்கள் உள்ளார்கள்.

பத்ரிநாத்தில் உள்ள பத்ரி நாராயணன் அரங்கனின் தலை, புஷ்கரத்தில் ஏரி வடிவில் உள்ள பெருமாள் அரங்கனின் நாக்கு, குருக்ஷேத்திரத்தில் உள்ள  பெருமாள் அவரது வாய், அயோத்தியில் உள்ள ராமர் அவரது கழுத்து, திருமலையப்பன் அவரது மார்பு, பூரி ஜகந்நாதர் அவரது வயிறு, ஆந்திர மாநிலம்  ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்ம மூர்த்தி அவரது முதுகு, ஸ்ரீமுஷ்ணம் வராகர் அவரது குரல், கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் அவரது அழகு, மதுரை  கள்ளழகர் அவரது கைகள், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் அவரது நடை, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அவரது திருக்கண்கள்!” என்று  விளக்கினார்.

அந்த விளக்கங்களைக் கேட்ட பரமசிவன், தான் ஒரு சிறப்பான ஆயுதத்தைப் பெற விரும்புவதாகவும், அதற்குத் தான் எத்தகைய வழிபாடு செய்ய  வேண்டும் என்றும் திருமாலிடம் வினவினார். அதற்குத் திருமால், “விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் உள்ள ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி, ஆயிரம்  செண்பகப் பூக்களால் மன்னார்குடியில் ராஜகோபாலனாக விளங்கும் எனக்கு அர்ச்சனை செய். நான் உனக்குச் சிறப்பான ஓர் ஆயுதத்தைத் தருகிறேன்!”  என்று கூறினார்.

செண்பக மலர்கள் நிறைந்த செண்பகாரண்ய க்ஷேத்திரமான மன்னார்குடியை அடைந்த பரமசிவன் “விச்வாய நமஹ, விஷ்ணவே நமஹ…” என்று  ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிச் செண்பகப் பூக்களால் ராஜகோபாலனுக்கு அர்ச்சனை செய்தார். 999 திருநாமமான “அக்ஷோப்யாய நமஹ” என்று  சொல்லி செண்பக மலரை ராஜகோபாலனின் திருவடியில் சேர்த்தார். அத்துடன் செண்பக மலர்கள் தீர்ந்து விட்டன. “ஸர்வப்ரஹரணாயுதாய நம:” என்ற  1000-வது திருநாமத்தைச் சொல்லி அர்ச்சிக்க மலர் இல்லை.

என்ன செய்வது என யோசித்த சிவபெருமான், செண்பக மலர் போல இருக்கும் தன் மூக்கையே கிள்ளித் திருமாலின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்  போனார். ஆனால், ராஜகோபாலன் அவரைத் தடுத்தான். “உன் பக்திக்குப் பரிசாக இந்தச் சூலத்தைத் தருகிறேன்!” என்று சூலாயுதத்தைச் சிவனுக்கு  அளித்தான். அப்போது சிவபெருமான், “ராஜகோபாலா! எனக்கு ஒரு ஐயம்! பூமியில் உனக்கு அர்ச்சனை செய்ய முயன்றால் பல இடையூறுகள்  வருகின்றன. உன் கோயிலுக்கு வர எண்ணினால் அதற்குக் கூட பல தடைகள் ஏற்படுகின்றன.

உன் புகழைப் பாட வேண்டுமென நினைத்தால், தொண்டை கட்டிக் கொள்கிறது. வைகுந்தத்திலுள்ள ஜீவர்கள் மட்டும் இப்படிப்பட்ட இடையூறுகள்  இன்றி, தடைகளின்றி உன்னை அனுபவிக்கிறார்களே! அது எப்படி?” என்று கேட்டார். அதற்கு ராஜகோபாலன், “ஒரு அறையில் எத்தனை அழகான  பொருட்கள் இருந்தாலும், பார்ப்பவனுக்குக் கண்கள் இருந்தால் தானே அவற்றைக் காண முடியும்? ஒரு குருடனால் எதையும் பார்க்க முடியாதல்லவா?  அதுபோல வைகுந்தத்தில் எனது திருமேனியையும் குணங்களையும் காணவேண்டுமென்றால், அதற்குத் தெய்வீகமான கண்கள் வேண்டும்.

