×

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் கார்த்திகை பெருவிழா

சோளிங்கர்: சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் நடந்த கார்த்திகை பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் சோளிங்கர் அமிர்தபலவல்லி தாயார் சமேத யோக நரசிம்மசுவாமி தலமமும் ஒன்று. இங்கு ஒரே குன்றால் ஆன பெரிய மலை மீது யோக நரசிம்மரும், இதன் எதிரில் சிறிய மலை மீது யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறனர். தான் யோகநிஷ்டையில் இருப்பதால், பக்தர்களுக்கு வரம் தரும் பணியை யோக ஆஞ்சநேயர் கவனித்துக் கொள்வதாக ஐதீகம்.

இதற்காகவே தனது சங்கு, சக்கரத்தை ஆஞ்சநேயரிடம் நரசிம்மர் வழங்கியுள்ளதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால் பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின்னர் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்க வேண்டும். அப்போதுதான் இங்கு வந்த பலனை பெற முடியும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க யோக நரசிம்மர் ஆண்டு முழுவதும் கண்களை மூடி யோகநிஷ்டையில் அருள்பாலிக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனாலேயே இக்கோயிலில் கார்த்திகை மாத ெபருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இம்மாதம் முழுவதும் விசேஷ திருமஞ்சனமும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை பெருவிழா கடந்த 18ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் மூன்றாவது வார விழா நேற்று நடந்தது. 3வது வாரமாக நேற்று 2ம் தேதி அதிகாலை பெரிய மலை யோக நரசிம்மருக்கும், சிறிய மலை யோக ஆஞ்சநேயருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 4 மணிக்கு மேல் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் உற்சவர் புறப்பாடு நடந்தது.

இதில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தக்கான் குளத்தில் நீராடியும், மொட்டையடித்தும் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் இரண்டு மலைகளிலும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டவாறு மலை மீது ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருமணம் தடை விலக வேண்டி பல பெண்கள் மஞ்சள் கிழங்குகளுடன் மலைமீது கோயிலை 108 முறை வலம் வந்து வழிபட்டதுடன், பலர் அங்க பிரதட்சணமும் செய்தனர்.

கார்த்திகை விழாவுக்காக கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags : Vaishnavite Dynasty ,Shiva Lingar Yogi Narasimha Temple Karthikai Perumalai ,
× RELATED தெளிவு பெறுவோம்