×

கிராம சேவை மைய கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள்; பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ஊராட்சி கண்ணுமேய்க்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1991-92ம் ஆண்டு இப்பள்ளி கட்டப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 45க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இப்பள்ளி போதிய பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதனால் பள்ளியின் மேற்கூரை கான்கிரீட் கட்டிடம் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே ஆபத்தான நிலையில் இருந்தது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் விரிசல் விட தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போதே, சேதமடைந்த மேற்கூரை கட்டிடத்தின் கலவை பெயர்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. இதையடுத்து கடந்த மே மாதம் வரை பள்ளி வளாக மரத்தடியிலேயே வகுப்புகள் நடந்தது.இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கண்ணுமேய்க்கிபட்டியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்திற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடம் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சேவை மைய கட்டிடத்தில் ஒரு அறை மட்டுமே பள்ளி மாணவர்கள் கல்வி பயில இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய இடவசதி இல்லாமல் கட்டிடத்தில் வராண்டாவில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த சேவை மைய கட்டிடத்தை சுற்றி நிழல் தரும் மரங்கள் ஏதும் இல்லை. இதனால் கடும் வெயிலின் தாக்கம், கட்டிடத்தின் வராண்டாவில் அமர்ந்திருக்கும் மாணவர்களை தாக்குகிறது. இதனால் வெயிலின் கொடுமையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே மாணவர்கள் கல்வி பயில போதிய இடவசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், சேதமடைந்த பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் இப்பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பள்ளி பூட்டு போடப்பட்டுள்ளதால் இப்பகுதி இளைஞர்கள் பள்ளி வளாகத்தை கிரிகெட் மைதானமாக மாற்றி விளையாடி வருகின்றனர். எனவே இப்பகுதி மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் கட்ட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post கிராம சேவை மைய கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள்; பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Kannumeikkipatti ,Karikali panchayat ,Dinakaran ,
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...