×

நெல்லையப்பர் கோயில் திருவாதிரை விழாவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா

நெல்லை: நெல்லையப்பர் கோயில் திருவாதிரை திருவிழாவில் 4ம் நாளான நேற்று சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். நெல்லைக்கு திக்கெட்டும் புகழ் சேர்க்கும் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா தொடர்ந்து 23ம் தேதிவரை நடக்கிறது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்து வருகிறது. 4ம் திருவிழாவான நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது.
இதே போல் விநாயகர் மூஞ்சிறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேஷ்வரர் சரப்பத்திலும் வீதி உலா வந்தனர். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து திருவாதிரை தினமான வரும் 23ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நடராஜர் திருநடனம் புரியும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Swami ,Ambal Vaidhula ,Silver Rishabha ,Nellaiyappar Temple Thiruvadiyar ,
× RELATED திருப்பதியில் நாக சதுர்த்தியை...