×

தூது வந்த மாஜி அமைச்சரை போட்டுத் தாக்கிய தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் விவிஐபிக்கு ஆதரவாக தூது சென்ற மாஜி அமைச்சரை கடிந்து கொண்டாராமே தேனிக்காரர்’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியின் ஒற்றை தலைமை விவகாரத்தால் தேனிக்காரர், சேலத்துக்காரர் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நடந்து வருகிறது. தேனிக்காரரை சமரசம் செய்ய சேலத்துக்காரர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அது எதுவும் எடுபடவில்லையாம். அப்போது, மனுநீதி சோழன் மாவட்ட செயலாளரான கர்மவீரர் பெயரைக்கொண்ட மாஜி அமைச்சர் சேலத்துக்காரரின் அணியில் இருந்து வருகிறார். இதனால், இவர் மூலம் தேனிக்காரரை சமாதானம் செய்ய சேலத்துக்காரர் தூது விட்டாராம். இதற்காக மாஜி அமைச்சர் தேனிக்காரரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, மாஜி அமைச்சரை கடுமையாக கடிந்து கொண்டாராம் தேனிக்காரர். சேலத்துக்காரருக்கு ஆதரவாக சமாதானம் என்ற பெயரில் போனில் பேசுவது, என்னை நேரில் வந்து சந்தித்து பேச நினைப்பதை எல்லாம் விட்டுவிடவும். தப்பி தவறி வீட்டுப்பக்கம் வந்தால் நடப்பதே வேறு என்று பயங்கரமாக டோஸ் விட்டாராம். இதனால் பதிலுக்கு என்ன பேசுவது என தெரியாமல் மாஜி அமைச்சர் தர்மசங்கடத்தில் நெளிந்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘லீவு போட்டுட்டு, மணல் கடத்தல்ல ஈடுபடுறாங்களாமே..’’ ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னை ஆறு ஓடுது. இந்த ஆறு, ஆந்திர எல்லையில இருந்து தமிழக எல்லைக்குள் நுழைகிறது. இதனால, இந்த ஆறு இருக்குற பொன்னான ஸ்டேஷன் லிமிட்ல, மணல் கடத்தல் தடையில்லாம நடக்குதாம். ஸ்டேட் டூ ஸ்டேட் கூட டெலிவரி செய்றாங்க. இதுக்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்துறது, அந்த லிமிட்டோட, தனிப்பிரிவு காக்கியாம். இவர்,  எப்ப எல்லாம் லீவு போடுறாரோ, அப்ப எல்லாம் மணல் கடத்தல், நடக்குதாம். இவர் லீவு போடுறதே, மணல்மாபியாக்கள் கிட்ட வசூல் செய்றதுக்குத்தானாம், மணல் கடத்தல் தொடர்பாக உயர் அதிகாரிகள் கேள்வி கேட்டா, ஐயா நான் இன்னைக்கு லீவுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுறாராம். ஒரு நாள் லீவுலயே லட்சத்தை பார்த்துடுறாராம். எத்தனை நாள் லீவு போடுறாரோ, அத்தனை லட்சங்கள் பார்க்குறாராம். ரெய்டுக்கு போய், காக்கிகள் மணல் கடத்தல் வாகனங்களை  பிடிச்சா, இவர் தலையீடு அதிகமாக இருக்குதாம். சரிபட்டு வர்ற காக்கிகளுக்கு, பங்கு கொடுக்குறாராம். இல்லன்னா… சரிபட்டு வராத காக்கியை பற்றி போட்டு கொடுத்து டிரான்ஸ்பர் பண்ண வச்சுடறாராம். இதனால, லிமிட்ல இருக்குற காக்கிகளே தனிப்பிரிவு காக்கியோட நடவடிக்கை பார்த்து கொந்தளித்து இருக்காங்களாம். எனவே மாவட்ட உயர் காக்கி தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கணும்னு சாதாரண காக்கிகள் புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கெத்து காட்டுறாராமே மாஜி எம்எல்ஏ… என்னா விஷயம்..?’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையை சேர்ந்த குட்டியான இலை கட்சியின் மாஜி எம்எல்ஏ, தேனிகாரர் அணியில் இருந்தாராம். அணிகள் இணைப்புக்கு பிறகு இவரை இலை கட்சியின் இரட்டையர்கள் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லையாம். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது இவருக்கு சீட் இல்லைனு சொல்லிட்டாங்க. அதனால், இவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தாராம். தற்போது இலை கட்சியில மீண்டும் 2 ஆக உடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் இவர் குஷியாகி விட்டார்.  நாம், இப்போது உஷாராக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால்தான், ஏதாவது ஒரு  அணியில் இருந்து நமக்கு அழைப்பு வரும், அதன்மூலம் கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் பெறலாம் என தொலைநோக்கு பார்வையுடன் கணக்குப்போட்டு,  திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதனால்தான், கோவை மாவட்டத்தை சேர்ந்த இலைக்கட்சி முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் சைலண்ட் ஆக இருந்தும், இவர் மட்டும் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார். இலை கட்சியின் இரட்டையர்கள் இருவருமே பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார். இப்படி ஷாக் கொடுத்தாலாவது, நமக்கு அழைப்பு வருமா என பார்ப்போம் என்கிறார் தனது அடிப்பொடிகளிடம். இந்த கெத்து, எத்தனை நாள்  தாங்கும் என தெரியலையே என்கிறார்கள் இலைக்கட்சி தொண்டர்கள்’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரி கதர்கட்சி மூன்று கோஷ்டிகளாக உடைந்துவிட்டதாமே…’’‘‘ஆமா.. ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து நாடு முழுவதும் கதர் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. புதுச்சேரியிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கட்சி அலுவலகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில், மைக் பிடித்த முருகசாமி, நாசாவை வெச்சு செய்துவிட்டார். தொடர்ந்து அனந்தமானவரு பேசும்போது, கட்சி தலைவர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததோடு, அவர் எழுப்பிய எல்லா கேள்விக்கும் நாசாவே பதிலளித்தாராம். கட்சி தலைவர் இருக்கும்போது அவருக்கு வாயாக செயல்படுவது ஏன் என்று அனந்தமானவரு ஓப்பனாக கேட்க, நாசாவின் ஆதரவாளர்கள் பொங்கியெழுந்து எப்படி எங்கள் தலைவரை பேசலாம், புதுச்சேரியில் கதர்கட்சி என்றாலே அது எங்கள் தலைவர் நாசாதான் என கூறியிருக்கின்றனர். களேபரத்துக்கு மத்தியில்  கவர்னர் மாளிகை நோக்கி கதர் கட்சி பேரணி நடத்தியது. ஒற்றுமையை  காட்ட வேண்டிய இடத்தில் மூன்று கோஷ்டிகளாக பேரணியில் கலந்து கொண்டனர். நாசா ஒரு கோஷ்டியாகவும், அனந்தமானவரு, முருகசாமி ஒரு கோஷ்டியாகவும், எம்பி ஒரு கோஷ்டியாகவும் வந்தனர். ஒரே இடத்தில் எல்லோரும் பேரிகார்டர்கள் மீது ஏறி தனித்தனியாக முழக்கமிட்டனர். அப்போது அங்கிருந்த மாற்று கட்சியை சேர்ந்த  ஒருவர், கைதாக வேனில் ஏறச்சென்றவர்கள் எல்லோரையும் பார்த்து நீங்க எந்த  கோஷ்டிங்கண்ணா.. என்று கேட்டு வம்பிழுத்தாராம்’’ என்றார் விக்கியானந்தா….

The post தூது வந்த மாஜி அமைச்சரை போட்டுத் தாக்கிய தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Uncle ,Peter ,Thenikaran ,Salem ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...