×

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)

மகாபாரதத்தில் பதினேழாம் நாள் யுத்தம். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும் போர் நிலவிக் கொண்டிருந்த வேளையில் கர்ணனின் தேர்ச்  சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது. “நான் தேர்ச் சக்கரத்தை விடுவிக்கிறேன். அதன் பின் போரைத் தொடருவோம். அதுவரை என்னைத்  தாக்காதே அர்ஜுனா!” என்றான் கர்ணன்.

ஆனால் கண்ணபிரான், “அர்ஜுனா! இது தான் சரியான சந்தர்ப்பம். நீ உன் கணைகளைத் தொடுத்து அவனைக் கொல்!” என்றார்.  பாணத்தைப் பிரயோகிக்கத் தயாரானான் அர்ஜுனன். அப்போது கர்ணன், “அர்ஜுனா! நில்! இது தர்மமாகுமா?  கொஞ்சம் பொறு!” என்றான்.  கண்ணன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா! உனக்குக் கூட தர்மம் என்ற சொல் இருப்பது தெரியுமா? தர்மத்தைப் பற்றி நீ இப்போது  பேசுகிறாயே! சிறுவயதில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து பீமனுக்கு விஷம் வைத்த போது நீ கூறும் தர்மம் எங்கே போனது? அரக்கு  மாளிகையில் பாண்டவர்களை எரிக்கத் திட்டமிட்ட போது நீ கூறும் தர்மம் எங்கே போனது? பொய்ச்சூதில் பாண்டவர்களை வீழ்த்தியபோது  உன் தர்மம் எங்கே போனது? அபலைப் பெண்ணான திரௌபதியைச் சபை நடுவே அவமானப்படுத்திய போது இந்தத் தர்மத்தைப் பற்றி நீ  பேசினாயா?

இதிலெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்க்காதே! துரியோதனன் செய்த ஒவ்வொரு தவறின் போதும் நீயும்  உடனிருந்தாய்! பதின்மூன்று வருடங்கள் தண்டனை முடிந்த பிறகும் பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தர மறுத்தீர்களே! அப்போது தர்மம்  எங்கே போனது? சிறுவனான அபிமன்யுவைச் சக்கர வியூகத்துக்குள் வைத்துப் பலர் தாக்கிக் கொன்றீர்களே! அப்போதெல்லாம் தர்மம் என்ற  ஒன்று இருப்பது உனக்குத் தெரியவில்லையா? உனக்குத் தேவையான சூழ்நிலைகளில் மட்டும் தர்மத்தைப் பற்றிப் பேசுவாய்,  தேவையில்லாத சூழ்நிலைகளில் தர்மத்துக்கு விரோதமாகச் செயல்படுவாய்! இதுதானே உன் கொள்கை?” என்றான்.

மேலும், “அர்ஜுனா! திரௌபதி என்னும் அபலைப் பெண் அன்று அவமானப்பட்டபோது அவளுக்கு உண்டான வலியையும், அபிமன்யு என்ற  சிறுவன் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது அவனுக்கு உண்டான வலியையும் இவன் உணர வேண்டுமென்றால் இப்போது  நிராயுதபாணியாக நிற்கும் போது இவனைத் தாக்க வேண்டும். அதுவே இவனுக்குச் சரியான தண்டனை!” என்றான் கண்ணன். அர்ஜுனன்  எய்திய பாணம் கர்ணனின் கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ந்தது. கர்ணன் மாண்டு போனான். (கர்ணனின் உயிர்  பிரியாமல் அவனது புண்ணியங்கள் காத்ததாகவும், அந்தணர் வடிவில் கண்ணன் வந்து அந்தப் புண்ணியங்களைத் தானம் வாங்கியதாகவும்  பிரசித்தியாகச் சொல்லப்படும் கதை வியாச பாரதத்தில் இல்லை.)

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம், “தந்தையே! நான் என் நண்பன்  துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை  வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே.  நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய  தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன். “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில்  விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக்  கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய். தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான். அதற்காக இரணியனின்  பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து  பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின் ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? மகனே! சாமானிய  தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும்  சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும். அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான  விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள். கர்ணனுக்கு சூரியன்  உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்  102-வது திருநாமம். “வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான  சூழ்நிலைகளில் நாம்  சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.

