அற்புதக் கூத்தனை யாரறிவாரே!

அருணகிரி உலா-67

தில்லைச் சிற்றம்பலத்தை தரிசிக்கும் எவருமே மாணிக்கவாசகரை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. அவரது திருவாசகத்திற்கு உருகிய சிவபெருமான் வேதியர் வடிவில் வந்து ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்றார். மணி வாசகர் பாடிய அனைத்தையும் கேட்டு தன்கையால்  எழுதி ‘திருச்சிற்றம்பலமுடையார்’ என்று கையொப்பமிட்டு பஞ்சாட்சரப் படிகளில் வைத்து மறைந்தார்.

‘வாதவூரன் கவிகளைக் கேட்டெழுதியது’ என்றும் குறிப்பிட்டிருந்தது. காலை பூஜைக்கு வந்த அந்தணர்கள் மணிவாசகரை அழைத்து. ‘திருவாசகத்தின்  பொருள் என்ன என்று கேட்க அவர்’ ‘அதன் பொருள் இவனே’ என்று நடராஜரைக் காட்டி விட்டு இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார். இறைவன்  மணிவாசகருக்காகத் திருப்பெருந்துறையில் குருவாய் உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, பிட்டு உண்டது போன்ற நிகழ்வுகளை அருணகிரியார்  சிதம்பரத்தில் பாடியுள்ளார்.

‘‘குருவின் உருவென அருள்செய் துறையிகில்

குதிரை கொளவரு நிறை தவசி தலை

கொற்றப் பொற்பதம் வைத்திட்டு அற்புத

மெற்றிப் பொற் பொருளிட்டுக் கைக் கொளு

முதல்வர், இள கலை மதியம் அடைசடை

அருண உழை முழு மருவு திருபுயர்

கொட்டத்துப்புரர் கெட்டுப் யொட்டெழ

விட்டத் திக்கணை நக்கர்க்கு அற்புதக் குமரன்’’

குரு மூர்த்தியாய்த் தோன்றி அருளிய திருப்பெருந்துறை எனும் தலத்தில், குதிரை வாங்குவதற்காக வந்த தவசீலரான மாணிக்கவாசகரின் தலையில்  வீரம் வாய்ந்த தமது அழகிய திருவடியைச் சூட்டியவர். அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, அதனால் அவர் மனதை உருக்கி, ஞானத்தை அளித்து  உபதேசித்து அவரைத் தன் வசப்படுத்திக் கொண்ட முதல்வர். பிறைச் சந்திரன் அணிந்த சடையினர், சிவந்த மானையும் மழுவையும் கொண்ட அழகிய  புயத்தினர், இறுமாப்புடன் வலம் வந்த முப்புரத்தினர் அழியும்படிச் செய்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதக் குமரன்’’ என்று பாடியுள்ளார்.

‘‘வாதவூரனை மதித்தொரு குருக்க எனை

ஞான பாதம் வெயியிட்டு நரியில் குழுவை

வாசியாமென நடத்து வகையுற்றரசன் அன்புகாண

மாடையாடை தர பற்றி, முன் நகைத்து, வைகை யாற்றின் மீது நடமிட்டு மண் எடத்து மகிழ்

மாது வாணி தரு விட்டு நுகர் பித்தனருள்

கந்தவேளே’’

பொருள்:- திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரை எண்ணி, குருமூர்த்தியாக நின்று, ஞான மார்கத்தை பரிகளாகிய ஒரு திருவிளையாடலை  நிகழ்த்தி மகிழ்ந்தார் சிவபெருமாள், பாண்டியன் அளித்த பொன்னாடைகளை வாங்கிக் கொண்டு சிரித்தார். வந்திக் கிழவிக்குக் கூலியாளாக வந்து பிட்டு  வாங்கி உண்டு வைகையாற்றின் கரை அடைக்க மண் எடுத்து மகிழ்ந்து கூத்தாடிய அச்சிவபெருமான் அளித்த குழந்தையாம் கந்தனே.

