×

ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோமவார விரத வழிபாடு

திருமலை: ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோமவார விரதத்தையொட்டி கோயில்களில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் வரும் சோமவார திங்கட்கிழமைகளில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் 4வது சோமவாரமான நேற்று காலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், தெப்பக்குளத்தின் அருகே தேங்காய், நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றால் விளக்கு ஏற்றி குளத்தில் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதவிர கோயில் வளாகத்தில் உள்ள நாக தேவதை சிலைகள் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பக்தர்களும் பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் இட்டு, பயபக்தியுடன் வழிபட்டனர். இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் காலை முதலே சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தில் கோலமிட்டு மாவிளக்கில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.

Tags : Srikalahasti ,Karthikai Somavara ,Tirupati ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்