×

கோஷ்டி சண்டை

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக அடைந்த தொடர் தோல்வியால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், அவரை பதவி விலகச் செய்து விட்டு, சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் நடந்தன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய சூழலில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக பிரிந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் –  எடப்பாடி அணி தனியாக உருவானது. பெரும் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து, தனது பலத்தை காட்ட முயன்ற ஓபிஎஸ்சின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சமாதானத்துக்கு பின் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்ததும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாயினர். ஒன்றாக வலம் வந்தாலும் கூட, இருவரிடையே பனிப்போர் தொடர்ந்தது. இவர்கள் பஞ்சாயத்தை சரி செய்யவே நேரம் போதாத நிலையில், தமிழக மக்களின் நலனைப்பற்றி சிந்திக்கவே இல்லை.டிடிவி.தினகரனுடன் சந்திப்பு, சசிகலா ஆதரவு பேச்சு, பெரியகுளத்தில் ரகசிய கூட்டம் என ஓபிஎஸ், அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அவரை ஒருபுறம் சமாதானப்படுத்த ஆட்களை அனுப்பி விட்டு, மறுபுறம் கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்தியபடியே வந்தார் இபிஎஸ். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் செய்யவில்லை; மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தியதாக தொண்டர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதேபோல, 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் எடப்பாடி தீவிர பிரசாரம் செய்தார். ஆனால், தனது போடி தொகுதியிலே, வெற்றி வாய்ப்பு சிரமம் என்பதை உணர்ந்த ஓபிஎஸ், தொகுதிக்குள்ளேயே வலம் வந்தார். போராடி வெற்றி பெற்ற நிலையில் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தனக்கே தர வேண்டுமென எடப்பாடியுடன் மல்லுக்கட்டினார். ‘‘தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்திருக்கிறேன். தொண்டர்கள் பலம் எனக்கே உள்ளது’’ எனக்கூறி கடைசி நேரத்தில் ஓபிஎஸ்க்கு விபூதி அடித்தார் எடப்பாடி.கட்சிக்குள் இரட்டைத்தலைமை பிரச்னை கொழுந்து விட்டு எரிந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திட்டமிட்டே ஒற்றைத்தலைமை கோஷம் எழுப்பப்பட்டது. ஏற்கனவே, நடந்த கூட்டங்களில், கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில், முதல்வராக இருந்த எடப்பாடி எடுத்த சில முடிவுகளால்தான், தென்மாவட்டங்களில் அதிமுக அதிக இடங்களில் தோற்றது என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் ஓபிஎஸ். தற்போதைய சூழலில் தென்மாவட்டங்களை பொறுத்தவரை ஓபிஎஸ்க்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓபிஎஸ் தலைமையேற்று கட்சியை நடத்திச் செல்ல வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதற்கு முன்னதாகவே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டுமென இருவரும் முடிவு செய்து, கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து வருகின்றனர். தென்மாவட்ட ஆதரவாளர்களையே ஓபிஎஸ் முழுமையாக நம்பி உள்ளார். இவருக்கு ஆதரவாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. எனவே, வரும் 23ம் தேதி பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு, விரிசல் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமில்லை….

The post கோஷ்டி சண்டை appeared first on Dinakaran.

Tags : Goshti Fights ,O.O. Bannerselvam ,Goshti Fight ,Dinakaran ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும்...