சைவசித்தாந்தத்தில் மிகுந்த புலமை பெற்றிருந்த தில்லை வாழ் அந்தணர் உமாபதிசிவம் அவர்கள் தில்லைக் கூத்தனுடன் ஐக்கியமாகி முக்தி  அடைந்தவர். வடமொழியில் அவர் எழுதிய ‘குஞ்சிதாங்ரிஸ்வராஜம்’ எனும் நூல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. (குஞ்சிதாங்ரிம் வளைந்து தூக்கப்பட்ட இடது பாதம்) இந்நூலில் 45 ஆவது பாடலில் முருகப் பெருமான் பற்றிய அழகிய குறிப்பு தரப்பட்டுள்ளது.

‘‘எந்த பரமேச்வரரானவர் சூரபத்மன் முதலான அசுரர்களை அழிக்க வேண்டி, புத்திரனான சுப்ரமணியருடைய தாமரைப்பூ போன்ற கையில் முதலில்  சக்தி ஆயுதத்தைக் கொடுத்தாரோ, பிறகு, எல்லா ஆயுதங்களையும் உபதேசம் செய்து, தேவர்களின் எதிரிகளை, யமனது சமீபத்தை அடைந்தவர்களாகச்  செய்து, இந்திரன் - வேடன் இவர்கள் தம் மகள்களான தெய்வானை-வள்ளி இருவரையும் திருமணம் செய்து கொண்டு ‘குழந்தாய் இவ்விடம் வா’ என்று  சொல்லி சுப்ரமண்யருக்கு மகிழ்வுடன் அனுக்கிரகம் செய்தாரோ அந்த குஞ்சிதபாதம்’’ என்பது அந்தச் செய்யுள்.

‘‘சிற்பரம் சோதி சிவானந்தக் கூத்தனை

சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனை

பொற்பதிக் கூத்தனை பொற்றில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யாரறிவாரே’’

- திருமந்திரம்

எதையும் நகைச்சுவையாகப் பாடும் கவி காளமேகம் சபாநாயகர் உற்சவத்தைக் கண்டபோது ‘‘நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர் பிச்சை எடுத்து  உண்ணப் புறப்பட்டும் உச்சிதமான காளம் ஏன். நாசாங்கம் ஏன்?’’ என்று பாடி மகிழ்ந்தாராம்! தில்லையில் முருகவேளைச் சிவபிரானாகவே காணும்  அருணகிரிநாதர் அருளிய மற்றுமொரு திருப்புகழைப் பாடிச் சிதம்பரத்திலிருந்து புறப்படுவோம்.

‘‘பரம குருநாத கருணை உபதேசப் பதவிதரு ஞானப் பெருமாள் காண் பகலிரவிலாத ஒளி வெளியில் மேன்மை

பகரும் அதிகாரப் பெருமாள் காண்

திருவளரு நீதி தின மனொகராதி

செகதலமு வானு மருவையவை பூத

தெரிசனை சிவாயப் பெருமாள் காண்

ஒரு பொருளதாகி அருவிடையை யூரும்

உமைதன் மணவாளப் பெருமாள் காண்

உகமுடிவு காலம் இறுதிகளிலாத

உறுதி அனுபூதிப் பெருமாள் காண்

கருவுதனிலூறு மிகுவினைகள் மாய

கலவி புகுதா மெய்பெருமாள் காண்

கனகசபை மேவி அனவரதமாடு

கடவுள் செகசோதிப் பெருமாளே!’’

சிதம்பரத்தில் சபாநாயகரை வணங்கி கூடலையாற்றூர் நோக்கிச் செல்கிறோம். சிதம்பத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள குமரக்குடியை அடைந்து  மணிமுத்தாறும் வெள்ளாறும் சேருமிடத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இவ்வழியில் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார். எதிரில் வந்த வேதியர் ஒருவரிடம் ‘விருத்தாசலம் செல்லும் வழி எது என்று கேட்டபோது’, கூடலையாற்றூர் செல்லும் வழி இது என்று காட்டி,  வந்தவர் மறைந்துவிட்டார்.

