×

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா : பக்தர்கள் தீர்த்த குட ஊர்வலம்

ஈரோடு:  ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி அம்மனை வழிபட்டனர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து அன்று இரவு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் கம்பங்களுக்கு பூசாரிகள் சிறப்பு பூஜை செய்து, கம்பத்தை பூசாரிகள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் முன்பு நட்டனர். இதேபோல் பெரியவலசு மாரியம்மன் கோவிலிலும், காவிரிரோடு மாரியம்மன் கோவிலிலும் கடந்த 18ம் தேதி இரவு நடப்பட்டன.

இந்நிலையில் நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம், பாரதி வீதி, பெரியார் வீதி, தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள் சார்பாக பக்தர்கள் ஈரோடு வைராபளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் ஆகியவற்றை எடுத்து வந்து 3 கோவில்களிலும் கம்பத்திற்கு ஊற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் இதில் சிலர் அக்னி சட்டிகளை கையில் சுமந்து வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனையொட்டி நேற்று வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில், பெரியவலசு மாரியம்மன் கோவில், காவிரி ரோடு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரும் 26ம் தேதி காலை மாவிளக்கு பூஜையும், பொங்கல் விழாவும் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வருவார்கள். 27ம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதிஉலா நடக்கிறது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. வருகிற 28ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags : Veerappanchatram Mariamman Kovil Festival: Devotees Theertha Kala Vidyam ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்