64 வகை திரவியங்களால் அபிஷேகம் : அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை  வாய்ந்த சிவஸ்தலமான அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசன விழா நடந்தது.  இக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் தினமும் திருவெம்பாவை உற்சவமும், மாணிக்கவாசகர் திருவீதி உலா  நடந்தது. நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம்,  கிளி வாகனத்தில் திருவாதிரை நாச்சியார் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், சந்திரசேகர அம்பிகை அபிஷேகமும்,ஊஞ்சல் உற்சவமும் திருமாங்கல்ய நோன்பு பூஜையும் திருக்கோவில் வளாகத்தில் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை நடராஜருக்கும், சிவகாமியம்மனுக்கும் மகாஅபிஷேகம் நடந்தது.

இதில், விபூதி, வெண்ணெய்,சந்தனாதிதைலம்,பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்புசர்க்கரை, தேங்காய்த்துருவல்,பால், தயிர், கரும்புச்சாறு,இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 64 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. நடராஜப் பெருமானின் மகா அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். நடராஜப்பெருமானுக்கும், சிவகாமியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனைகளும் கூட்டு வழிபாடுகளும் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு சிறப்பு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு அவிநாசி லிங்கேசுவரர்கோவில் வெளிப்புற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலைச்சுற்றி பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், மேள,தாளத்துடன் நடராஜ பெருமானும், சிவகாமியம்மனும் காலை 9 மணிக்கு  அவினாசியில் தேர் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>