103. அமேயாத்மநே நமஹ (Ameyaathmane namaha)

பிரகலாதனின் சரித்திரம் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே! “நானே கடவுள்” என்று கூறிக் கொண்டிருந்தான் இரணியன் என்னும்  அசுரன். அவனது மகனான பிரகலாதன், சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரித்துக்  கொண்டிருந்தான். “நீ நாராயணனை வணங்காதே, என்னைத் தான் வணங்க வேண்டும்! ‘இரண்யாய நமஹ’ என்று சொல்!” என்று  எச்சரித்தான் இரணியன். அதை மறுத்த பிரகலாதனைப் பலமுறை கொல்ல முயன்றான் இரணியன்.

ஆனால், ஒவ்வொரு முறையும் திருமால் பிரகலாதனைக் காத்தார். இறுதியாக “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?” என இரணியன்  கேட்க, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன்!” எனப் பிரகலாதன் சொல்ல, இரணியனும் தன் அரண்மனையில் ஒரு தூணை இரணியன்  கதையால் தட்டிய போது, அதைப் பிளந்து கொண்டு நரசிம்மர் தோன்றி இரணியனை வதைத்தார் என்பது பல புராணங்களில் நாம் காணும்  பிரகலாத சரித்திரம்.

ஆனால், விஷ்ணு புராணத்தில் மட்டும் பராசர மகரிஷி இந்தச் சரித்திரத்தைச் சற்று வித்தியாசமாக வர்ணித்துள்ளார்: பிரகலாதனைக்  கொல்ல எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியடைந்த இரணியன், முடிவாக அவனை ஒரு பாறையோடு சேர்த்துக் கட்டிக்  கடலில் வீசத் திட்டமிட்டான். திட்டமிட்டபடி மலைக்குன்றின் மேல் பிரகலாதனை நிறுத்திப் பெரிய பாறையுடன் அவனைக் கட்டிவிட்டு,  “அடேய்! முடிவாகக் கேட்கிறேன். ‘இரண்யாய நமஹ’ என்று சொல்வாயா? மாட்டாயா?” என்றான். பிரகலாதனோ எப்போதும் போல  “நாராயணாய நமஹ” என்றான். பாறையோடு சேர்த்து அந்தக் குன்றிலிருந்து கடலை நோக்கி அவனைத் தள்ளினான்.

ஆனால் நரசிம்மர் தனது இரு கரங்களாலும் பிரகலாதனைத் தாங்கிப் பிடித்தார். அவனது கட்டுக்களை எல்லாம் அவிழ்த்தார். “குழந்தாய்!  உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “என் தந்தை திருந்தி நல்லவராக மாற வேண்டும்! தினமும் என்னுடன் இணைந்து  அவரும் உனக்குப் பூஜை செய்ய வேண்டும். அவரும் நாம சங்கீர்த்தனம் செய்ய  வேண்டும்!” என்றான் பிரகலாதன்.

இந்நிலையில் தந்தையின் பாசம்  பிரகலாதனுக்கு முக்கியம் எனக் கருதினார் நரசிம்மர். ஆனால் இரணியனைத் திருத்தி அவனை ஒரு  பக்தனாக உருவாக்குவது என்பது நடக்காத காரியம். அதே சமயம் பிரகலாதன் கேட்ட வரத்தையும் மறுக்க நரசிம்மருக்கு மனம்  வரவில்லை. அதனால் நரசிம்மர் ஒரு லீலை செய்தார். தானே இரணியனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு பிரகலாதனிடம் வந்தார்.  தன்னை இறைவன் என்று காட்டிக் கொள்ளாமல், மனம் மாறிய இரணியனாகவே அவனிடம் காட்டிக் கொண்டார். தந்தையின் அன்பை  முழுவதுமாக அவன் மேல் பொழிந்தார். தினமும் அவனுடன் இணைந்து திருமாலுக்குப் பூஜை, நாம சங்கீர்த்தனம் அனைத்தும் செய்து,  அவனைப் போலவே பக்தனாக வாழ்ந்து அவனை மகிழ்வித்து வந்தார்.

