×

திருப்பதி கோயிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் : ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை வனபோஜன உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் ஊஞ்சல், சகஸ்கர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கார்த்திகை மாதத்தையொட்டி நேற்று திருமலையில் கார்த்திகை வனபோஜன உற்சவம் தேவஸ்தானம் சார்பில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் இருந்து நேற்று  காலை மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.

தொடர்ந்து காலை 8 மணிக்கு சின்ன கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி வாகன மண்டபத்தில் இருந்து பார்வேட்டை மண்டபத்திற்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். மேலும், இதேபோன்று ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் ரங்கநாதர்  மண்டபத்தில் இருந்து பார்வேட்டை மண்டபத்திற்கு பல்லக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு தலைமையில் ஜீயர்கள் முன்னிலையில் பார்வேட்டை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.தாலபாக்க அன்னமாச்சாரியாவின் பெரிய மகன் திருமலாச்சாரி 16ம் நூற்றாண்டில் இந்த உற்சவத்தை ஏழுமலையான் கோயிலில் நடத்தியதாக சரித்திர ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலபோக்கில் கைவிடப்பட்ட  இந்த உற்சவத்தை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2010ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை வனபோஜன உற்சவம் நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றது.  திருமஞ்சனத்திற்கு பிறகு பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து வனப்பகுதியில் உணவு சாப்பிட்டனர். அப்போது, இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சாரியா திட்டத்தின் சார்பில் பக்தி சங்கீர்த்தனைகள் நடந்தது. கார்த்திகை வனபோஜன உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

Tags : festival ,Karthikai Vanapoja ,Tirupati temple ,Sridevi ,Sameetha Malayyappa Swamy ,Bhoodevi Special Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...