வந்தவர் இறைவனே என்றுணர்ந்த சுந்தரர் நேரே கூடலையாற்றூர் வந்து இறைவனைப் பதிகம் பாடி வணங்கினார். வெள்ளப் பெருக்கால் இரு  நதிகளுக்குமிடையே இருந்த கோயில் அழிந்து விட்டது. அதே கற்களைக் கொண்டு வேறொரிடத்தில் மீண்டும் கட்டியுள்ளனர். இறைவன் நெறிகாட்டு  நாயனார், நர்த்தன வல்லபேசுவரர், பிரம்மாவுக்கு நர்த்தன தரிசனம் அளித்த திருத்தலம் இறைவி பராசக்தி, ஞானசக்தி, புரிகுழலாம்பிகை, கோயில்  உள்ளே நுழைந்ததும் பலிபீடம், நந்தி தரிசித்து, சனிபகவானது தனிச்சந்நதியைக் காண்கிறோம்.

கோயிலில் நவக்கிரஹ சந்நதி இல்லை. வலப்புறம் நடராஜர் சிவகாமி, நால்வர் ஆகியோரைத் தரிசிக்கலாம், இறைவனுக்குக் கிழக்கு நோக்கிய  கருவறை இங்கு, சுந்தரரை இத்தலத்திற்கு வரச்செய்த இறைவனை வணங்கி நெகிழ்கிறோம். வாயிலில் துவார கணபதி உள்ளனர். வெளியே சொர்ண  பைரவர், சூரியன், காலபைரவர் ஆகியோரைக் காணலாம். ஸ்வாமி சந்நதிக்கு வலப்புறம் பராசக்தி அம்மன் வீற்றிருக்கிறாள்.

சுந்தரர், நடராஜர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், சித்ரகுப்தர் சோமாஸ்சுந்தர், விநாயகர், புரிகுழல்நாயகி ஆகியோரது திருவுருவங்கள்  பாதுகாப்பாகப் பூட்டிவைக்கப்பட்டுள்ளன. வெளிப் பிராகாரத்தில் ஞானசக்தி, அமுத விநாயகர், அன்னபூரணி, காசி விஸ்வநாதர் ஆகியோரை வணங்கி  ஷண்முக சுப்ரமண்யர் சந்நதியில் தலத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘வேட்டுவரைக் காய்ந்து குறமாதை உறவாடி,

இருள் நாட்வரைச் சேர்ந்த கதில் வேல் கொடமராடி சிறை மீட்ட மரர்க்கு

ஆண்டவனை வாழ்க நிலையாக வைக்கும் விஞ்சையோனே.

வேற்றுருவிற் போந்து மதுராபுரியிலாடி வைகை யாற்றின் மணற்றாங்கு மழவாளியென தாதை, புர மேட்டை எரித்தாண்ட சிவலோகன், விடை ஏறி  இடமுங்கொள் ஆயி

கோட்டு முலைத் தாங்கும் இழையான இடை கோடிமதி

தோற்றமெனப் போந்த அழகான சிவகாமி விறல்

கூற்றுவனைக் காய்ந்த அபிராமி மனதார அருள் கந்தவேளே

கூட்டு நதித் தேங்கிய வெளாறு தரளாறு திகழ்

நாட்டிலுரைச் சேந்த மயிலா வளி தெய்வானையொடெ

கூற்று விழத் தாண்டி, எனதாகமதில் வாழ் குமர தம்பிரானே’’

வள்ளி நாச்சியாரை இரவில் கவர்ந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த நம்பிராஜன் முதலான வேடர்களைத் தன் சேவலின் நாதத்தால் மூர்ச்சிக்கச்  செய்து, பின் திருத்தணியில் தேவியை மணந்தவனே! அஞ்ஞான இருள்மூடிய அசுரர்களைச் சிவந்த ஒளி வீசும் வேலாயுதத்தால் வென்று, பின்  தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து தேவர்கள் அரசனான இந்திரளை நிலைத்து வாழும்படி செய்த விசித்ர செயல் உடையவனே!

