×

நெல்லை அருகே பயங்கரம்: சிறுவன் உள்பட 2 பேர் படுகொலை: அண்ணன், தம்பி கைது

நெல்லை: நெல்லை அருகே சுத்தமல்லியில் 13 வயது சிறுவன் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பாழடைந்த கட்டிடம் அருகே வீசப்பட்ட 2 பேரின் உடல்களில் ஒரு உடல் மாயமாகி உள்ளது. இந்த சம்பவம் ெதாடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (58). இவருடைய முதல் மனைவி பாண்டியம்மாள். இவர்களது மகன் மணிகண்டன் (25), மகள் பிரியதர்ஷனி (23). பிரியதர்ஷினிக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. பாண்டியம்மாள் இறந்ததையடுத்து, 2வதாக முருகேஸ்வரி (30) என்ற பெண்ணை நாகராஜ் திருமணம் செய்தார். இவர்களது மகன் சபரீஸ்வரன் (13). இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாண்டியம்மாளின் தம்பி ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை வாடகைக்கு பேசி கோவில்பட்டி மார்க்கெட், நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் ஆகிய 2 மார்க்கெட்டுகளிலும் மொத்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி, லோடு ஆட்டோவில் வைத்து சுத்தமல்லி விலக்கு பகுதியில் மணிகண்டனும், சபரீஸ்வரனும் சில்லறை விற்பனை செய்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிலும், லோடு ஆட்டோவில் தங்கினர். ஓட்டலில் சாப்பிட்டு வந்தனர்.வெங்காயம் விற்றது குறித்து மணிகண்டன் தினமும் தனது தந்தை நாகராஜூக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் கடந்த 8ம் தேதியும் தனது தந்தையிடம் போனில் பேசியுள்ளார். ஆனால் 9ம் தேதி அன்று மணிகண்டனிடம் இருந்து போன் வரவில்லை. இதையடுத்து நாகராஜ், மணிகண்டன் செல்லுக்கு போன் செய்த போது, அது ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து, நெல்லை பகுதியில் உள்ள தன் உறவினர்களை தொடர்பு கொண்டு மணிகண்டனை பற்றி தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். உறவினர்கள் சுத்தமல்லி பகுதியில் மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் தேடிய போது, அவர்கள் வெங்காயத்தை வைத்து விற்ற லோடு ஆட்டோ, சுத்தமல்லி அருகே பாரதியார் நகர் ரயில்வே கேட்டில் கேட்பாரற்று கிடந்ததை பார்த்தனர்.இதுகுறித்து அவர்கள் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுத்தமல்லியை அடுத்த ராஜீவ் நகரைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் சதீஷ்குமார் (23), பார்த்திபன் (22) ஆகிய 2 பேரும் மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகியோரை அடுத்தடுத்து அழைத்துச் செல்வது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் ரயில்வே கேட்டை அடுத்த ராகவேந்திரா கோயில் அருகே உள்ள குன்றில் பாழடைந்த கட்டிடத்தின் அருகே அழுகிய நிலையில் மணிகண்டன் உடலை சுத்தமல்லி போலீசார் மீட்டனர். அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதற்கான தடயங்கள் இருந்தன. அவரது கால்கள் டவலாலும், கைகள் பழைய சேலை துணிகளாலும் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த உடல் அருகே எலும்புகள் சிதறி கிடந்தன. ஆனால் சபரீஸ்வரன் உடலை காணவில்லை. அவர் அணிந்திருந்த சட்டையை போலீசார் கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலையாளிகளான சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோருக்கு மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மூவரும் அடிக்கடி மது அருந்துவது வழக்கம். மணிகண்டனுக்கு வெங்காய வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்துள்ளது. ஆனால் சதீஷ்குமார், பார்த்திபன் வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்காததால் அவர்கள் வியாபாரத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மணிகண்டன் மீது பொறாமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் போதையில் இருக்கும்போது இதுதொடர்பாக தகராறும் ஏற்பட்டுள்ளது.  வெளியூரில் இருந்து வந்தவன் நம்முடன் மோதுகிறானே இவனை தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்று சதீஷ்குமார், பார்த்திபன் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 8ம்தேதி முதலில் மணிகண்டனிடம் நைசாக பேசி மது குடிக்க 2 பேரும் கொண்டாநகரம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மதுவை ஊற்றிக் கொடுத்து, அவரை கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் அவரது தம்பி சபரீஸ்வரனை விட்டுவைத்தால் பிற்காலத்தில் பிரச்னை என கருதினர். அவனையும், உன் அண்ணன் அழைப்பதாகக் கூறி அதே பகுதிக்கு அழைத்து சென்று தீர்த்துக் கட்டியுள்ளனர். பின்னர் 2 பேரின் உடல்களை பிளக்ஸ் போர்டில் கிடத்தி அதன் மீது தார் பாய் போட்டு மூடி, ஹாலோ பிளாக் செங்கல்களை வைத்துள்ளனர். இதில் சிறுவன் சபரீஸ்வரனின் உடலை நாய் இழுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சதீஷ்குமாரும், பார்த்திபனும் கைது செய்யப்பட்டனர்….

The post நெல்லை அருகே பயங்கரம்: சிறுவன் உள்பட 2 பேர் படுகொலை: அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sudtamalli ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...