வைகுந்தத்தில் உள்ளவர்களுக்கு நானே அத்தகைய தெய்வீகப் பார்வையாக இருந்து, அவர்கள் இடையறாது என் அழகையும் குணங்களையும்  அனுபவிக்கும்படி அருளுகிறேன். இவ்வுலகில் ஏற்படுவது போன்ற தடைகள் அவர்களுக்கு ஏற்படுவதில்லை!” என்றார். வைகுந்த லோகத்துக்குப்  ‘புண்டரீகம்’ என்று பெயர். ‘அக்ஷி’ என்றால் கண் என்று பொருள். வைகுந்த (புண்டரீக) லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் கண்ணாகத் (அக்ஷியாகத்)  திருமால் திகழ்ந்து, அங்குள்ள போக்கியங்களைக் கண்டு அனுபவிக்கச் செய்வதால், ‘புண்டரீகாக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 112-வது திருநாமம். சாந்தோக்ய உபநிஷத், “ஸ வா ஏதேன திவ்யேன சக்ஷுஷா மனஸா ஏதான் காமான் பச்யன் ரமதே”  என்று இக்கருத்தைத் தெரிவிக்கிறது. வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கும்” என்று பாடியுள்ளார். கண்  சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் “புண்டரீகாக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், திருமால் அவர்களது கண்கள் விரைவில்  குணமடையும்படி அருள்புரிவார்.

113. வ்ருஷகர்மணே நமஹ (Vrushakarmane namaha)

திருவரங்கத்தில் ராமாநுஜர் கீதையின் பொருளைத் தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது நாமெல்லாம் நன்கு அறிந்த கீதை  ஸ்லோகமான “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்ற ஸ்்லோகம் வந்தது.  அதன் பொருளை விளக்குகையில், “அடியார்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக எம்பெருமான் அவதரிக்கிறான்!” என்று பொருள்  கூறினார்.

ஒரு சீடர் பணிவுடன் எழுந்து, “சுவாமி! நல்லவர்களைக் காத்து, தீயவர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிக்கிறான் என்று தானே  இதற்கு எல்லாரும் பொருள் கூறுவார்கள்!” என்று கேட்டார். அதற்கு ராமாநுஜர், “அசுரர்களை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு எம்பெருமான்  வைகுந்தத்திலிருந்து கீழே இறங்கி வர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அங்கிருந்தபடியே சக்ராயுதத்தை ஏவினால், அதுவே ராவணன்,  கும்பகர்ணன், கம்சன், சிசுபாலன், இரணியன் என அனைவரின் தலைகளையும் கொய்து விட்டு வந்து விடுமே!

அடியார்களோடு கலந்து பழகுவதற்காகத் தான் இறைவன் அவதரிக்கிறார். ஏனெனில், பிரகலாதனோடும், குகனோடும், சபரியோடும், அனுமனோடும்,  கோபிகைகளோடும் கலந்து பழக வேண்டும் எனில், அதை வைகுந்தத்திலிருந்தபடியே செய்ய இயலாதல்லவா? அதனால் தான் பூமிக்கு இறங்கி  வருகிறார். வரும்போது குறுக்கே வரும் அசுர சக்திகளையும் அப்படியே அழிக்கிறாரே ஒழிய, அது அவரது அவதார நோக்கமல்ல. அடியார்களைக்  காப்பதும் அவர்களுடன் கலந்து பழகுவதுமே அவதாரம் செய்வதற்கான நோக்கம்!” என்றார். இதை விளக்க ஒரு உதாரணத்தையும் கூறினார் ராமாநுஜர்.

“ஒரு ஊரில் ஒரு பெரியவர், மக்கள் தண்ணீர் குடிப்பதற்காகவும், தாகமாக உள்ள பசுக்கள் இளைப்பாறுவதற்காகவும் ஒரு குளம் வெட்டுகிறார் என  வைத்துக் கொள்ளுங்கள். அதே ஊரை ஒருவன் அந்தக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் அதற்குக் குளம் வெட்டியவர் பொறுப்பாக  முடியுமா? அதுபோலத் தன் அடியார்களுக்கு அருள்புரிய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே இறைவன் அவதரிக்கிறான். கொழுப்பெடுத்தவர்  சிலர் தாமாகப்போய் குளத்தில் விழுவதைப்போல, அடியார்களுக்கு அருள்புரிய பூமிக்கு வந்த இறைவனை அசுரர்கள் எதிர்த்து எதிரம்பு கோர்த்துத்  தாமாகவே விழுந்து மாள்கிறார்கள்.

ஒருவன் தற்கொலை செய்து கொண்டதற்கு எப்படிக் குளம் வெட்டியவர் பொறுப்பாக மாட்டாரோ, அவ்வாறே அசுரர்கள் மாள்வதற்கும் இறைவன்  பொறுப்பல்ல!” என்றார். “அப்படியானால் இந்த கீதை ஸ்லேகத்துக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?” என்று மற்றொரு சீடர் கேட்டார். அதற்கு  ராமாநுஜர், “இறைவனிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள், அவன் சாஸ்திரங்களில் இட்ட கட்டளைகளை அப்படியே பின்பற்றுபவர்கள், அவனைத்  தவிர இன்னொன்றை நினைக்காதவர்கள், அவனது லீலைகளையே எப்போதும் சிந்தித்திருப்பவர்கள், அவனை விட்டுப் பிரிந்தால் தரிக்க  முடியாதிருப்பவர்கள்  இத்தகைய மெய்யடியார்களே சாதுக்கள்.

‘பரித்ராணாய ஸாதூநாம்’ என்றால் அத்தகைய அடியார்களைக் காப்பதே அவதாரத்துக்கு முக்கிய நோக்கம் என்று பொருள். ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’  என்றால், அவ்வாறு அடியார்களைக் காக்க வருகையில் குறுக்கே வரும் தீய நடத்தை கொண்டவர்களை அழித்தல் என்று பொருள். ‘தர்ம  ஸம்ஸ்தாபநார்த்தாய’ என்றால், இறைவனுக்கு நாம் செய்யும் பூஜையாகிய மிகச் சிறந்த தர்மம் சரிவர நடவாது போனால், அதைக் காத்துத் தந்து  மீண்டும் நடக்கும்படிச் செய்தல் என்று பொருள். ‘ஸம்பவாமி யுகே யுகே’ - இக்காரணத்துக்காக யுகங்கள் தோறும் தான் அவதரிப்பதாகக் கண்ணன்  அருளிச் செய்கிறான்!” என விளக்கினார்.

அப்போது ராமாநுஜரின் மருமகனான நடாதூர் ஆழ்வான், “சுவாமி! இப்போது ஒரு விஷயம் நன்கு புரிகிறது. அவதாரங்கள் அனைத்தும் அடியார்களான  நமக்காகத்தான். நரசிம்மாவதாரம் இரணியனை அழிப்பதற்காக அல்ல, பிரகலாதனைக் காப்பதற்காக. ராமாவதாரம் ராவணனை அழிப்பதற்காக அல்ல,  அனுமனை அணைப்பதற்காக. கிருஷ்ணாவதாரம் கம்சனைக் கொல்வதற்காக அல்ல, கோபிகைகளைக் கொஞ்சுவதற்காக!” என்றார். மேலும்,  “அவதாரங்கள் மட்டுமல்ல, இறைவன் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலுமே நம்மை உயர்த்த வேண்டும், நம்மை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற  ஒரே நோக்கத்தில் செய்யப்படுபவையே.

எம்பெருமான் மிக உயர்ந்தவனாக இருந்தாலும், நம்மையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய பல செயல்களைப் புரிகிறான்!” என்றார்  ராமாநுஜர். ‘வ்ருஷ’ என்றால் நல்வழி அல்லது அறவழி என்று பொருள். அடியார்களை நல்வழிப் படுத்தக் கூடிய செயல்களைச் செய்வதால் திருமால்  ‘வ்ருஷகர்மா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 113-வது திருநாமம். “வ்ருஷகர்மணே நமஹ” என்று தினமும் சொல்லி  வரும் அன்பர்கள் எப்போதும் அறவழியில் நடக்கும்படி திருமால் அருள்புரிவார்.

114. வ்ருஷாக்ருதயே நமஹ (Vrushaakruthaye namaha)

மதுரைக்கு அருகே இருக்கும் திருமோகூர் என்னும் திவ்யதேசத்தில் காளமேகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். அந்தப் பெருமாள் முன் அகஸ்திய  மகரிஷி நடனமாடுவது வழக்கம். ஒருமுறை அந்தப் பெருமாளைத் தரிசிப்பதற்காக தேவலோகத்திலிருந்து தேவேந்திரன் பூமிக்கு வந்தான். பெருமாள்  முன்னே நடனமாடும் அகஸ்தியரின் முதுகு தான் அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும் அவரது குள்ளமான தோற்றத்தைக் கண்டு அகஸ்திய ரிஷி என்று  அறிந்தான் இந்திரன். அவரது உயரத்தை எண்ணிக் கிண்டல் செய்து சிரித்து விட்டான். சடக்கெனத் திரும்பிப் பார்த்தார் அகஸ்தியர்.

கோபத்துடன், “இந்திரா! என்னால் திரும்பிப் பார்க்க முடியாது என்று நினைத்துத்தானே பின்னால் இருந்தபடி என்னை ஏளனம் செய்தாய்? இந்தத்  தவறுக்குத் தண்டனையாக நீ மயிலாகப் பிறக்க வேண்டும்!” என்றார். (பறவைகளுள் மயிலால் முகத்தைத் திருப்பிப் பின்னால் பார்க்க இயலாது  என்பதால் அவ்வாறு சபித்தார்.) தன்னை மன்னித்துவிடும் படி இந்திரன் அகஸ்தியரிடம் மன்றாடினான். மனம் இரங்கிய அகஸ்தியர், “இந்திரா!  கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாது. எனினும் நீ இவ்வளவு தூரம் மன்றாடுவதால் சாபத்தைக் கொஞ்சம் மாற்றுகிறேன்.

நீ உடனே மயிலாகப் பிறக்க வேண்டாம். பகைவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் நீ மயிலாக உருமாறி உன் உயிரைக் காப்பாற்றிக்  கொள்வாய்!” என்று கூறினார். இந்திரன் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றான். சில காலம் கழித்து ராவணனும் அவனது மகனான மேகநாதனும்  தேவலோகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். இந்திரன் தலைமையில் அனைத்துத் தேவர்களும் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்தும் வெல்ல  முடியவில்லை. அந்தப் போரில் இந்திரனை ஜெயித்ததால் மேகநாதன் ‘இந்திரஜித்’ என்ற பெயரைப் பெற்றான்.

அச்சமயம் அகஸ்தியரின் வாக்கு இந்திரனின் நினைவுக்கு வந்தது. தன் உயிரை ராவணனிடமிருந்தும் இந்திரஜித்திடமிருந்தும் காப்பாற்றிக்  கொள்வதற்காக மயிலாக உருவெடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான் இந்திரன். ஆனாலும், அவர்கள் விடாமல் அவனைத் துரத்தி  வந்தார்கள். திருமோகூரில் மயில்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. மயில் வடிவில் உள்ள இந்திரன் அந்தக் கூட்டத்துடன் சென்று சேர்ந்து  கொண்டான். ராவணனும் இந்திரஜித்தும் அவனை அடையாளம் காண முடியாமல் திரும்பச் சென்று விட்டார்கள்.

அப்போது மயில் வடிவில் இருந்த இந்திரன் காளமேகப் பெருமாள் முன்னே நடனமாடினான். அதைக் கண்ட மற்ற மயில்களும் பெருமாள் முன்னே  தோகையை விரித்து நடனமாடத் தொடங்கின. அந்த நடனத்தைக் கண்டு மனம் குளிர்ந்த திருமால், இந்திரனுக்குக் காட்சியளித்தார். அவனது பழைய  வடிவத்தைப் பெறும்படி அருள்புரிந்ததோடு மட்டுமின்றி, தானே பூமியில் ராமனாக அவதரித்து ராவணனையும் இந்திரஜித்தையும் வதம் செய்வதாக  உறுதியளித்தார்.

இந்திரனோடு நடனமாடிய மயில்கள் அனைத்தும் நடராஜரான சிவபெருமானைப் போலச் சிறப்பாக நடனமாடியதால் இனி அனைத்து மயில்களும்  அவரைப் போலவே நீலநிறக் கழுத்தோடு விளங்கட்டும் என்று திருமால் அருள்புரிந்தார். காளமேகம் என்றால் கரிய நிறமுள்ள மேகம் என்று பொருள்.  காளமேகப் பெருமாள் முன்னே அன்று அனைத்து மயில்களும் இந்திரனோடு சேர்ந்து நடனமாடியதன் தொடர்ச்சியாகத் தான் இன்றும் வானில் கார்  மேகங்கள் தோன்றினால், ஆனந்தமாக மயில்கள் தோகையை விரித்து ஆடுகின்றன.

கார்மேக வண்ணத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசிக்கும் போதெல்லாம் அடியார்களான நாமும் அவ்வாறே ஆடிப் பாடி அவனை வழிபட  வேண்டுமென நமக்கு உணர்த்துகின்றன. வடமொழியில் ‘வ்ருஷ’ என்றால் வர்ஷித்தல், அதாவது பொழிதல் என்று பொருள். கருணை மழையைப்  பொழியும் கார்மேகம் போன்ற வடிவுடன் திருமால் திகழ்வதால் ‘வ்ருஷாக்ருதி:’ என அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 114-வது  திருநாமம். “வ்ருஷாக்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மேல் காளமேகப் பெருமாள் கருணை மழையை வர்ஷிப்பார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Anantha ,
× RELATED “வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால்...