ஸ்ரீ காளஹஸ்தியில் மேளதாளம் முழங்க நடந்தது : சிறப்பு அலங்காரத்தில் 7 கங்கையம்மன் ஊர்வலம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தியில் மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் 7 கங்கையம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தென்கயிலாயமாக போற்றப்படும் ஸ்ரீ காளஹஸ்தியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் 7 கங்கை அம்மன் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாக கங்கையம்மன் திருவிழா கோடை காலத்தில் நடப்பது வழக்கம். ஆனால் இங்கு கார்த்திகை மாத இறுதியிலும், மார்கழி மாத தொடக்கத்திலும் மிக சிறப்பாக இத்திருவிழா நடைபெறும். மாநிலத்திலேயே எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீகாளஹஸ்தியில் மட்டுமே 7 கங்கை அம்மன் திருவிழா  நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

7 கங்கையம்மன் திருவிழா முதன் முதலாக கண்ணப்ப நாயனாரின்  தந்தையான  நாகநாதன் நடத்தியதாக கோயில் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிறப்புவாய்ந்த திருவிழா ஸ்ரீ காளஹஸ்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று நள்ளிரவு ஸ்ரீகாளஹஸ்தி முத்தயாலம்மன் கோயில் தெருவில் உள்ள 7 கங்கை அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கங்கையம்மன் வீதியுலா நடந்தது. அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சிறப்பு நடனங்கள் ஆடியும் ஆடு, கோழி போன்றவற்றை கங்கையம்மனுக்கு பலி கொடுத்தும் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

கங்கையம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தி உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் திருமண மண்டபம் அருகில் பொன்னாலம்மன் பெரிய சகோதரியாகவும், பேரிவாரி மண்டபம் அருகில் உள்ள அம்மன் 2வது சகோதரியாகவும், ஜெயராம்ராவ் தெருவில் காவம்மன் 3வது சகோதரியாகவும், சன்னதி வீதி அங்காளம்மன் 4வது சகோதரியாகவும், தேரடி வீதி கருப்பு கங்கையம்மன் 5வது சகோதரியாகவும், பாபு அக்ரஹாரம் அங்கம்மன் 6வது சகோதரியாகவும், கொத்தப்பேட்டை புவனேஸ்வரியம்மன் 7வது  இளைய சகோதரியாகவும் 7 கங்கை  அம்மன்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து நேற்று இரவு பக்தர்களின் உற்சாக  நடனங்களுக்கிடையே மேளதாளம் முழங்க 7 கெங்கையம்மன் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் சொர்ணமுகி  ஆற்றில் நிறைவடைந்து சிலைகளை கரைத்தனர். இத்திருவிழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி டிஎஸ்பி ராமகிருஷ்ணா தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் கங்கையம்மன்கள் ஊர்வலத்தையொட்டி நகருக்குள் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் பைபாஸ் சாலை வழியாக பஸ் நிலையம் வரை போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.

× RELATED அடுத்த மாதம் முதல் கவுனுக்கு குட்பை:...