மற்றொரு புறம், நிஜ இரணியனின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மராகத் தோன்றி அந்த  இரணியனை வதம் செய்தார்.இவ்வாறு திருமாலே பிரகலாதனை மகிழ்விக்க இரணியனாகவும், இரணியனை வதைக்க நரசிம்மராகவும் இரு  அவதாரங்கள் எடுத்தார் என்று விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷி மறைமுகமாக வர்ணித்துள்ளார் என அடியேனுடைய குருவான  ஸ்ரீமதுபயவே. Dr. கருணாகரார்ய மஹாதேசிகன் விஷ்ணு புராண காலக்ஷேபத்தில் விளக்கியுள்ளார்.

பிரகலாதனை மகிழ்விக்கும் பொருட்டு நரசிம்மராக மட்டுமல்ல, இரணியனாகக் கூட திருமால் அவதாரம் செய்தார் என்பதை  நோக்குகையில் தன் அடியவர்கள் மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இவ்வாறு எல்லையில்லாத  கருணையைத் தன் அடியார்கள் மேல் காட்டுவதால் திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப் படுகிறார். அதுவே விஷ்ணு  ஸஹஸ்ரநாமத்தின்  103-வது திருநாமம்.  “அமேயாத்மநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் திருமாலின் அளவற்ற  கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

104. ஸர்வ யோக விநிஸ்ருதாய நமஹ (Sarvayogavinisruthaaya namaha)

சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் திருவரங்கத்துக்கு வந்தார். வண்டினம் ரீங்கரிக்கும் சோலை,  மயிலினம் ஆடும் சோலை, கொண்டல் மீதணவும் சோலை, குயிலினம் கூவும் சோலையான அரங்கத்தில் பள்ளிகொண்ட அண்டர்  கோனான அணி அரங்கனைத் தரிசித்தார். அங்கே பராசர பட்டரின் வம்சத்தில் தோன்றிய ஒருவர், விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்கு பகவத்  குண தர்ப்பணம் என்ற பெயரில் பராசர பட்டர் அருளிய விளக்கவுரையை மகாபிரபுவுக்கு வழங்கினார். அடியேன் இந்தத் தொடர்  முழுவதையும் அந்த விளக்கவுரையின் துணைகொண்டு தான் எழுதுகிறேன் என்பது இவ்விடத்தில்  நன்றியுடன் நினைவுகூறத்தக்கது. அந்த  விளக்கங்களைப் படித்து வியந்து போனார் மகாபிரபு. அந்தப் புத்தகத்தை அரங்கன் தனக்குத் தந்த பரிசாகவே கருதினார்.

பூரி ஜகந்நாதரைப் போலவே திருவரங்கத்திலும் ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த மகாபிரபு, ஜகந்நாதரை வழிபட அந்தக்  கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்பவர் ஜகந்நாதப் பெருமாளுக்கு நித்திய பூஜைகளைச் செய்து வந்தார். அவருக்கு  வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.  ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர்.

பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார். அதனால் நிசாகர் தாஸுக்குப் பின் அவரது மகனான  ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள். சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன்  அவரை வரவேற்றார். மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள்.  அர்ச்சனையைத் தொடங்கிய ஹிமாம்சு “விச்வாய நமஹ”, “விஷ்ணாய நமஹ” என்றார். “நிறுத்துங்கள்!” என்றொரு ஒலி. திடுக்கிட்டுத்  திரும்பிப் பார்த்தார் ஹிமாம்சு.

மகாபிரபுவின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீரங்கதாஸ் எழுப்பிய ஒலி என உணர்ந்தார் ஹிமாம்சு. ஸ்ரீரங்கதாஸ் வடமொழி இலக்கண  இலக்கியங்களில் பெரிய மேதை. “ஹிமாம்சு! ‘விஷ்ணவே நமஹ’ என்று சொல்வது தான் இலக்கணப் படிச் சரி! ‘விஷ்ணாய நமஹ’  என்பது தவறு. விபக்தியைச் சரியாகப் பயன்படுத்து!” என்றார். (வடமொழியில் வேற்றுமை உருபுக்கு விபக்தி என்று பெயர்.)

