×

புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் : திரளானோர் பங்கேற்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர். கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலயத் திருவிழா வரும் ஜனவரி 2ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருச்சி புனிதபவுல் குருமடம் அந்தோணிசாமி திருக்கொடியை அர்ச்சித்து ஏற்றினார். புளியம்பட்டி அதிபரும், பங்குப் பணியாளருமான மரியபிரான்சிஸ் திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுறையாற்றினார். சங்கர்நகர் பங்குப்பணியாளர் ஜோசப்ராஜ் மறையுறையாற்றினார்.

விழாவில் வடக்கு வண்டானம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள் திரளாகப் பங்கேற்று புனித சவேரியாரை வணங்கினர். விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு புதுநன்மை மற்றும் திருமுழுக்கு விழாவும், மாலை 5.30 மணிக்கு புனித சவேரியார் பல்நோக்கு அரங்கம் திறப்பு விழாவும், மாலை 6.30 மணிக்கு பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான ஜனவரி 2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலியும், சவேரியாரின் தேர்பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் பங்குப்பணியாளர் அருள்நேசமணி மற்றும் இறை மக்கள் செய்துள்ளனர்.

இதே போல் சாத்தான்குளம் அருகே சி.சவேரியார்புரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம்  மாலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 3ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவிழாவையொட்டி முதல் நாள் காலை 6.30 மணிக்கு உதவித்தந்தை லடிஸ்லாஸ் தலைமையில் அன்பியங்கள், திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறை வட்ட வட்டார முதன்மைகுரு ரெமிஜியுஸ் தலைமையில் செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜோ, சென்னை கோல்டன் ஜார்ஜ் நகர் திருத்துவ ஆலய உதவி பங்குத்தந்தை அசோக், நாங்குநேரி உதவித்தந்தை அந்தோனிராஜன் முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

2ம் நாளான நேற்று காலை 6.30மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிககு வள்ளியூர் வி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குநர் அன்புசெல்வன் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8ம் திருநாளான டிச. 1ம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பல்வேறு பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். 9ம் திருநாளான டிச. 2ம் தேதி காலை 7 மணிக்கு பங்குத்தந்தைகள் அற்புதசேவியர், லடிஸ்லாஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30மணிககு தூத்துககுடி மறை மாவட்ட தலைமை செயலர் நார்பட் தலைமையில் ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நற்கருணை பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் மறை வட்ட முதன்மை குரு ஆல்வரஸ் ஜெபஸ்டின் மறையுரை வழங்குகிறார்.

இதில் பங்குத்தந்தைகள் டக்ளஸ், ஜோ, அந்தோனிராஜன், குழந்தைராஜன், அற்புதசேவியர், ஜான்பால்லோபோ முன்னிலை வகிக்கின்றனர். இரவு 10.30 மணிக்கு புனிதரின் அலங்காரத் தேர்பவனி நடக்கிறது. 10ஆம் நாளான டிச. 3ம் தேதி அதிகாலை 5மணிக்கு பங்குத்தந்தை அற்புதசேவியர் தலைமையில் தேரடி திருப்பலி, 7 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இதில், அணைக்கரை பங்குத்தந்தை ஸ்டாலின் மறையுரையாற்றுகிறார். திருப்பலி முடிந்ததும் அசன அறைமண்டபம் அடிக்கல் நாட்டு விழா, மதியம் 1.30 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி , மாலை 6.30மணிக்கு பத்திநாதபுரம் பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் தேரடி திருப்பலி, புனித சவேரியார் நவநாள் ஜெபம், திருமணி ஆராதனை, நோயாளிகள் மந்திரிப்பு, திருத்தைலம் பூசுதல் நடக்கிறது. இதில் நாங்குநேரி பங்குத்தந்தை மணி மறையுரை வழங்குகிறார். டிச. 4ம்தேதி மாலை 6.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் தலைமையில் அருட்சகோதரிகளும், கிறிஸ்தவர்களும் செய்து வருகின்றனர்.

Tags : Holy Sovereign Festival Celebration: Mass ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?