×

குலதெய்வமாக வழிபடும் காவல் தெய்வம் கருப்பர்

காவல் தெய்வம் கருப்பரை அறியாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. காவல் தெய்வத்திலும், கருப்பர் பெயர் கொண்ட தெய்வத்திலும் பல உண்டு. ஆனால், திருப்புத்தூரிலுள்ள கோட்டை கருப்பர் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பலநூறு ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள் ஆண்ட காலத்தில் திருப்புத்தூர் ஒரு கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருந்து. அப்போது, நான்கு திசைக்கும் ஒரு காவல் தெய்வங்களின் கோயில்களை உருவாக்கி கோட்டையை எழுப்பி உள்ளனர். இதில் கிழக்கு நோக்கி எழுந்தருளி, இன்றைக்கும் திருப்புத்தூர் மக்களின் காவல் தெய்வமாக இருந்து காத்து வருபவர் கோட்டைக் கருப்பர். இவருக்கு கோட்டைக்குள் கோயில் அமைக்கப்பட்டதால் கோட்டைக் கருப்பர் என்ற பெயரிலேயே அருள்பாலித்துவருகிறார்.

இங்குள்ள விநாயகர் கோட்டை விநாயகர் என்றும், பாலமுருகன் கோட்டை பாலமுருகன் என்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றனர். மேலும் கோயிலில் பரிவாரத் தெய்வங்களாக சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், ராக்காயிஅம்மன், பேச்சிஅம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். கோயிலின் முன்பகுதியில் கோட்டை சுவருக்கு இணையாக பூதகனங்கள் தாங்கியவாறு இரண்டு குதிரை சிலைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டை கருப்பர் இன்றைக்கும் நள்ளிரவில் குதிரையில் ஊரைச் சுற்றி காவலுக்கு வலம் வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்புத்தூரை சுற்றி சுமார் 40 அடி உயரத்தில் இருந்த கோட்டைச் சுவர் காலப்போக்கில்அழிந்திருந்தாலும், கோயிலின் அருகே உள்ள கோட்டைச்சுவர் அழியாமல் உள்ளது.

கோட்டை கருப்பர் கோயிலில் ஆண்டுதோறும் சிவன்ராத்திரியும், சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்றும் மக்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக் கடனை செலுத்துவதும், வேண்டுதலுக்காக வழிபாடு செய்வதும் சிறப்பாகும். இந்த கோட்டை கருப்பரை திருப்புத்தூர் மற்றும் இதை சுற்றியுள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் மற்றும் தேவகோட்டை நகரத்தார்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும் எனஅனைத்து சமுதாயத்தினரும், ‘‘திருப்புத்தூரின் மத்தியிலே திகழ்ந்திருக்கும் தெய்வ மேதினமும் உன்னைக் காண்பவர்க்கு தீர்ந்து விடும் துன்பமே’’என போற்றி, குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். திருப்புத்தூர் கோட்டை கருப்பர் கோயிலுக்கு 1898ம் ஆண்டு, தனது வேண்டுதல் பலித்தவுடன் ஒருபக்தர் சுமார் 50 கிலோ எடை கொண்ட ஒரு பித்தளை மணியை காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்தமணி இன்றைக்கும் ஒலிமங்காமல் தனது ஓசையை கம்பீரமாக கநீர் என்று பூஜை நேரங்களில் வெளிப்படுத்தி வருகிறது.

Tags : deity ,goddess ,
× RELATED மாரியம்மனுக்கான நேர்த்திக் கடன்கள்