×

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி கோயில்களில் கைசிக ஏகாதசி திருவிழா

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, ஆழ்வை ஆதிநாதர் பெருமாள் கோவில்களில் கைசிக ஏகாதசி திருவிழா நடந்தது. நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச ஏகாதசி விரதமிருந்து துவாதசி அன்று கைசிக புராணம் வாசித்தல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான கைசிக ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு காலை 7மணிக்கு விஸ்வரூபம், 8மணிக்கு மூலவர் பால்திருமஞ்சனம், 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் அதன்பின்பு உற்சவர் கள்ளபிரான் ஸ்ரீதேவி, பூதேவி, தனித்தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாத நாயகி ஆகியோருடன் சயனகுறட்டிலும், பக்கவாட்டில் ஆழ்வார்ஆதிகள், ராமானுஜர், மணவாள மாமுனிகளும் எழுந்தருளினர்.

தொடர்ந்து திருவாதாராதனம் நடைபெற்று புராண ஏட்டினை சுவாமி பாதத்தில் வைத்து கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கைசிக புராணம் படித்தார். இதில், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், கண்ணன், அர்ச்சகர்கள் வாசு பட்டர், ரமேஷ், ராமானுஜம், சீனு, மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோன்று நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கைசிக ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவினை முன்னிட்டு உற்சவர் பொலிந்துநின்ற பிரான், ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சயனகுறட்டில் எழுந்தருளினார். மதுரகவி வம்ச அண்ணாவி பாலாஜி கைசிக புராணம் படித்தார். இதில், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kailasika Ekadasi Festival ,temples ,Alwarthirunagiri ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு