×

ஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு : நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 2019ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீன்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் ஒரு கூடுதல் எஸ்பி., 5 டி.எஸ்.பிக்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 94 எஸ்.ஐ.க்கள், போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் உள்ளிட்ட மொத்தம் 722 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் நேற்று ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருப்புத்தூர்  பகுதிகளில் குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயில், குபேரன், லெட்சுமி  கோயில், வைரவன்பட்டி பைரவர் கோயில், திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக  பைரவர் கோயில், பூமாயி அம்மன் கோயில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்  பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பக்தர்கள் நேற்று காலையில்  இருந்தே சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Devotees ,Pillaiyarpatti ,New Year's Eve ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி