மதுரை: மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகர்கோவில் மலையில் உள்ளது பழமுதிர்ச்சோலை. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மூலவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்ளார். முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. தல மரமாக நாவல் மரம் உள்ளது. கோயிலுக்கு ெகாடிமரம் உள்ளது. நக்கீரர், அருணகிரிநாதர், அவ்வையார் ஆகியோர் இங்குள்ள மூலவரை துதித்து பாடியுள்ளனர்.இந்த கோயில் அருகில் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ‘நூபுர கங்கை’ என்று அழைக்கப்படும் சுவையான நீர் தரும் சுனை உள்ளது. மலையடிவாரத்தில் கள்ளழகர் கோயில் உள்ளது.தல வரலாறு: பழமுதிர்ச்சோலை சுப்பிரமணிய சுவாமி கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் தெரியவில்லை. பண்டைய காலத்தில் பழமுதிர்ச்சோலை வழியாக மதுரைக்கு நடந்து வந்த அவ்வையார், களைப்பு காரணமாக வழியில் இருந்த ஒரு நாவல் பழ மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அந்த மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவனிடம், நாவல் பழங்களை பறித்து தரும்படி அவ்வையார் கேட்டுள்ளார். அந்த சிறுவன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டுள்ளான். அவ்வையாரோ சுட்ட பழத்தையே பறித்து தரும்படி கூறியுள்ளார்.இதையடுத்து மரத்தின் கிளையை ஆட்டிய சிறுவன், அதிலிருந்த பழங்கள் உதிர்ந்து மண்ணில் விழும்படி செய்துள்ளான். பழங்களை எடுத்த அவ்வையார், அவற்றில் படிந்திருந்த மண்ணை அகற்ற வாயால் ஊதியுள்ளார். இதனை பார்த்த சிறுவன், ‘‘பாட்டி நாவல் பழங்கள் சுடுகிறதா?’’ என்று கேட்டுள்ளான்.இதனால் ஆச்சரியமடைந்த அவ்வையார், சிறுவன் உருவில் வந்திருப்பது முருகப்பெருமான் என்பதை உணர்ந்தார். மேலும் உலக உயிர்கள் அனைத்தும் பழங்களாகும். அவற்றின் மீது பாச, பந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனை போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்தவே முருகப்பெருமான், சிறுவனாக வந்து தனக்கு உணர்த்தியதை அவருக்கு தெரியவந்தது என்பது புராணம்.விசேஷங்கள்: தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும்.திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகின்றனர். பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் தான் நாவல் மரங்களில் பழங்கள் பழுக்கும். ஆனால் இங்குள்ள நாவல் மரத்தில் ஐப்பசி மாதத்தில் பழங்கள் பழுக்கும் அதிசயத்தை காணலாம். கோயில் நடை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்….
The post திருமணத் தடை போக்கும் பழமுதிர்ச்சோலை முருகன் appeared first on Dinakaran.