×

திருவானைக்காவல் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் : ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணதிர பக்தர்கள் பரவசம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயில் 2ம் கட்ட கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் எழுப்பிய ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணதிர கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் முதல் கட்டமாக கடந்த 9ம் தேதி பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 2வது கட்டமாக நேற்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜைகள் கோயில் வளாகத்தில் சுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கின.

நேற்று முன்தினம் இரவு 5ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 6ம் கால யாகபூஜை முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யானை மீது, சிவாச்சாரியர்கள், பக்தர்கள் யாககுண்டத்திலிருந்து புனித நீரை எடுத்து வந்தனர். காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி விமானங்களுக்கும், சுவாமி, அம்மன் மூலஸ்தானங்கள் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அமைச்சர்கள் வளர்மதி, பாண்டியராஜன், கலெக்டர் ராஜாமணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ, சிவ, ஓம் நமச்சிவாய போற்றி என்று விண்ணதிர கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 700 போலீசார் பாதுகாப்பு:  மாநகர போலீஸ் சார்பில் கமிஷனர் அமல்ராஜ், 2 துணை கமிஷனர்கள் தலைமையில் கோயில் உள் மற்றும் வெளிப்புறங்களில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கன்னிமார்தோப்பு, ஒத்த தெரு, நன்று தரும் விநாயகர் கோயில், கார்த்திகேயன் கார்டன் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அவசர உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ அதிகாரி தலைமையில் மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் திருவானைக்காவல் ஆயிரங்கால் மண்டபம் அருகே தயாராக இருந்தது. மாநகராட்சி சார்பில் 100 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 6 இடங்களில் கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது.

Tags : Maha Kumbabhishekam ,Thiruvanaikaval ,Om Namachivaya Chakshatri ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...