ஹிமாம்சு, “உங்கள் அளவுக்கு நான் இலக்கணம் கற்கவில்லை. என் தந்தை எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத்  தினமும் சொல்லி வருகிறேன். ஜகந்நாதனும் இதை ஏற்று எனக்கு அருள்புரிந்து கொண்டு தான் இருக்கிறார்!” என்று பணிவுடன் கூறினார்.  ஆனாலும் அங்கிருந்த பல பண்டிதர்கள் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. “விபக்தியில் தவறு செய்து விட்டாய்!” என ஹிமாம்சுவை  இகழ்ந்தார்கள்.

அப்போது குறுக்கிட்ட மகாபிரபு, “மேதைகள் சரியான விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள். பேதைகள் தவறான விபக்தியுடன் அர்ச்சனை  செய்வார்கள். ஆனால், இறைவனோ அந்த விபக்தியைப் பார்ப்பதில்லை, பக்தியைத் தான் பார்க்கிறான். உண்மையான பக்தியோடு செய்யும்  அர்ச்சனையில் எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான்!” என்றார். இதை ஒரு ஸ்லோகமாகவே இயற்றி  விட்டார் மகாபிரபு... “மூர்க்கோ வததி விஷ்ணாய புதோ வததி விஷ்ணவே | உபயோஸ்து பலம் துல்யம் பாவக்ராஹீ ஜநார்தந: ||”

மேலும், “இதை நானாகச் சொல்லவில்லை. திருவரங்கநாதனின் கோயிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கப் புத்தகம் எனக்குக்  கிடைத்தது. அதில் 104வது திருநாமமான ‘ஸர்வயோக விநிஸ்ருதஹ’ என்ற திருநாமத்தை விளக்குகையில் பராசர பட்டரே இக்கருத்தைக்  கூறியுள்ளார். அதாவது, சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நெறிகளைப் பின்பற்றுபவர்கள் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். ஆனால், அந்த  விதிகளை அறியாதவர்கள், உண்மையான பக்தியுடன் தங்களால் இயன்ற முறையில் இறைவனை வழிபட்டாலும் அவர்களுக்கும்  இறைவனின் அருள் நிச்சயம் கிட்டும் என்று பட்டர் விளக்கியுள்ளார்!” என்றார் மகாபிரபு.

‘யோகம்’ என்றால் மார்க்கம் என்று பொருள். ‘ஸர்வ யோகம்’ என்றால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத  அனைத்து  மார்க்கங்களையும் குறிக்கும். அந்த அனைத்து மார்க்கங்களாலும் அடையப் படுவதால் திருமால் ‘ஸர்வயோக  விநிஸ்ருதஹ’  என்றழைக்கப்படுகிறார்.

“ஸர்வயோக விநிஸ்ருதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் பூஜைகள் அனைத்தையும் திருமால் உகந்து  ஏற்றுக் கொள்வார்.

105. வஸவே நமஹ (Vasave namaha)

திருவரங்கத்தில் நம்பெருமாள் அரையர் என்ற அரையர் வாழ்ந்து வந்தார். அவர் ஆழ்வார்களின் பாசுரங்களை அபிநயம் பிடித்து இசையுடன்  பாட வல்லவர். அவருக்கு வெற்றிலைப் பாக்கு உபயோகிக்கும் பழக்கம் உண்டு. வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள்ளேயே தான் தினசரி  பூஜை செய்யும் சாளக்கிரமாப் பெருமாளையும் வைத்திருந்தார்.அவருக்கு வயதாக வயதாகப் பார்வை மங்கிக் கொண்டே போனது. அதனால்  கொட்டைப் பாக்குக்கும் சாளக்கிராமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிற்று. தினமும் கொட்டைப் பாக்கு என்று நினைத்துக் கொண்டு  சாளக்கிராமத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விடுவார்.

அப்புறம் அதைக் கடிக்க முடியாமல் வெளியே  துப்பியபின், அது சாளக்கிராமம் என உணர்ந்து அதன் பின் கொட்டைப் பாக்கை எடுத்து  வாயில் போட்டுக் கொள்வார். திருவரங்கத்திலே வாழ்ந்த ஆராவமுதாழ்வான் என்ற பக்தர் ஒருநாள் அரையர் இவ்வாறு செய்வதைக் கண்டு  திடுக்கிட்டுப் போனார். அரையரிடம் சென்று, “தாங்கள் இவ்வாறு செய்யலாமா? இது தகுமா? சாளக்கிராமத்தை வெற்றிலைப் பாக்குப்  பெட்டியில் வைக்காமல் வீட்டுப் பூஜை அறையிலாவது வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றார். அரையரோ, “நான் எங்கு சென்றாலும்  இந்தப் பெட்டியுடன் தான் செல்வேன்.

 அதனால் இந்தப் பெட்டிக்குள்ளேயே நான் பூஜை செய்யும் சாளக்கிராமத்தை வைத்துக் கொள்வது தான் எனக்கு வசதியாக உள்ளது!”  என்றார். “சுவாமி! இது பெரும் பாவம். இறைவனின் மேல் நம் எச்சில் படலாமா? அந்த சாளக்கிராமத்தைத் தயவுசெய்து என்னிடம் தந்து  விடுங்கள். நான் என் வீட்டில் வைத்துப் பூஜை செய்கிறேன்!” என்றார் ஆராவமுதாழ்வான். அரையரும் அவரிடமே வழங்கிவிட்டார்.

பெருமாளை அரையரிடமிருந்து காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தியுடன் அந்தச் சாளக்கிராமத்தை வீட்டுப் பூஜை அறையில் வைத்துச்  சிறப்பான முறையில் பூஜை செய்து, நிறைய பிரசாதங்களும் நிவேதனம் செய்தார் ஆராவமுதாழ்வான். திருப்தியுடன் அன்றிரவு உறங்கச்  சென்றார். அவரது கனவில் தோன்றிய பெருமாள், “என்னை ஏன் இப்படிச் சிறைபிடித்தாய்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார். “என்ன  சொல்கிறாய்?” என்று கேட்டார் ஆராவமுதாழ்வான். “ஆம்! அந்த அரையரின் வாய் எப்போதும் திருவாய்மொழி பாசுரங்களைப் பாடிக்  கொண்டிருக்கிறது.

அத்தகைய வாயின் எச்சிலில் நனைய வேண்டுமென ஆசைப்பட்டு அவரது வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள் கொட்டைப் பாக்கு போன்ற  வடிவத்துடன் சாளக்கிராமமாக நானே போய் அமர்ந்து கொண்டேன். தினமும் திருவாய்மொழி ஓதும் அதராம்ருதத்தில் தினமும்  திருமஞ்சனம் கண்டருளினேன். அதைத் தடுத்து இப்படி உன் வீட்டில் என்னைச் சிறைவைத்து விட்டாயே!” என்றார் பெருமாள்.

திகைத்துப் போன அந்த பக்தர், அடுத்த நாள் காலை சாளக்கிராமத்தை எடுத்துக் கொண்டு அரையரிடம் சென்றார். “என்னை மன்னித்து  விடுங்கள் சுவாமி உங்களிடம் இருந்து பெருமாளைக் காப்பாற்றுவதாக எண்ணி நான் கொண்டு சென்றேன். ஆனால், பெருமாள் உங்களிடம்  இருக்கவே விரும்புகிறார்!” என்று சொல்லி அவரிடமே சாளக்கிராமத்தை ஒப்படைத்தார். இவ்வாறு, தன் அடியார்களிடம் எவ்வளவு  குறைகள் இருந்தாலும், தோஷங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறார் திருமால்.  ‘வஸு:’ என்றால் வசிப்பவன் என்று பொருள். தன் அடியார்களுடன் மிகுந்த ஆசையுடன் வசிப்பதால் திருமால் ‘வஸு:’ என்று  அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 105-வது திருநாமம்.“வஸவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்   அடியார்களுடன் எப்போதும் திருமால் எழுந்தருளியிருப்பார்.

திருக்குடந்தை டாக்டர் உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Anandan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!