சொக்கன் என்ற பெயருடன் கூலி வேலையாளாக வந்து, மதுரையில் பித்தனைப் போன்று ஆடல் பாடல் புரிந்து, வந்திக் கிழவிக்காக வைகை  ஆற்றங்கரையில் மண் சுமந்தவரும், மழுவைப் பிடித்தவரும், எனது தந்தையாரும், திரபுரத்தை எரித்த லோக நாதரும், ரிஷபவாகனம் உடையவருமான  சிவபிரானின் இடப்பக்கத்தைக் கொண்டவளாய் விளங்குகிறாள் அன்னை, மலை போன்ற கொங்கை கிளையும், அவற்றைத் தாங்கும் நூல் போன்ற  இடையையும், கோடி சந்திர ஒளி வீசும் முகமும் படைத்த அன்னை சிவகாமி, வலிமை வாய்ந்த யமனை உதைத்துத் தண்டித்த அபிராமவல்லி, மனம்  உவந்து உலக மேன்மைக்காகப் பெற்றருளிய கந்தவேளே! வெள்ளாறும் தரளாறும் (தரளம்=முத்து மணிமுத்தாறை இவ்வாறு குறிப்பிட்டு

மகிழ்கிறார்!)

ஒன்று சேர்வதால் நீர் தேங்குமிடத்தில் உள்ள கூடலையாற்றூரில் விளங்கும் செவ்வேளே!

யமன் ஒதுங்கித் தாண்டி ஓடி விழும்படியாக எனதுள்ளத்தில் வள்ளி தெய்வயானையுடன் குடி கொண்டு வாழும் குமரனே! தம்விராநே!

-இவ்வாறு கூடலையாற்றூரில் குமரனை வணங்கியுள்ளார் அருணகிரிநாதர்.

‘‘அடியேனும் உனதன்பிலாமல் தேட்டமுறத் தேர்ந்தும் அமிர்தாமெனவே ஏகி நமன் ஓட்டி விடக் காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் சீட்டுவரக் காண்டு நலி காலனி அணுகா நின் அருள் அன்பு தாராய்’’

என்பது இப்பாடலில் வரும் பிரார்த்தனை. ‘‘அடியேனும் உன் மீது அன்பிலாமல் திருப்தியாய் பொருள் சம்பாதித்த காரணத்தால் மனநிம்மதி பெற்று  நமக்கு மரணம் வராது என்ற பிரமையுடன் வாழ்நாளைப் போக்க, எமன் தனது தூதுவர்களை முடுக்கி அனுப்ப, உக்ரத்துடன் பிரம்ம லிபி எழுதப்பட்ட  பிரம்மனின் முத்திரை பதிக்கப்பட்ட ஓலை வரும்படிச் செய்து, துன்பத்தைத் தரும் காலன் என்னை நெருங்காதபடி அருளையும் பரிவையும் காட்டி  உதவ வேண்டும்’’ என்பது வேண்டுகோள். மகாலட்சுமி, ஞானசக்தி ஆகியோரைத் தொழுது நடக்கையில் கோட்டத்தில் அண்ணாமலையார், பிரம்மா,  அஷ்டபுஜ துர்க்கை, கீழே சண்டிகேசர் ஆகியோரையும் வணங்குகிறோம். கூடலையாற்றூரிலிருந்து புறப்பட்டு, இங்கிருந்து ஆறு கி.மீ, தொலைவிலுள்ள  ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்தைச் சென்றடைகிறோம்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

Related Stories:

>